ADDED : ஏப் 12, 2024 03:09 PM

அன்பால் உலகை வெல்வோம்
பசு, யானை, நாய், மனிதர்கள் என அனைத்து உயிர்களிடமும் ஞானிகள் ஒரே மாதிரியான பார்வையை உடையவர்களாக இருக்கிறார்கள் என்கிறது பகவத்கீதை. சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை ஒரே மாதிரியாகப் பார்ப்பதுடன் அனைவரையும் கடவுளாகப் பார்ப்பது என்பது அதன் அடிநாதம். சக மனிதர்களில் கடவுளைக் காண்பது என்பது தான் நமக்குத் தரப்படும் பயிற்சி. உதாரணமாக ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்த அனைவரையும் 'சாமி' என அழைக்கிறோம். சக்திபூஜையின் போது அடியார்களின் பாதங்களைக் கழுவி,
சந்தன, குங்குமம் இட்டு மாலை அணிவித்து அவரை ஐயப்பனாக காண்பது வழக்கம். குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே நிகழ்ந்தாலும் இது ஒரு வகைப் பயிற்சியே. இதன் மூலம் சக மனிதர்களிடம் உள்ள தெய்வீக ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து அன்பு செலுத்துகிறோம்.
நவராத்திரியின் போது கன்யா பூஜை, சுமங்கலி பூஜை நடத்துவார்கள். அம்மனின் வடிவமாகவே அதில் பங்கேற்கும் பெண்களைக் காண்கிறோம். தெய்வீக நிலை எல்லோரிடமும் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது. அனைவரையும் மதிப்புடன் நடத்துவது அவசியம் என்பதற்கான சமுதாயப் பாடம் இது. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள், ஊர்வன, பறப்பன என அவற்றையும் தாண்டி மரம், செடி, கொடிகளையும் கடவுளாக காண்கிறோம். சனாதன தர்மம் எல்லா உயிர்களையும் சமமாகக் கருத வேண்டும் என்ற மனோபாவத்தை வளர்க்கிறது. யார் சாதாரணமானவர்கள் என்று சமுதாயம் சொல்கின்றதோ அவர்களிடமும் சமநோக்குடன் கடவுளை நேரில் கண்டார்கள் ஞானிகள். உயர்ந்த பண்புள்ளவர்கள் இன்றும் அவ்வாறே காண்கிறார்கள்.
சிவனடியார்களான நாயன்மார்கள் அனைவரையும் சிவனாக கருதி சேவை செய்தார்கள். அடியார்கள் அனைவரையும் சிவனாகக் கருதி தொண்டு செய்ததால், அவர்களைத் தேடி வந்த போது சிவனும் அடியவராக வந்தார். சிவன் கோயில்களில் ஏற்றத்தாழ்வு இன்றி சிவன் அடியவர்கள் என ஒரே வரிசையில் தான் நாயன்மார்கள் பூஜிக்கப்படுகின்றனர். சனாதனம் இப்படிப்பட்ட மேலான பார்வையை நமக்கு வழங்குகிறது.
திருச்சிராப்பள்ளியில் விஜய ரகுநாத மன்னரிடம் தலைமைக் கருவூல அதிகாரியாகப் பணிபுரிந்தவர் தாயுமான சுவாமிகள். ஆன்மிகவாதியான இவர் தத்துவப் பாடல்கள் பாடியுள்ளார். தாமரை இலைத் தண்ணீராக வாழ்ந்த மகான்.
ஒருமுறை மன்னரைக் காண காஷ்மீரில் இருந்து ஒரு பண்டிதர் வந்தார். அவர் மன்னருக்கு விலை மிக்க வேலைப்பாடு நிறைந்த சால்வையைப் பரிசளித்தார். மன்னரோ தாயுமானவருக்கு அதைப் பரிசாக வழங்கினார். அரண்மனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் பனிக்காலம் என்பதால் குளிர் காற்று வீசியது. முதியவள் ஒருத்தி, குளிரில் நடுங்கிய படி சாலையோரமாக அமர்ந்திருந்தாள். தனக்கு அளித்த சால்வையை முதியவளுக்கு போர்த்தி விட்டு வீட்டிற்குச் சென்றார். அதைக் கண்ட சிலர், மன்னரிடம் சென்று விலை மதிப்பற்ற சால்வையை தெருவோரத்தில் இருந்த முதியவளுக்குக் கொடுத்து விட்டார் எனப் புகார் கூறினர்.
கோபம் கொண்ட மன்னர், உடனடியாக தாயுமானவரை அழைத்து வர ஆளனுப்பினார். தாயுமானவர் ஞானியாயிற்றே. நேரம் தவறிய நேரத்தில் அழைக்கும் போதே காரணத்தைப் புரிந்து கொண்டார். இரவில் மன்னரைச் சந்தித்தார். சால்வை எங்கே? என நேரடியாகக் கேட்க முடியாதல்லவா... எனவே சால்வையை குடும்பத்திலுள்ள மற்றவர்கள் ரசித்தார்களா? எனக் கேட்டார். அரண்மனையில் இருந்து வெளியே போனதும் அதை திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு அர்ப்பணித்து விட்டேன் என்றார். மன்னர் திகைத்தாலும், ''சரி! தங்களுடன் அர்த்த ஜாம தரிசனம் செய்ய விரும்புகிறேன். கோயிலுக்குச் செல்வோம்'' என்றார். தாயுமானவரும் தயக்கமின்றி சம்மதித்தார்.
தேர் புறப்பட்டது. இருவரும் திருவானைக்கா கோயிலுக்குச் சென்றனர். அம்மன் சன்னதி முன்னால் நின்றனர். தாயுமானவருக்கு அளித்த சால்வை அம்மனின் திருமேனியை அலங்கரித்தது. சிலிர்த்துப் போய் தாயுமானவர் கால்களில் விழுந்தார் மன்னர். ஆம்... ஏழைத்தாயின் மீது போர்த்திய சால்வை இங்கே எப்படி வந்தது. எல்லோருக்குள்ளும் கடவுளைக் காண்பவர்களுக்கு இது ஒரு அதிசயமே இல்லை அல்லவா...
காவிரிக்கரையிலுள்ள ஒரு புனிதத்தலம் திருவிசைநல்லுார் அங்கு ஸ்ரீதர ஐயாவாள் என்ற மகான் வாழ்ந்தார். அன்பின் இலக்கணமான அவர் தினமும் காவிரியைக் கடந்து சென்று திருவிடை மருதுாரில் அருள்புரியும் மகாலிங்கப் பெருமானை தரிசிப்பார். ஒருமுறை வெள்ளம் ஓடியதால் சுவாமியை தரிசிக்க முடியாமல் தவித்தார். அர்ச்சகர் வடிவில் சிவனே அங்கு வந்து பிரசாதம் கொடுத்து விட்டுச் சென்றார். அத்தகைய பாக்கியசாலியான அவர், ஒருமுறை தன் தந்தையின் திவசத்தன்று அதிகாலையில் குளித்து அதற்கான நடைமுறைகளில் ஈடுபட்டார். அவரது மனைவி திவசத்திற்கான சமையலில் ஈடுபட்டாள். அவர்களின் வீட்டு வழியாக குடும்பத்துடன் சென்ற ஒருவர், சமையல் வாசனையை நுகர்ந்தபடி தயக்கமுடன் நின்றார். அவரைக் கண்ட ஸ்ரீதர ஐயாவாள், 'என்ன வேண்டும்' எனக் கேட்டார். 'பசிக்கிறது ஐயா' என்றார். அவர்களை வரவழைத்து வாழை இலையில் திவசத்திற்கு சமைத்த உணவை பரிமாறினார். சாப்பிட்டு திருப்தியுடன் வாழ்த்திச் சென்றனர். பின்னர் மீண்டும் சமைக்கத் தொடங்கினாள் அவரது மனைவி. இதைக் கேள்விப்பட்ட அவரின் உறவினர்கள் திவச நெறிமுறைகளை மீறி விட்டாய். திவசத்தில் நாங்கள் பங்கேற்க முடியாது என்றனர். தந்தைக்குரிய திவசக் கடமையைச் செய்ய வேண்டும் என்ற அக்கறையால் தவறுக்கான பரிகாரம் கேட்டார். 'காசிக்குச் சென்று கங்கையில் குளித்தால் திவசத்தில் பங்கேற்போம்' என்றனர். அந்தக் காலத்தில் நடந்து தான் காசிக்குப் போக வேண்டும் என்பதால் ஒரு ஆண்டு ஆகுமே என வருந்தினார்.
உணவு சாப்பிட்ட ஏழைத் தம்பதியை சிவன், பார்வதியாகவும், அவர்களின் குழந்தைகளை விநாயகர், முருகனாகக் கருதி வழிபட்டார். திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமியை வேண்டி தன் வீட்டுக் கிணற்றில் கங்கையைத் தியானித்து எட்டு பாடல்கள் பாடினார். கங்கை பொங்கி வழிந்தோட வெள்ளக்காடானது. ஊரார், உறவினர்கள் அனைவரும் பயத்துடன் ஸ்ரீதர ஐயாவாளிடம் வெள்ளத்தை நிறுத்த வேண்டினர். அவரும் பிரார்த்தனை செய்ய கிணற்றுக்குள் கங்கை அடங்கியது. இந்நிகழ்ச்சி நடந்தது கார்த்திகை மாத அமாவாசை. இது நடந்து 300 ஆண்டுகள் ஆகியும் இன்றும் கார்த்திகை அமாவாசையில் இக்கிணற்றில் கங்கை பொங்கி வருகிறது. பக்தர்கள் ஆயிரக்கணக்கில் நீராடி வழிபாடு செய்கின்றனர்.
எல்லா மனிதர்களிடமும் கடவுளைக் காணும் மேலானவர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவர்கள் அன்பும், கடவுளும் ஒன்றே என்னும் எண்ணத்துடன் தர்மத்தை நிலைநாட்டி நம்பிக்கை ஊட்டுகின்றனர். அன்பால் உலகை ஆள்பவர்களை கடவுள் இன்றும் உலகிற்கு அடையாளப்படுத்திக் கொண்டே இருக்கிறார். நாமும் அன்புடன் நடந்து உலகில் மகிழ்ச்சியை பெருகச் செய்வோம்.
-தொடரும்
இலக்கிய மேகம் ஸ்ரீநிவாசன்
93617 89870