PUBLISHED ON : ஜூன் 29, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பால் - தண்ணீர் வித்தியாசம்
பால் கொதித்தால் பொங்குகிறது. தண்ணீர் அப்படி ஆவதில்லை. இதற்கு காரணம் பால் கொதிக்கும்போது அதிலுள்ள கொழுப்பு, புரதம் போன்றவை அடர்த்தி குறைவு என்பதால் பாலின் மேற்புறத்தில் பாலாடையாக படர்கின்றன. இது பாலில் உள்ள நீர் கொதிநிலையை அடைந்ததும் நீராவியாக மேலே எழுவதை தடுக்கிறது. எனினும் அடர்த்தி குறைவான நீராவி, பாலாடையை தள்ளி மேலே எழும்பி வெளியேறுகிறது. இதைத்தான் 'பால் பொங்குகிறது' என்கிறோம். அடுப்பின் வெப்பத்தைக் குறைத்தால் நீர் கொதிநிலையை அடையும் வேகம் குறைந்து பொங்குவது அடங்கும்.
தகவல் சுரங்கம்
தேசிய புள்ளியியல் தினம்
இந்திய புள்ளியியல் துறைக்கு முக்கிய பங்களிப்பு வழங்கியவர் விஞ்ஞானி, புள்ளியியல் அறிஞர் பிரசந்த சந்திர மகிலனோபிஸ். இவர் 1893 ஜூன் 29ல் கோல்கட்டாவில் பிறந்தார். 1931ல் இந்திய புள்ளியியல் நிறுவனத்தை தொடங்கினார். இது மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை வடிவமைக்க, கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு ஒரு சிறந்த ஆலோசனை மையமாக திகழ்கிறது. புள்ளி விபரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், மகிலனோபிஸ் சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினம் ஜூன் 29 தேசிய புள்ளியியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.