PUBLISHED ON : ஜூன் 23, 2024 12:00 AM

'இந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என தெரியவில்லையே...' என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார், தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி.
தெலுங்கானாவில் ஆறு மாதங்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில், எதிர்பாராத விதமாக, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். எந்தவித பிரச்னையும் இல்லாமல், ரேவந்த் ரெட்டி ஆட்சி செய்வதாக வெளியில் தெரிந்தாலும், உள்ளுக்குள் ஏராளமான பிரச்னைகள் அவரை வாட்டி வதைக்கின்றன.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் சிலர், தங்களுக்கு அமைச்சர் பதவி தர வேண்டும் என, போர்க்கொடி துாக்கி வருகின்றனர். இது தவிர, குறிப்பிட்ட சில சமூகங்களுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரவில்லை என, அந்த சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இவர்களை சமாதானப்படுத்துவதற்காக அமைச்சரவையை விரிவுபடுத்த ரேவந்த் ரெட்டி திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர் பதவி தந்தால், கட்சி தாவ தயாராக இருப்பதாக துாது விட்டு வருகின்றனர்.
தெலுங்கானா சட்டசபையில் மொத்த எண்ணிக்கையின் அடிப்படையில், இன்னும் ஆறு பேரை மட்டுமே அமைச்சரவையில் சேர்க்க முடியும். ஆனால், அமைச்சர் பதவி கேட்டு அடம் பிடிப்பவர்கள் எண்ணிக்கை, 20க்கும் மேல் உள்ளது.
இதனால், அமைச்சரவையை விரிவுபடுத்தினால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்படுமோ என பீதியில் உறைந்துள்ளார், ரேவந்த் ரெட்டி.