Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/லாபமோ... லாபம்

லாபமோ... லாபம்

லாபமோ... லாபம்

லாபமோ... லாபம்

ADDED : ஜன 12, 2024 04:28 PM


Google News
Latest Tamil News
தொழிலில் அமோக லாபம் வேண்டுமா... கேரள மாநிலம் பாலக்காடு எலப்புள்ளி பாறா (எலப்புள்ளி பாறை) என்ற இடத்தில் உள்ள மாங்கரை அம்மன் கோயிலுக்கு வாருங்கள்.

முன்பு சோழநாட்டின் ஒரு பகுதியாக இருந்தது நாகப்பட்டினம். இங்கு வாழ்ந்த வணிகர்கள் பச்சைப்பயிறு தானியத்தை, சேரநாட்டின் மலபார் பகுதிக்கு சென்று விற்று வந்தனர். திரும்பும் போது குறுமிளகை வாங்கி தங்கள் பகுதியில் விற்பனை செய்தனர். ஒருநாள் ஊர் திரும்பிக் கொண்டிருக்கும்போது தற்போது கோயில் அமைந்துள்ள 'பாறை' என்னும் இடத்தில் தங்கினர்.

நள்ளிரவில் திடீரென கொலுசு சத்தம் கேட்கவே வணிகர்களில் ஒருவர் விழித்துப் பார்த்தார். அப்போது அருகே கொலுசு அணிந்த சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள். அவளிடம், 'யார் நீ? இரவு நேரத்தில் தனியாக இங்கு ஏன் வந்தாய்' எனக்கேட்டார். அதற்கு சிறுமி, 'எனக்குத் தலைவலியும் இருமலும் உள்ளது. தங்களிடம் உள்ள மிளகை கொஞ்சம் கொடுத்தால் உதவியாக இருக்கும்' என்றாள்.

'பாப்பா. எங்களிடம் இருப்பது பச்சைப்பயிறு மூடை' என பொய் சொன்னார். சிறுமியோ ஏமாற்றத்துடன் சென்றாள்.

மறுநாள் காலையில் ஊருக்கு வந்தவர்கள் மூடையை பிரித்து பார்த்தபோது அதிர்ந்து போயினர். காரணம் அதில் பச்சைப்பயிறு இருந்தது.

அப்போதுதான் பொய் கூறியவருக்கு தன்னிடம் வந்த சிறுமி தெய்வ சக்தி வாய்ந்தவள் என்பது புரிந்தது. இதை அங்கிருந்தவரிடம் கூறியதோடு தன் தவறை உணர்ந்தார். பின் சிறுமி தனக்கு காட்சி கொடுத்த மாமரத்திற்கு அருகே கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டினார். மறுநிமிடமே பச்சைப்பயிறு அனைத்தும் மிளகாக மாறின. இவ்வாறு கோயில் கட்டி அம்மனுக்கு 'மாங்கரை அம்மன்' என்ற பெயரும் சூட்டினர்.

மாங்கரை அம்மன் எட்டு கைகளுடன் வலது காலை மடித்து இடது காலை மஹிசாசூரனை வதம் செய்த நிலையில் காட்சி தருகிறாள். பிரகாரத்தில் விஸ்வநாதர், விசாலாட்சி, கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான், மகாலட்சுமி, வேட்டைக் கருப்பணசாமியும் உள்ளனர்.

எப்படி செல்வது

பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் 30 கி.மீ.,

விசேஷ நாள்: ஆடிப்பூரம், நவராத்திரி ஆருத்ரா தரிசனம், தைமாதப் பிறப்பு

நேரம்: காலை 6:00 - 10:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 0491 - 258 3327

அருகிலுள்ள தலம் திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில் 82 கி.மீ., (நினைத்தது நிறைவேற...)

நேரம் : அதிகாலை 5:00 - 10:30 மணி; மாலை 5:00 - 7:30 மணி

தொடர்புக்கு: 98954 03524





      Our Apps Available On




      Dinamalar

      Follow us