
கடவுள்கள் நீலநிறத்தில் சித்தரிக்கப்படக் காரணம்
சத்குரு: நீலம் என்பது அனைத்தையும் உள்ளடக்கிய தன்மை. இந்த இருப்பில், நீங்கள் பார்க்கலாம், பரந்து விரிந்த மற்றும் நம் புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அனைத்துமே நீலநிறமாகும், அது கடலாகவோ ஆகாயமாகவோ இருந்தாலும் சரி. நம் புலன் உணர்வை விட பெரிதான ஒன்று பொதுவாக நீலமாக இருக்கும், ஏனென்றால் நீலம்தான் எல்லாவற்றையும் உள்ளடக்கியதின் அடிப்படை ஆகும்.
ஒளிவட்டம் என்றால் என்ன?
ஒளிவட்டம் என்றால் ஒவ்வொரு பொருளையும் சுற்றியிருக்கும் ஒரு சக்தி வளையம். இருப்பு முழுவதும் ஆற்றல் என்பது அறிவியல் உண்மையாகும். ஆற்றலின் ஒரு பகுதி தன்னை ஸ்தூல வடிவமாக வெளிப்படுத்தியுள்ளது. ஆற்றலின் மற்றொரு பகுதியானது தன்னை ஸ்தூல வடிவத்தில் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் ஒரு வடிவெடுத்துள்ளது. எந்த வடிவம் ஸ்தூலமாகவில்லையோ அல்லது ஸ்தூலமாக மறுக்கிறது ஆனாலும் ஒரு வடிவெடுத்துள்ளதோ அதனை ஆரா என்கிறோம்.
கவர்ந்து ஈர்க்கின்ற நீலம்
அவரது சக்தி அல்லது ஆராவின் வெளிவளையம் நீலம். ஆதலால் அவர் கவர்ந்திழுக்கின்ற தன்மையுடையவராய் இருந்தார் - அவரின் மூக்கின் வடிவத்தாலோ அல்லது கண்ணாலோ அல்லது வேறு எதுவாலோ அல்ல. எத்தனையோ பேர் நல்ல மூக்குடனும் நல்ல கண்களுடனும் நல்ல உடம்புடனும் இருக்கின்றனர், ஆனால் இந்த அளவு வசீகரிக்கும் தன்மையுடன் இல்லை. ஒருவரின் ஆராவில் உள்ள நீலநிறமே அவரை கவர்ந்திழுக்கும் வசீகரமானவராக ஆக்குகிறது.
ஆராவின் வெவ்வேறு நிறங்கள்
இதில் வேறொரு அம்சமும் உள்ளது. ஒருவரின் பரிணாம வளர்ச்சியில் அவரின் ஆரா பல நிறங்கள் ஆகலாம். நம் சாதனைகளில் நாம் ஆக்ஞாவை முக்கியமாக கொண்டால் அப்போது காவிநிறமே பிரதானமாகும். அந்த நிறமே அனைத்தையும் துறப்பதற்கும், துறவறத்துக்கும், கிரியாவுக்கும் உரியது. ஒருவரது ஆரா வெண்ணிறமாக இருந்தால் அவர் மிகவும் தூய்மையானவராக இருப்பார். அத்தகையவரின் இருப்பு பிரமாதமாக இருக்கும், ஆனால் அவர் செயல் சார்ந்தவராக இருக்கமாட்டார். ஒருவர் தன் உச்சபட்ச நிலையை அடைந்தபின் இந்த உலகில் செயல் செய்ய முயன்றால் அவரின் ஆரா அடர் நீலமாக இருக்கும். அதிக செயலாற்றியவர்கள் அனைவருமே நீலம். இந்த வகையான ஒளியே உங்களை பேராற்றல் பெற்றவர் என்று மற்றவர்கள் நினைக்கும் வகையில் உலகில் செயல்பட அனுமதிக்கிறது.