PUBLISHED ON : ஜூன் 22, 2024 12:00 AM

'லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தில் நடக்கும் வாரிசு அரசியல் சண்டை, இன்னும் சில நாட்களுக்கு பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்காது...' என, நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள்.
பீஹாரில், முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், இங்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் நோக்கில், தன் ஒட்டுமொத்த வாரிசுகளையும் அரசியல் களத்தில் இறக்கி விட்டுள்ளார்.
மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏற்கனவே கட்சியில் முக்கிய பொறுப்புகளில் உள்ளனர். மூத்த மகள் மிசா பார்தி ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தபோதும், சமீபத்திய லோக்சபா தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியில் போட்டியிட்டார். இளைய மகள் ரோகிணி, சரண் தொகுதியில் களம் இறக்கி விடப்பட்டார்.
தேஜ் பிரதாப்புக்கும், தேஜஸ்விக்கும் ஏற்கனவே கட்சியில் யார் பெரியவர் என்பதில் தகராறு நடந்து வருகிறது. அடுத்தபடியாக மிசா பார்திக்கும்,ரோகிணிக்கும் இடையேயும் மோதல் நடந்து வந்தது.
ஆனால், லோக்சபா தேர்தலில் மிசா பார்தி அமோக வெற்றி பெற்ற நிலையில், ரோகிணி படுதோல்வி அடைந்தார். இதனால், சில காலத்துக்கு அமைதி காப்பது என முடிவு செய்துள்ளார், ரோகிணி.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினரோ, 'ரோகிணியின் தோல்வியால், மிசா பார்தி தான், மகிழ்ச்சியில் உள்ளார்...' என, கிண்டலடிக்கின்றனர்.