Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/சனாதன தர்மம் - 33

சனாதன தர்மம் - 33

சனாதன தர்மம் - 33

சனாதன தர்மம் - 33

ADDED : ஜூன் 07, 2024 10:59 AM


Google News
Latest Tamil News
தொண்டே எங்கள் உயிர் மூச்சாய்...

சனாதனத்தின் அடிநாதம் எண்ணத்துாய்மை ஆகும். வெறும் கோயில் வழிபாடு மற்றும் புறச் சடங்குகளில் ஈடுபட்டால் மட்டும் ஒருவன் பக்தன் ஆகி விட மாட்டான். அவன் இதயம் துாய்மையாக இருக்க வேண்டும். எல்லா உயிர்களையும் மதித்தல் வேண்டும். எல்லாப் பொருட்களையும் மதித்தல் வேண்டும். (மனத்துக்கண் மாசிலன் ஆதல்) இதயத்தில் அழுக்கு இல்லாமல் இருப்பதே அறங்களில் மேலானது என்கிறார் திருவள்ளுவர்.

நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் இதைத் தன் தேவாரப் பாடல்களில் அழுத்தமாக வலியுறுத்துகிறார். கடவுளைப் போற்றுதல், புகழ்தல் மட்டுமின்றி மனிதன் அறநெறியின்படி வாழ்தலையும் அழுந்தச் சொல்லி வழிகாட்டுகிறார்.

ஒரு பக்தர் குழுவினர் தங்களின் குருவிடம் சென்று வழிபட்டு ஒரு வேண்டுகோள் வைத்தனர். குருவே... தங்களின் தலைமையில் நாம் எல்லோரும் புனித தலங்களுக்குச் சென்று தீர்த்த யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என பிரார்த்தித்தனர். குருநாதரும் மகிழ்ச்சியுடன் நல்ல செயல்தான். ஆயினும் தற்போது உடல்நலம் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் மட்டும் எனது ஆசிகளுடன் சென்று வாருங்கள் என்றார். சீடர்களோ பிடிவாதமாக தாங்கள் வராவிட்டால் எங்களுக்கு யார் வழிகாட்டுவது... விபரங்கள் சொல்வது எனவே அவசியம் வர வேண்டும் என்றனர்.

குருநாதரும் சற்று யோசித்து விட்டு சரி ஒன்று செய்யலாம். எனக்குப் பதிலாக ஒரு பொருளை என் சார்பாக உங்களுடன் அனுப்புகிறேன். நீங்கள் அதை பத்திரமாக எடுத்துச் சென்று நீங்கள் நீராடும் எல்லாத் தீர்த்தங்களிலும் நீராடச் செய்து திரும்பக் கொண்டு வாருங்கள் என்றார்.

உடனே ஒரு வெள்ளிப் பெட்டியில் ஒரு பாகற்காயை வைத்து அவர்களிடம் ஒப்படைத்தார். அவர்களும் ஒருவாறாக சமாதானம் அடைந்து அதை குருபிரசாதமாக கருதி எடுத்துச் சென்றனர். செல்லும் எல்லாத் தலங்களிலும் பாகற்காயையும் பயபக்தியுடன் நீராட்டி அந்தப் பெட்டியில் வைத்து, அதன் மீது சந்தனம், குங்குமம் இட்டு பூக்கள் வைத்து வழிபாடு செய்தனர். குருவருளால் தீர்த்த யாத்திரை நிறைவேறியது. அனைவரும் நேராக குருநாதரிடம் வந்து பாகற்காய் பெட்டியை அளித்து வணங்கினர்.

குருவும் அவர்களுக்கு ஆசியளித்தார். பிறகு தீர்த்தங்களில் நீராட்டிய பாகற்காயைச் சிறு துண்டுகளாக்கி பிரசாதமாக வழங்கினார். குருநாதர் கொடுப்பதால் மறுக்க முடியாமல் சாப்பிட்டனர். பாகற்காய் கசக்கும் என்று தெரிந்தாலும் இயல்பாகவே பாகற்காய் கசந்ததாலும் அனைவரின் முகங்களும் கோணலாயின. குருநாதர் கேட்டார் ஏன் இத்தனை தீர்த்தங்களிலும் நீராடிய பாகற்காய் இனிக்கவில்லையா... என்றார்.

உடனே சீடர்கள் அதற்கு அதெப்படி சுவாமி அதன் குணம் மாறும் எனக் கேட்டனர். குருநாதர் சிரித்தபடியே பாகற்காயின் கசப்பு குணம் இத்தனை தீர்த்தங்களில் நீராடியும் எவ்வாறு மாறவில்லையோ அது போலவே தான் மனிதன் எத்தனை புறவழிபாடுகள் செய்தாலும் கூட அவன் மன அழுக்குகள் நீங்கித் துாய்மை ஆகி எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கிறார் என்னும் ஞானம் வராவிட்டால் ஒரு பலனும் இல்லை என்றார். சீடர்கள் உணர்ந்து வழிபட்டனர். அந்த குருநாதர்தான் அப்பர் பெருமான். அவர் சொல்கிறார் கங்கை, காவிரி, கடல் தீர்த்தங்கள் என எத்தனை தீர்த்தங்களில் நாம் குளித்தாலும் எங்கும் கடவுள் இருக்கிறார் என்னும் அறிவு வராவிட்டால் எது எப்படி பக்தி ஆகும் எனக் கேட்கிறார். இத்தகைய ஒரு புரட்சியைச் சொன்னது சனாதனம்.

நமது சனாதனம் கோயில்களை உருவாக்கியது. இன்று போல அக்காலங்களில் கோயில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக இல்லாமல் கல்விக்கூடம், நுாலகம், மருத்துவமனை, போர்பயிற்சிக்கூடம், உணவுக்கிடங்கு, முதியோர் சேவை மையம் எனப் பலப்பல பிரிவுகளைத் தன்னகத்தே கொண்டிருந்தது. அதனால் தான் மக்கள் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் கோயில்களில் தங்கி அச்சமின்றி வாழ்ந்தனர். எனவே தான் நம் மன்னர்கள் கோயில்களைப் பிரம்மாண்டமாகக் கட்டினர்.

இதைத் தான் கோயிலைத் தழுவிய குடிகளும், குடிகளைத் தழுவிய கோயில்களும் என்பார் குன்றக்குடி அடிகளார். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்குப் பின் நம் சமயம், வழிபாட்டுக் கூடங்களில், கல்வி முறையில் தலையிட்டு எல்லாவற்றையும் சிதைத்தனர். நமக்கும் மக்கள் சேவைக்கும் ஏதோ தொடர்பு கிடையாது போலவும் தாங்களே மக்கள் சேவையில் முன்நிற்பது போலவும் போலியான பிம்பத்தை உருவாக்கி இன்றுவரை நம்ப வைக்கின்றனர்.

ஆனால் சனாதனம் தொன்று தொட்டு காலமாக சமயத்தையும் மக்கள் சேவையையும் பிரித்துப் பார்த்ததே கிடையாது. அப்பர் பெருமான் திருவீழிமிழலை என்னும் சிவத்தலத்திற்கு திருஞான சம்பந்தருடன் எழுந்தருளினார். அப்போது அங்கே பஞ்சம் ஏற்பட்டு இருந்தது. திருநாவுக்கரசரும், திருஞான சம்பந்தரும் சிவனை வேண்ட அவரும் தினமும் ஆளுக்கொரு பொற்காசினை வழங்கினார். அதன் மூலம் அப்பகுதி மக்களின் பஞ்சம் தீர்த்தனர்.

இதில் திருநாவுக்கரசருக்கு வழங்கப்பட்ட காசு மட்டும் மதிப்பு மிக்கதாக இருந்தது. ஞானசம்பந்தர் சிவனைப் பாடி காரணம் கேட்ட போது, திருநாவுக்கரசரின் தொண்டு உயர்ந்தது என்பதை உலகிற்கு காட்டவே இப்படி நடந்தது என்றார் சிவன்.

திருநாவுக்கரசர் கைகளில் 'உழவாரப்படை' என்ற கருவி இருக்கும். இது பார்ப்பதற்கு தோசைக் கரண்டி போல இருக்கும். அதைக் கொண்டு செல்லும் கோயில்களில் எல்லாம் துாய்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வார். இன்றும் அதை அடியொற்றி லட்சக்கணக்கான அடியார்கள் பலப்பல குழுக்களாக தமிழகம் எங்கும் உள்ள கோயில்களில் உழவாரப்பணியைச் செவ்வனே செய்து வருகின்றார்கள். கோயிலுக்குச் சென்றால் நாமும் நம்மால் ஆன வரை அங்கு துாய்மை செய்ய வேண்டும். கண்ணுக்குத் தென்படும் காகிதம், தேங்காய் நார், வாழைப்பழத் தோல்கள் போன்றவற்றை குறிப்பிட்ட இடத்தில் போடப் பழக வேண்டும். இதுவே திருநாவுக்கரசரின் வழிபாட்டு நெறி.

சிவனின் திருநாமத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார் அவர். பிரகலாதனை முன்பு இரண்யகசிபு எவ்வாறெல்லாம் துன்புறுத்தினானோ, பிரகலாதன் கடவுளின் திருநாமம் சொல்லி எப்படி மீண்டும் கடவுள் தரிசனம் பெற்றானோ அது போலவே திருநாவுக்கரசரும் அத்தனை துன்பங்களுக்கும் ஆளானார். ஆயினும் மனஉறுதியுடன் சிவநாமத்தைச் சொல்லி அத்தனை துன்பங்களை இன்பமாக்கினார்.

சிறிதாக தலைவலி வந்தால் பதறுகின்ற நாம் திருநாவுக்கரசருக்கு தரப்பட்ட சோதனைகளை சிந்திக்க வேண்டும். அத்தனையையும் 'நமசிவாய' என்னும் திருநாமத்தால் வென்றார். அவரைக் கல்லோடு கட்டி கடலில் வீசினர். சிவநாமத்தைச் சொன்னார். கல்லும் மிதந்தது. ஏழாம் நுாற்றாண்டு வரலாறு இது. இன்றும் கடலுாருக்கு அருகில் திருநாவுக்கரசரை கரையேறிய இடம் கரையேற விட்ட குப்பம் என அழைக்கப்படுகிறது. அன்புடன் கடவுளின் திருநாமத்தைச் சொன்னால் எல்லாம் நடக்கும் என உறுதிபடக் கூறினார்.

இன்பமே எந்நாளும் துன்பமில்லை என்ற தாரக மந்திரத்தை உலகிற்குத் தந்தார்.

வானம் வரை விறகுகளை அடுக்கி அவற்றை எரிக்க வேண்டுமானால் ஒரு சிறிய நெருப்பு போதும். அதுபோல மலையளவு பாவம் செய்தாலும் மனம் உருகி 'நமசிவாய' எனச் சொன்னால் அத்தனை பாவங்களும் தீயினில் துாசாகும் என நம்பிக்கை தந்தவர் நாவுக்கரசர்.தொண்டும் சனாதனமும் பின்னிப் பிணைந்தவை என்பதை திருநாவுக்கரசர் வரலாறு நமக்கு உணர்த்தும். இதை உலக மொழிகள் அனைத்திலும் சொல்லும் வல்லமை பெறுவோம்.

-தொடரும்

இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்

93617 89870





      Our Apps Available On




      Dinamalar

      Follow us