
குண்டலினியும் அதனை உணர்தலும்
சக்தி நிலை கூடுகிறது என்றால் உங்கள் 'ஆழ்ந்து உணரும்' ஆற்றலும் கூடுகிறது. யோக விஞ்ஞானம் முழுவதுமே உங்களின் இந்த நுண்ணுணர்வை அதிகரிக்க உருவாக்கப்பட்டவை தான். ஆன்மீக செயல்முறை என்றாலே உங்களின் உணரும் திறனை அதிகரிப்பதற்குத்தான்... ஏனெனில் உங்கள் அறிவின் சாரம், நீங்கள் அறிபவை எல்லாம் நீங்கள் உணர்வதை சார்ந்தே இருக்கிறது. சிவன் பாம்புடன் காட்சியளிப்பதும் கூட இதனால் தான். சிவனின் சக்தி அதன் உச்சத்தை எட்டியதால், அவரின் உணரும் திறனும் உச்சத்தில் இருக்கிறது. அதனால் அவரின் நெற்றிக்கண்ணும் திறந்துவிட்டது.
குண்டலினியும் நெற்றிக் கண்ணும்:
மூன்றாவது கண் என்றால் ஒருவருடைய நெற்றி பிளந்து, அங்கே இன்னொரு கண் தோன்றிவிட்டது என்று அர்த்தமல்ல. இது ஒரு குறியீடு... முற்றிலும் புதுவிதமான பரிமாணத்தில் உணரும் திறன் வந்துவிட்டது என்பதைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு குறியீடு... அவ்வளவே! இந்த இரண்டு கண்களால் பொருள்நிலையில் உள்ளவற்றை மட்டுமே பார்க்க முடியும். உதாரணத்திற்கு, இந்தக் கண்களை கைகளால் மூடினால், அவற்றால் எதையும் பார்க்க முடியாது. அதன் திறன் அவ்வளவு தான். பொருள்நிலைக்கு உட்பட்டே அது செயல்படுகிறது. ஆனால் 'நெற்றிக்கண் திறந்துவிட்டது' என்று சொன்னால், அது உள்நோக்கிப் பார்ப்பது. வாழ்கையை முற்றிலும் வேறு விதமாக உணரும் பரிமாணம் திறந்து கொண்டுவிட்டதால், இவ்வுலகில் எதையெல்லாம் உணரவேண்டுமோ, அவை அனைத்தையுமே உணர்ந்துகொள்வது.
குண்டலினி யோகா - முன்னேற்பாடு
இப்போதெல்லாம் நிறைய புத்தகங்களிலும், யோகப் பயிலகங்களிலும் 'குண்டலினி யோகா' மிகப் பிரபலமாகி வருகிறது. குண்டலினி யோகா பற்றியும், அதன் பலன்கள் பற்றியும், ஒன்றுமே அறியாவிட்டாலும் சர்வசாதாரணமாகப் பேசுகிறார்கள். 'குண்டலினி' என்ற வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்றாலும் கூட, மிக்க கவனத்துடன், விழிப்புணர்வோடு, மரியாதையோடு தான் உச்சரிக்கவேண்டும். ஏனெனில் அந்த வார்த்தையே அத்தனைப் பெரிது. உங்கள் உடல், மனம், உணர்வுகள் அனைத்தையும் தேவையான அளவிற்கு தயார் செய்து கொண்ட பின்னரே, குண்டலினியை எழச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த அளவிற்கு சக்தியை தாங்கிக்கொள்ள முடியாத உடலில் அதைச் செலுத்தினால், 'ஹை வோல்டேஜ்ஜால்' செயலிழக்கும் எந்திரங்கள் போல், உங்கள் உடலும் சமனற்றோ, செயலிழந்தோ போகும்.
குண்டலினி யோகா - மிகவும் ஆபத்தானது
குண்டலினி யோகா தான் இருப்பதிலேயே மிக அபாயகரமான யோகமுறை. அபாயம் என்பது... அதுதான் இருப்பதிலேயே மிகவும் வீரியம் வாய்ந்த செயல்முறை என்பதால்! எது சக்திவாய்ந்ததோ, அதைத் தவறாகப் பயன்படுத்தினால், அது பேராபத்தாய் முடிந்துவிடும். உதாரணத்திற்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய பல வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று அணுஉலை வாயிலாக உற்பத்தி செய்வது. மின்சாரம் உற்பத்தி செய்ய நாம் அறிந்தருக்கும் எல்லா வழிகளிலும் இதுதான் சிறந்த வழி... என்றாலும், இதுதான் மிகவும் ஆபத்தான வழியும் கூட. நிஜம் தானே? எல்லாம் சரியாக நடக்கும்போது மிகச்சிறப்பான வழியாய் இருப்பது, தவறாகிப் போனால் சரிசெய்ய முடியாத அளவிற்கு பெரும் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது.
எல்லையை தாண்டுவதற்கான விஞ்ஞானம்.
எல்லா யோக வழிகளுக்குமே அதுதான் நோக்கம், ஆனால் குண்டலினி யோகா குறிப்பாக அதை நோக்கியே இருக்கிறது. சொல்லப்போனால் இங்கு வாழும் எல்லா உயிர்களுக்குமே அதுதான் நோக்கம். ஆம், மனிதர்கள் ஏதோ ஒரு வழியில் இக்கணம் தாங்கள் உணர்ந்து கொண்டிருப்பதைவிட இன்னும் ஆழமாக, இன்னும் தீவிரமாக வாழ்வை உணரவே முற்படுகிறார்கள். ஒருவர் பாட நினைக்கிறார், ஒருவர் ஆட நினைக்கிறார், ஒருவர் மதுபானம் அருந்துகிறார், இன்னொருவர் பிரார்த்தனை செய்கிறார்... இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள்? வாழ்வை இன்னும் ஆழமாய், தீவிரமாய் உணர்ந்திட வேண்டும் என்ற ஏக்கத்தினால் தான். எல்லோரும் குண்டலினியை எழுப்பிடவே முயற்சி செய்கிறார்கள்... ஆனால் ஏதேதோ தற்செயலான வழிகளில். இதை எப்போது விஞ்ஞான ரீதியில் அணுகி, சரியான செயல்முறைகளை பயன்படுத்துகிறீர்களோ, அது யோகா!