Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/பஞ்சலிங்கம் பஞ்ச நந்தி பிரதோஷம் காண செல்வோமா!

பஞ்சலிங்கம் பஞ்ச நந்தி பிரதோஷம் காண செல்வோமா!

பஞ்சலிங்கம் பஞ்ச நந்தி பிரதோஷம் காண செல்வோமா!

பஞ்சலிங்கம் பஞ்ச நந்தி பிரதோஷம் காண செல்வோமா!

ADDED : நவ 19, 2012 12:43 PM


Google News
Latest Tamil News
ஒரே கோயிலில் வரிசையாக ஐந்து லிங்கங்கள், ஐந்து நந்திகள் பெரிய மண்டபத்தின் கீழ் இருப்பதைக் காண வேண்டுமானால், கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திமுகத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயிலுக்குச் செல்ல வேண்டும். இங்கு, சிவனடியார்களின் தேவார, திருவாசகப் பாடல்களுடன் பிரதோஷம் காண்பது மிகவும் விசேஷம்.

தல வரலாறு:





விருத்தாசுரன் என்ற அரக்கன் தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பெரும் துன்பத்தை விளைவித்து வந்தான். வருத்தமுற்ற தேவர்கள் தங்கள் தலைவனான இந்திரனிடம் முறையிட்டனர். கோபம் கொண்ட இந்திரன் தனது வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை மீது சென்று அசுரனுடன் போரிட்டு அவனை அழித்தான். இதனால் இந்திரனுக்கும் அவனது யானை ஐராவதத்திற்கும் பிரம்மஹத்தி தோஷம் (கொலை செய்வதால் ஏற்படும் பாவம்) தொற்றிக்கொண்டது.

தோஷம் நீங்க அகஸ்திய நதிக்கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டுமென அசரிரீ கூறியது. இதையடுத்து இந்திரனும் ஐராவதமும் இத்தலத்திற்கு வந்தனர். அங்கே பஞ்சலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப் பெற்றனர். பிற்காலத்தில், இங்கு உருவான சுயம்புலிங்கத்திற்கு ஐராவதத்தின் பெயரால் 'ஐராவதேஸ்வரர்' என்ற பெயர் ஏற்பட்டது. பின், கோயில் சிதிலமடைந்தது. புதிய லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு 'அழகேஸ்வரர்' என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

ஊர் பெயர்க்காரணம்:





ஹஸ்தி என்றால் யானை. யானை இங்கு வந்து வழிபட்டதால் இத்தலத்திற்கு 'ஹஸ்திமுகம்' என பெயர் வந்தது. இதுவே காலப்போக்கில் மருவி 'அத்திமுகம்' என அழைக்கப்படுகிறது.

சிறப்பம்சம்: ஐராவத யானை இங்கு வழிபட்டதால் யானையின் முகம் சிவலிங்கத்தில் அமைந்துள்ளது. ஒரே கருவறையில் ஐராவதேஸ்வரரும் அவருக்கு பின்னால், காமாட்சி அம்மன் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி அகங்காரத்தை சம்ஹாரம் செய்து ஞானத்தை வழங்குகிறார். எனவே இவர் 'சம்ஹார தட்சிணாமூர்த்தி' எனப்படுகிறார். கோயில் நுழைவுவாயிலில், ராஜகோபுரம் இருந்ததற்கான தடயம் உள்ளது. ராஜகோபுரத்தை தாங்கியிருந்த தூண்களில் ஒன்றில் லட்சுமி தாயாரை ஆலிங்கனம் செய்தபடி 'லட்சுமி நரசிம்மர்' சிற்பம் அருமையாக வடிக்கப்பட்டுள்ளது.அகிலாண் டேஸ்வரிக்கு தனிசந்நிதி உண்டு.

பாறை பாம்புபுற்று:





வெளிபிரகாரத்தில் அட்சரமாலையுடன் கணபதி வடக்கு பார்த்து அருள்பாலிக்கிறார். தென்மேற்கு மூலையில் மிகப்பெரிய பழமையான பாம்பு புற்று ஒன்று உள்ளது. ஆரம்பகாலத்தில் மணலால் ஆன இந்த புற்று காலப்போக்கில் இறுகி பாறையாக மாறியதிலிருந்தே இதன் பழமையை தெரிந்து கொள்ளலாம்.

நந்தி விலகிய தலம்:





இது ஒரு சூரிய பூஜைக்கோயில். தைமாதம் முதல் வாரத்தில், சூரியனின் கதிர்கள் இறைவனின் மீது பட்டு பூஜை நடக்கிறது. அப்போது சிவனின் முன்பாக எந்த இடையூறும் இல்லாமல் இருக்க நந்தி விலகி சூரிய பூஜை சிறப்பாக நடக்க வழி செய்துள்ளது. சூரியபூஜைக்காக நந்தியே விலகியிருப்பதால் நவக்கிரகங்களும் அமைதியாக அமர்ந்த நிலையில் உள்ளன.

பிரகாரத்திலுள்ள ஒரு சந்நிதியில் ஐந்தடி ஆழத்தில் பாதாளலிங்க சந்நிதி உள்ளது. ஒரு சந்நிதி சுவரில் சிவன் திரிசூலம், உடுக்கை ஏந்தி ஆடும் ருத்ரதாண்டவ சிற்பம் உள்ளது. மற்ற தாண்டவ சிற்பங்களில் உடுக்கையை ஒரு கையில் ஏந்தியிருப்பார். இந்த சிற்பத்தில் உடுக்கையை தொடையில் வைத்து, கையால் அடிப்பது போல் காட்டியிருப்பது வித்தியாசமானது. இதுபோன்ற சிற்பம் வேறு கோயில்களில் இருப்பதாகத் தெரியவில்லை.

பிரதோஷ வழிபாடு:





ஓசூர், பெங்களூரு மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலுள்ள மக்கள் இங்கு பிரதோஷ வழிபாட்டைச் சிறப்பாக நடத்துகின்றனர். பூஜாரிகளை இக்கோயிலுக்கு வரவழைப்பதில் சிரமம் இருப்பதால், பஞ்சலிங்க சந்நிதியில் உள்ள லிங்கங்களுக்கு பக்தர்களே வஸ்திரம் சாத்தி, மாலை சூட்டுகின்றனர். மூலஸ்தானத்தில் மட்டும் ஒரு பூஜாரி பூஜை செய்கிறார். சிதிலமடைந்த இந்தக் கோயிலை அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால், கலைச்சிற்பங்களும், பஞ்சலிங்க மண்டபமும் பாதுகாக்கப்படும்.

இருப்பிடம்:





ஓசூரிலிருந்து சேலம் செல்லும் ரோட்டில் 9 கி.மீ., தூரத்தில் உள்ள பேரண்டபள்ளியில் இருந்து பிரியும் ரோட்டில் இருந்து 13 கி.மீ., சென்றால் அத்திமுகம். பஸ் உள்ளது.

போன்:





97896 80275

பரணிபாலன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us