/ஆன்மிகம்/சத்குருவின் ஆனந்த அலை/இறப்புக்குப் பிறகான வாழ்வு - மறுபிறப்பு என்பது இருக்கிறதா?இறப்புக்குப் பிறகான வாழ்வு - மறுபிறப்பு என்பது இருக்கிறதா?
இறப்புக்குப் பிறகான வாழ்வு - மறுபிறப்பு என்பது இருக்கிறதா?
இறப்புக்குப் பிறகான வாழ்வு - மறுபிறப்பு என்பது இருக்கிறதா?
இறப்புக்குப் பிறகான வாழ்வு - மறுபிறப்பு என்பது இருக்கிறதா?

கேள்வியாளர்: இறப்புக்குப் பிறகு என்ன நிகழ்கிறது? மறுபிறப்பு என்பது இருக்கிறதா? அவ்வாறு இருந்தால், ஒரு நபரை எது ஒரு பிறவியில் இருந்து மற்றொன்றுக்குக் கொண்டுசெல்கிறது?
சத்குரு: யோகத்தில் மனித உடலை ஐந்து பரிமாணங்களாக அல்லது ஐந்து அடுக்குகளாகப் பார்க்கிறோம். பௌதீக உடல் அன்னமய கோசம் எனப்படுகிறது. அன்னம் என்றால் உணவு. எனவே இது உணவு உடல். அடுத்து மனோமய கோசம் அல்லது மனோ உடல் என்று அழைக்கப்படுகிறது. மூன்றாவது சக்தி உடல் என்ற பொருளில் பிராணமய கோசம் என்று அழைக்கப்படுகிறது. பௌதீக உடல், மனோ உடல் மற்றும் சக்தி உடல் ஆகிய மூன்றும் உயிரின் பொருள் சார்ந்த பரிமாணங்களாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரு மின்விளக்கை எடுத்துக்கொண்டால், அது பொருள் சார்ந்தது என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்கமுடியும். மின்சாரம் என்பது அதாவது, மின்கம்பியில் ஓடும் மின்னணுக்களும் பொருள் சார்ந்தவைதான். அவ்வாறே மின்விளக்கில் இருந்து வெளிப்படும் ஒளிக்கற்றை, இவை மூன்றும் பொருள் சார்ந்தவையாக உள்ளன.
இறப்பு என்பது என்ன?
ஒருவர் இறந்துவிட்டால் 'அவர் இனி இருக்கப் போவதில்லை' என்று கூறுகிறோம். அது உண்மை அல்ல. நீங்கள் அறிந்திருக்கும் நிலையில் இனி அவர் இருக்கப் போவதில்லை. ஆனால் அவர் இங்குதான் இருக்கிறார். பௌதிக உடல் விழுந்துவிட்டது. ஆனால் கர்மாவின் வலிமையைப் பொருத்து மனோ உடல் மற்றும் பிராண உடல் இருந்து கொண்டிருக்கிறது. மற்றொரு கருவறை கிடைப்பதற்கு, இந்தக் கர்மக் கட்டமைப்பின் தீவிரம் குறைந்து ஒரு செயலற்ற தன்மைக்கு மாற வேண்டும். கர்மக் கட்டமைப்பின் செயல்பாடு முடிந்துவிட்ட காரணத்தால் அது பலவீனமாக இருந்தால், அப்போது இன்னொரு உடலை மிக எளிதாக அது தேடிக்கொள்கிறது. ஒருவர் இந்த வாழ்க்கைக்காக ஒதுக்கப்பட்ட கர்மாவைத் தீர்த்துவிட்டால், அவர் நோய், விபத்து அல்லது காயம் எதுவுமில்லாமல் சட்டென இறந்துவிடுவார்.
மஹாசமாதி - உச்சபட்ச விடுதலை
நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடக்கும்போது, ஒவ்வொரு ஆன்மீக சாதகருக்கும் இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் உடைத்தெறிவதுதான் உச்சபட்ச இலக்காக இருக்கிறது. இது ஒரு குமிழியைப் போன்றது. குமிழியின் வெளிப்புற வட்டம் உங்கள் கர்மக் கட்டமைப்பாகவும், உள்புறத்தில் காற்றும் உள்ளது. குமிழியை நீங்கள் உடைத்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம்; அப்போது உங்கள் காற்று எங்கே இருக்கிறது? உங்கள் காற்று என்று அப்படிப்பட்ட எதுவும் இல்லை; அது சர்வத்தின் ஒரு பகுதியாகிவிட்டது. தற்போது எல்லையில்லாத ஒரு தன்மையானது, வரம்புக்கு உட்பட்ட கர்மக் கட்டமைப்பில் கட்டுண்டு இருக்கிறது. எனவே, நீங்கள் ஒரு தனி நபர் என்று அது உங்களை நம்ப வைக்கிறது. நீங்கள் நூறு சதவிகிதம் உங்கள் கர்மக் கட்டமைப்பை அழித்துவிட்டால், நீங்கள் படைப்போடு கலந்துவிடுகிறீர்கள்.