உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

சுந்தர்.சி, குஷ்பு 2வது மகள் அனந்திகா சுந்தரும் சினிமாவில் என்ட்ரி

இயக்குனர் சுந்தர்.சி சினிமாவில் 31 ஆண்டுகளாக இருக்கிறார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கிய குஷ்பு, பின்னர் ஹீரோயின் ஆகி தென்னிந்திய மொழிகளில் கலக்கினார். இப்போதும் சில படங்களில் நடிக்கிறார். ‛அரண்மனை 4' படத்திலும் நடித்தார். மூக்குத்தி அம்மன் 2வில் நடிக்கிறாரா என்பது சஸ்பென்ஸ் ஆக இருக்கிறது.

இயக்குனர் குஷ்பு, சுந்தர்.சி தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திகா என 2 மகள்கள். இருவருமே வெளிநாட்டில் படித்தவர். இப்போது இருவரும் பெற்றோர்கள் பாணியில் சினிமாவுக்கு வந்துவிட்டனர். ஆரம்பம் என்ற மலையாள படத்தில் மூத்த மகள் அவந்திகா நடித்து வருகிறார். கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இப்போது அவர்களின் 2வது மகள் அனந்திகா சுந்தரும் அவ்னி மூவீஸ் தயாரிக்கும் 'டபுள் ஆக்குபன்சி' (Double Occupancy) படத்தின் மூலம் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆகிவிட்டார். இந்த படம் தவிர, சுந்தர்.சி இயக்க, விஷால் நடிக்கும் புருஷன், மூக்குத்தி அம்மன் 2விலும் அனந்திகா மார்க்கெட், விளம்பர துறையில் பணியாற்றுகிறார்.

இது குறித்து அனந்திகா அளித்த பேட்டியில், ‛‛டபுள் ஆக்குபன்சி படத்தை அஸ்வின் கந்தசாமி இயக்குகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்த சந்தோஷ், 'கட்சி சேர' பாடல் புகழ் சம்யுக்தா விஸ்வநாத், ரேஷ்மா வெங்கடேஷ், வினோத் கிஷன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.டி.வி கணேஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) மற்றும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

நான் லண்டனில் படித்துவிட்டு மணிரத்னம் டீமில் வேலை செய்தேன். இந்த படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். பல வேலைகளை பொறுப்பாக செய்கிறேன். அப்பா, அம்மா நிறைய கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். சொந்த நிறுவனம் என்பதால் செலவு விஷயத்தில் பொறுப்பாக இருக்கிறேன். இந்த படத்தின் கதை வித்தியாசமானது. இளம் ஜோடிகள் நடிக்கிறார்கள். இதில் அம்மா நடிக்கிறாரா என்பது சஸ்பென்ஸ். எனக்கு அரசியல் ஐடியா இல்லை' என்கிறார்.

ஜூன் 12ம் தேதி இந்த படம் வெளியாகிறது. ஒருவர் ஆணாகவும், பெண்ணாகவும் சூழ்நிலை காரணமாக இருக்கிறார். அவரின் காதல் எப்படி இருக்கும், அவரின் ஜோடிகளுக்கு இதனால் என்ன பிரச்னை என்ற ரீதியில் கதை செல்கிறதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !