PUBLISHED ON : பிப் 06, 2024 12:00 AM

'தொழில் அதிபர்களுக்கு பதவி கொடுத்தால் இப்படித் தான் நடக்கும்...' என முணுமுணுக்கின்றனர், ஆந்திராவில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள்.
இங்கு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின், தெலுங்கு தேசம் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த கட்சியின் லோக்சபா எம்.பி.,யாக பதவி வகித்தவர் ஜெய்தேவ் கல்லா. நாட்டின் முன்னணி பேட்டரி தயாரிப்பு நிறுவனமான அமர ராஜா குரூப் நிறுவனத்தின் அதிபர்.
சந்திரபாபு நாயுடுவின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த இவர், தேர்தல் நேரங்களில் கட்சிக்கு நிதியை வாரி வழங்குவார். இன்னும் சில வாரங்களில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார், ஜெய்தேவ் கல்லா.
மாநில அரசின் கடும் நெருக்கடி காரணமாக, சமீப காலமாக தொழில் ரீதியான பின்னடைவு ஏற்பட்டதால், இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளார். இவரது தொழிலுக்கு தேவையான சுற்றுச்சூழல் அனுமதியை கொடுக்காமல், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தாமதம் செய்து வருவதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதையடுத்து தான், அரசியலுக்கு முழுக்கு போடும் முடிவுக்கு அவர் வந்துள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத சந்திரபாபு நாயுடு, 'கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு வருமானமும் இல்லை. தேர்தல் நெருங்கும் நேரம் பார்த்து ஜெய்தேவ் கல்லா ஓட்டம் பிடித்து விட்டார். இனி நிதிக்கு என்ன செய்வது...' என, புலம்புகிறார்.