Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/கையில் பணம் புரளட்டும்!

கையில் பணம் புரளட்டும்!

கையில் பணம் புரளட்டும்!

கையில் பணம் புரளட்டும்!

ADDED : ஜன 06, 2013 04:29 PM


Google News
Latest Tamil News
கடன் வாட்டுகிறது, உழைத்தபணம் கையில் நிற்க மறுக்கிறது. மருத்துவச் செலவு தாளமுடியவில்லை. பெண்ணுக்கு கல்யாணம் நிச்சயித்தாயிற்று. இருக்கிற பணத்திற்குள் சிறப்பாக திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நம்மில் பலரிடமும் இருக்கிறது. பணக்கஷ்டத்தைக் குறைக்கும் மகாலட்சுமீஸ்வரர், மயிலாடுதுறை அருகிலுள்ள திருநின்றியூரில் அருள்கிறார். இவரை மகாலட்சுமி வழிபட்டு நற்பேறு பெற்றாள்.

தல வரலாறு:





உலக மக்களுக்கு அருளுவதற்காக மகாவிஷ்ணு மகாலட்சுமியை பூமியில் பிறக்கச் செய்வது வழக்கம். சீதையாக, பார்கவியாக, பத்மாவதியாக, ருக்மிணியாக அவள் பூமியில் அவதரித்திருக் கிறாள். மகாவிஷ்ணுவை அடிக்கடி பிரிந்து பூமிக்கு வர அவளது மனதுக்கு கஷ்டமாக இருந்தது. ஆறுதலுக்காக சிவலிங்க பூஜை செய்தாள். அவளுக்கு காட்சி தந்த சிவன் அவளுக்கு மனோசக்தியை அளித்தார். அவள் பூலோகத்திலுள்ள ஒரு இடத்தில் சிவனை பூஜித்த இடமே 'திருநின்றவூர்' ஆனது. 'திரு' என்றால் 'லட்சுமி'. பின்னர் இவ்வூர் திரிந்து 'திருநின்றியூர்' ஆகிவிட்டது. மகாலட்சுமி பூஜித்த சிவனுக்கு, 'மகாலட்சுமீஸ்வரர்' என்ற பெயர் வந்தது. பிற்காலத்தில் அம்பாள் உலகநாயகிக்கு சந்நிதி கட்டப்பட்டது.

கோயில் எழுந்த விதம்: சோழ மன்னன் ஒருவன், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினமும் இவ்வழியாக சென்று வந்தான். ஒருசமயம், அவன் இத்தலத்தை கடந்தபோது, வெளிச்சத்திற்காக கொண்டு சென்ற தீப்பந்தம் அணைந்து விட்டது. மீண்டும் எரிய வைக்க முயற்சித்தும் முடியவில்லை. அவர்கள் இத்தலத்தை கடந்ததும், பந்தம் தானாகவே எரிந்தது. இவ்வாறு பல நாட்கள் நடந்தது. இதற்கான காரணத்தை அவனால் கண்டறிய முடியவில்லை.

ஒருசமயம் எதிரில் வந்த பசு மேய்ப்பவனிடம், 'இத்தலத்தில் அதிசய சக்தி ஏதேனும் உண்டா?' எனக்கேட்டான். அவன் தான் பார்த்த சிவலிங்கத்தை தவிர வேறு ஏதும் இல்லை என்று சொல்லி, லிங்கம் இருக்குமிடத்தைக் காட்டினான். மகிழ்ந்த மன்னன் லிங்கம் இருந்த இடத்தில் கோயில் எழுப்பினான்.

ஒரே பீடத்தில் இரண்டு லிங்கம்: மகரிஷி ஜமதக்னி, தன்மனைவி ரேணுகா கந்தர்வன் ஒருவனின் பிம்பத்தை தண்ணீரில் பார்த்ததால் அவளது தலையை வெட்டும் படி மகன் பரசுராமரி டம் கூறினார். பரசுராமரும் தாயை வெட்டினார். அதன்பின் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்ப்பித்தார். இருந்தாலும், தாயைக் கொன்ற தோஷம் பிடித்தது. தோஷ நிவர்த்திக்காக பரசுராமரும், தனது செயலுக்காக வருந்திய ஜமதக்னியும் இங்குள்ள சிவனை வணங்கி மன அமைதி பெற்றனர். பரசுராமருக்கு அருளிய 'பரசுராமலிங்கம்' மற்றும் ஜமதக்னிக்கு காட்சி தந்த 'ஜமதக்னீஸ்வரர்' இருவரும் ஒரே ஆவுடையார் (பீடம்) மீது இரண்டு பாணங்களாகக் காட்சி தருகின்றனர்.

நித்திய அமாவாசை: கோயிலைச் சுற்றி மாலையிட்டது போல, மூன்று குளங்கள் உள்ளன. இத்தலம் பற்றி பதிகம் பாடிய சம்பந்தர், இந்த தீர்த்தத்தை 'நீலமலர் பொய்கை' என்று பாடியிருக்கிறார். மேலும் இங்கு வழிபடுவோர் பயம், பாவம் மற்றும் நோய் நீங்கி நல்வாழ்வு வாழ்வர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாவுக்கரசரும், சுந்தரரும் இத்தலம் பற்றி பாடியுள்ளனர். இங்கு மகாலட்சுமி ஹோமம் நடத்தி, சுவாமிக்கு சந்தனக் காப்பிட்டும், மாதுளை முத்துக்களால் அலங்காரம் செய்தும் வழிபடுகிறார்கள். நவக்கிரக மண்டபத்தில் சூரியன், சந்திரன் இருவரும் நேருக்குநேர் பார்த்தபடி இருக்கின்றனர். இதனால், அமாவாசை நாட்களில் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். சிவன் சந்நிதி கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியின் காலுக்கு கீழே முயலகன் இடதுபுறமாக திரும்பியிருக்கிறான். பிரகாரத்தில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதி இருக்கிறது.

இருப்பிடம்: மயிலாடுதுறையில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் 7 கி.மீ.,

திறக்கும் நேரம்: காலை 7-11, மாலை 4- 8 .

போன்: 94861 41430, 04364 320 520.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us