PUBLISHED ON : மே 17, 2025 12:00 AM

'ஒரு வழியாக மூட நம்பிக்கையை உடைத்து விட்டார். இப்போதாவது இவரை நம்புங்கள்...' என, மஹாராஷ்டிர முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான தேவேந்திர பட்னவிஸ் பற்றி கூறுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
இங்கு, முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டேயும், தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் துணை முதல்வர்களாக உள்ளனர்.
முதல்வருக்கான அதிகாரப்பூர்வ அரசு இல்லமான, 'வர்ஷா' மும்பையில் உள்ளது. முதல்வராக பதவியேற்று ஆறு மாதங்களாகியும், அந்த இல்லத்துக்கு குடிபெயர்வதை தவிர்த்து வந்தார், பட்னவிஸ்.
இவருக்கு முன் அந்த இல்லத்தில் வசித்த முன்னாள் முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, தற்போது தனக்கு முதல்வர் பதவி கிடைக்காத கோபத்தில், மந்திரவாதியை அழைத்து பில்லி, சூனியம் செய்து விட்டதாக வதந்தி பரவியது.
இதனால்தான், அந்த இல்லத்துக்கு போவதை தேவேந்திர பட்னவிஸ் தவிர்ப்பதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால், சமீபத்தில் அந்த இல்லத்துக்கு குடிபெயர்ந்த பட்னவிஸ், மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மஹாராஷ்டிராவில் உள்ள காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சியினரோ, 'ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பில்லி, சூனியத்தை எடுப்பதற்கு, பட்னவிஸ் எங்கிருந்து மந்திரவாதியை கூட்டி வந்தாரோ...' என, கிண்டல் அடிக்கின்றனர்.