PUBLISHED ON : ஜூன் 16, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
பென்சில் தயாரிப்பது எப்படி
கிராபைட் எனும் கார்பன் கரியால் பென்சில் தயாரிக்கப்படுகிறது. இது படிக வடிவம் கொண்டது. தட்டுகளை அடுக்கி வைத்துள்ளது போல, பேப்பரில் எழுதும்போது, கிராபைட் தட்டு ஒவ்வொன்றாகப் பேப்பரில் படிகிறது. அழிப்பானால் அழிக்கும்போது பேப்பரில் அந்த அடுக்கு அகற்றப்படுவதால் எழுத்துகள் அழிகின்றன. அழிப்பான்கள் பெரும்பாலும் இளஞ்சிவப்பு, வெள்ளை நிறத்தில் இருக்கும். இவை பிளாஸ்டிக், ரப்பர் போன்ற பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை மென்மையாக இருப்பதால், தாள்களுக்குக் குறைவான சேதமே ஏற்படுகிறது.
தகவல் சுரங்கம்
உலக தந்தையர் தினம்
தன்னலம் பார்க்காமல் குடும்பத்துக்காக உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 16) உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவின் வாஷிங்டனில் 1909ல் இளம்பெண் 'சொனாரா லுாயிஸ்', முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார். இவரது தாய், தன் ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்தார். தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார். இதுதான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை அவருக்கு துாண்டியது.