‛ஜனநாயகன்' ரிலீஸ் : திருச்செந்தூரில் தயாரிப்பாளர் தந்த அப்டேட்
முதல்வர் விஜய் நடித்துள்ள கடைசி படம் ‛ஜனநாயகன்'. வினோத் இயக்க, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜன., 9ம் தேதியே வெளியாக வேண்டிய படம் தணிக்கை சான்றிதழ் பிரச்னையால் வெளியாகாமல் உள்ளது. விரைவில் படத்திற்கு சான்றிதழ் கிடைக்க உள்ளது. இந்நிலையில் இப்பட தயாரிப்பாளரான கேவிஎன் நிறுவனத்தை சேர்ந்த வெங்கட் கே நாராயணா, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛முதன்முறையாக இந்த கோயிலுக்கு வந்துள்ளேன். முருகன் தரிசனம் சிறப்பாக அமைந்தது. ஜனநாயகன் படம் வெற்றி அடைய சிறப்பு பூஜை நடந்தது. படத்தின் தலைப்பே ‛ஜனநாயகன்'. தற்போது விஜய் தமிழகத்தின் ஜனநாயகனாக முதல்வராக மாறிவிட்டார். மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காகவும் இங்கு வந்தேன். தணிக்கை சான்றிதழ் கிடைத்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும். ஜூன் 22ல் முதல்வர் விஜயின் பிறந்தநாள். அதற்குள் ஒரு தேதியை முடிவு செய்து படம் வெளியிடப்படும். ஜனநாயகன் பட டைட்டில் ‛முதல்வர் விஜய்' என இடம்பெறுமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.