Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/காத்திருக்கு வெற்றி பரிசு

காத்திருக்கு வெற்றி பரிசு

காத்திருக்கு வெற்றி பரிசு

காத்திருக்கு வெற்றி பரிசு

ADDED : அக் 09, 2024 01:53 PM


Google News
Latest Tamil News
அம்பிகைக்குரிய பண்டிகைகளில் சிறப்பானது நவராத்திரி. நவம் என்பதற்கு ஒன்பது, புதுமை என பொருள். புதுமையான ராத்திரியா இது? என்றால் ஆம்! இந்நாள் புதிய ஆற்றல்களை நமக்குள் உண்டாக்குகிறது.

வழிபடுவோரின் துன்பம் போக்கி வரம் தரும் நாள் இது. வாழ்விற்கு தேவையானவை வீரம், செல்வம், கல்வி. இதில் ஒன்று இல்லாவிட்டாலும் வாழ்வு முழுமை பெறுவதில்லை. எனவே தான் முப்பெருந்தேவியரை வழிபடுகிறோம்.

முதலில் வழிபட வேண்டியவள் துர்கை. போர் சக்தியான இவள் பகைவரை அழிப்பவள். சிலர் துர்கை, காளி, மகிஷாசுரமர்த்தினி, வாராகி, சாமுண்டியை வீட்டில் வழிபடக் கூடாது என்பர். அன்றாட பூஜை, நைவேத்தியம் முறையாக நடந்தால் சாந்த வடிவிலேயே அம்பிகை இருப்பாள். ஆயுதம் ஏந்திய காவல்காரரைக் கண்டால் திருடன், ஏமாற்றுக்காரன், குற்றவாளி தான் பயப்படவேண்டும். அது போல பகைவருக்கு காளி, நீலியாக உக்கிரத்துடன் இருக்கும் அம்பிகை தன் அடியவர்களுக்கு தாயாக அருள்புரிவாள்.

இரண்டாவது மகாலட்சுமி. பாற்கடலில் தோன்றிய இவளின் அருள் இல்லாவிட்டால் வாழ்வு சிறக்காது. ஏழையோ, பணக்காரரோ யார் என்றாலும் லட்சுமியின் அருளுக்குத் தானே ஏங்குகின்றனர். செல்வத்தை அனுபவிக்கும் யோகத்தையும் இவளே அருள்கிறாள்.

மூன்றாவதாக சரஸ்வதி கல்வி, ஞானத்தை அருள்பவள். மனிதன் மட்டுமின்றி எல்லா உயிர்களுக்கும் அறிவு தருகிறாள்.

ஓரறிவு முதல் ஆறறிவு வரையுள்ள உயிர்களின் தகுதிக்கு ஏற்ப ஞானம் தருகிறாள். மண்ணில் இட்ட விதை தண்ணீர், சூரிய ஒளியை ஈர்த்துக் கொண்டு வளரும். செடி, கொடிக்கும் அறிவு உண்டு. ஆபத்து நேர்ந்தால் கூட்டுக்குள் மறையும் புத்தி நத்தைக்கு உண்டு. மழைக் காலத்திற்குத் தேவையான உணவை கோடையில் சேகரிக்கும் அறிவு எறும்புக்கு உண்டு. தினையளவு தேன் கிடைத்தாலும் அதை பனையளவு ஆக்கும் நுண்ணறிவு தேனீக்கு உண்டு.

ஆயிரம் கன்றுகள் ஓரிடத்தில் இருந்தாலும் தன் கன்றைக் கண்டறியும் சக்தி மாட்டிற்கு உண்டு, தன் தாயை நாடும் அறிவு கன்றுக்கும் உண்டு. தர்ம நெறிகளை கடைபிடித்து வாழும் அறிவு ஆறறிவு கொண்ட மனிதனுக்கு உண்டு.

இப்படி அனைத்து உயிர்களிலும் ஞானமாக திகழ்பவள் சரஸ்வதியே. மூன்று நலன்களான கல்வி, செல்வம், வீரத்தை பெற விஜயதசமி நாளில் அம்பிகையை வழிபடுவோம். வித்தைகளைக் கற்றுத் தரும் குருநாதர், ஆசிரியர்களுக்கு பரிசளித்து இன்று ஆசி பெறலாம். இசை, நடன கலைஞர்கள் கலைகளில் ஈடுபடுவர். இன்று தொடங்கும் நற்செயல்கள் அனைத்தும் வெற்றியை பரிசளிக்க காத்திருக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us