Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

ADDED : மார் 22, 2024 09:55 AM


Google News
Latest Tamil News
மார்ச் 28, 2024 - திருப்பரங்குன்றம் முருகன் திருக்கல்யாணம்

முதல் படைவீடு: திருப்பரங்குன்றம் ஆறுபடை வீடுகளில் முதல் வீடு. மற்ற படை வீடுகளில் நின்ற நிலையில் அருளும் முருகன் இங்கு தெய்வானையுடன் மணக்கோலத்தில் அமர்ந்த நிலையில் இருக்கிறார். முருகனுக்கு அபிஷேகம் கிடையாது. அவரது வேலுக்கே அபிஷேகம் நடக்கிறது. சூரனை வதம் செய்த முருகனுக்கு வெற்றிப் பரிசாக தேவேந்திரன் தன் மகள் தெய்வானையை மணம் முடித்து வைத்தார். இந்த விழா பங்குனி சுவாதி நட்சத்திரத்தன்று விமரிசையாக நடக்கிறது.

ஐந்து கருவறைகள்: திருப்பரங்குன்றம் மலையைக் குடைந்து கற்பக விநாயகர், முருகன், சிவன், துர்கை, பெருமாள் ஆகிய ஐவருக்கும் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணிய சுவாமி என்னும் பெயருடன் முருகன் அருள்பாலிக்கிறார். அமர்ந்த நிலையிலுள்ள இவரது இடது பக்கம் தெய்வானை, வலது பக்கம் நாரதர் உள்ளனர். சூரியன், சந்திரன் அருகில் உள்ளனர். மகிஷாசுரனின் தலை மீது நின்ற கோலத்தில் துர்கை தனி சன்னதியில் இருக்கிறாள். அவளைச் சுற்றி பூதகணங்களும், வாத்தியம் இசைத்த நிலையில் தேவ கணங்களும் உள்ளனர்.

மணக்கோலத்தில் அம்மன்: முருகன், தெய்வானை திருமணம் செய்த தலம் திருப்பரங்குன்றம். இங்குள்ள ஆஸ்தான மண்டபத்தில் தெய்வானை முருகன் மணக்கோலம் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. அதனடியில் நாயக்கர் கால கல்வெட்டு உள்ளது.

அதில் 'தெய்வானை நாச்சியார் கல்யாணம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் 48 துாண்கள் உள்ளன. இதில் 40 அடி உயரம் கொண்ட ஒரு துாணில் தான் முருகன், தெய்வானை திருமணக் காட்சி உள்ளது. இதில் இந்திரன் தாரை வார்த்து தெய்வானையை கன்னிகாதானம் செய்கிறார். தெய்வானை மலர் ஏந்தியும், இந்திரன் வஜ்ராயுதம் தாங்கியும் நிற்கின்றனர்.

இந்த மண்டபத்தில் விநாயகர், துர்கை, பார்வதி, பரமசிவன், பெருமாள், மகாலட்சுமி, மன்னன் கூன் பாண்டியன், அதிகார நந்தி, திருஞான சம்பந்தர், குலச்சிறை நாயனார், மங்கையற்கரசியார் சிற்பங்கள் உள்ளன.

நந்தி இருக்குமிடத்தில்...: இது முருகன் கோயில் என்றாலும் சிவபெருமானே மூலவராக இருக்கிறார். அவரை 'சத்தியகீரீஸ்வரர்' என அழைக்கின்றனர். கிழக்கு நோக்கியுள்ள இவருக்கு எதிரில் பவளக்கனிவாய் பெருமாள் இருக்கிறார். இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவியும், மதங்க முனிவரும் உடனிருக்கின்றனர். சிவனுக்கு எதிரில் நந்தி இருக்க வேண்டிய இடத்தில் பவளக்கனிவாய் பெருமாள் இருப்பதால் இவரை 'மால் விடை' என்பர். 'மால்' என்றால் 'திருமால்'. 'விடை' என்றால் நந்தி. இக்கோயிலில் நந்தீஸ்வரர் அம்சமாக திருமால் இருக்கிறார். சத்தியகிரீஸ்வரருக்கு பின்புறச்சுவரில் சோமாஸ்கந்தர் (சிவனும், பார்வதியும் முருகனுடன் சேர்ந்திருக்கும் கோலம்) புடைப்புச் சிற்பம் உள்ளது.

கரும்புடன் கணபதி: திருப்பரங்குன்றம் கருவறையில் தாமரை மலரில் அமர்ந்தபடி கற்பக விநாயகர் இருக்கிறார். கையில் அங்குசத்திற்குப் பதிலாக கரும்பு ஏந்தியிருப்பது மாறுபட்ட அமைப்பாகும். தம்பி முருகனின் திருமணத்தில் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக கரும்புடன் காட்சி தருகிறார் விநாயகர்.

பேரனுடன் மகாராணி: திருப்பரங்குன்றம் கோயிலிலுள்ள ஆஸ்தான மண்டபத் துாணில் தெய்வானை திருமணக் கோல சிற்பம் உள்ளது. முருகன், தெய்வானை, இந்திரன், முருகப்பெருமான் ஆகியோர்

முத்து மாலைகள், பதக்கங்கள் அணிந்துள்ளனர். இதற்கு எதிரில் மகாராணி மங்கம்மாள், அவரது பேரன் விஜயரங்க சொக்கநாதருடன் கைகளைக் கூப்பி தரிசிக்கும் சிற்பம் உள்ளது. கைகளில் வளையல்களும், விரல்களில் மோதிரங்களும், தலையில் கொண்டையுடன் ராணியும், கை கூப்பிய நிலையில் பேரனான விஜயரங்க சொக்கநாதரும் உள்ளனர்.

பஞ்சாட்சர பாறையில்....: சிவபூஜையின் போது தவறு செய்யும் முனிவர்களை சிறை பிடித்தது கற்கிமுனி என்ற பூதம். ஆயிரம் முனிவர்களை சிறை பிடித்து அவர்களை விழுங்க வேண்டும் என்பது அதன் நோக்கம். ஒருவழியாக 999 முனிவர்கள் அகப்பட்டனர். இன்னும் ஒருவரைப் பிடிக்க பூதம் காத்திருந்தது. இந்த சமயத்தில் திருப்பரங்குன்றம் வந்தார் நக்கீரர்.

சரவணப் பொய்கையில் நீராடிய அவர் ஒரு ஆலமரத்தடியில் சிவபூஜை செய்தார். அந்த மரத்தின் இலைகள் காற்றில் உதிர்ந்தால் பறவையாகவும், நீரில் விழுந்தால் மீனாகவும் மாறி விடும் தன்மை கொண்டவை. நக்கீரர் பூஜை செய்த நேரத்தில் ஆலிலை ஒன்று நீரில் பாதியும், தரையில் பாதியுமாக விழுந்தது. ஒரு பாதி மீனாகவும், மறு பாதி பறவையாகவும் மாறி ஒன்றையொன்று இழுத்தது. இந்த அதிசயம் கண்ட நக்கீரர் பூஜையை மறந்து வேடிக்கை பார்த்தார். இது தான் சமயம் என பூதம் அவரைப் பிடித்து சிறையிட்டது.

அங்கிருந்த 999 முனிவர்களும், “நக்கீரரே... ஆயிரத்தில் ஒருவர் குறைவாக இருந்ததால் இதுவரை உயிருடன் இருந்தோம். இப்போது எண்ணிக்கை ஆயிரம் ஆனதால் பூதத்துக்கு இரையாகப் போகிறோம்” என வருந்தினர். உடனே முருகன் மீது 'திருமுருகாற்றுப்படை' பாடினார் நக்கீரர். அங்கு தோன்றி பூதத்தைக் கொன்று முனிவர்களை முருகப்பெருமான் காப்பாற்றினார். பூதம் தன்னைத் தீண்டியதால் ஏற்பட்ட பாவம் தீர நக்கீரர் கங்கையில் நீராட விரும்பினார். வேலால் பாறையைக் கீறிய முருகன் தீர்த்தத்தை வரவழைத்தார். பாவம் விலக நீராடிய நக்கீரர் முருகனை வணங்கினார்.

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பஞ்சாட்சர பாறையில் இத்தீர்த்தம் உள்ளது.

திசைக்கு ஒரு காட்சி: திருப்பரங்குன்றம் மலைக்கு திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசல தலம், விட்டணு துருவம், கந்த மாதனம், கந்த மலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண் பரங்குன்றம்,

சுவாமிநாத புரம், முதல்படை வீடு என பல பெயர்கள் உண்டு. மலையின் வடக்கு பகுதி கைலாயம் போலவும், கிழக்கு முகம் பெரும் பாறையாகவும், தெற்கில் பெரிய யானை படுத்திருப்பது போலவும், மேற்கில் சிவலிங்கம் போலவும் காட்சியளிக்கிறது.

லட்சுமி தீர்த்தம்: ஸ்ரீதடாகம் என்னும் பெயருடன் தெப்பக்குளம் திருப்பரங்குன்றத்தில் உள்ளது. 'லட்சுமி தீர்த்தம்' என்றும் பெயருண்டு.

பராந்தக நெருஞ்சடையன் சாமநாத பூமனாகிய சாத்தன் கணபதி என்பவர் எட்டாம் நுாற்றாண்டில் இந்த தெப்பக்குளத்தை வெட்டினார். இதன் அருகிலுள்ள விபூதி மடத்தில் விநாயகர், கருப்பண்ண சுவாமி, நாகர் சன்னதிகள் உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us