Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/தலவிருட்சங்கள் - 31

தலவிருட்சங்கள் - 31

தலவிருட்சங்கள் - 31

தலவிருட்சங்கள் - 31

ADDED : டிச 22, 2023 05:13 PM


Google News
Latest Tamil News
பேரூர் பட்டீஸ்வரர் கோயில் - பனை மரம்

பிரம்மனைப் போல் படைப்பு தொழிலை செய்து பெருமை பெற வேண்டும் என நினைத்த காமதேனு பசு, அரச மரங்கள் நிறைந்த பேரூர் என்ற அடர்ந்த காட்டில், புற்று வடிவில் இருந்த சிவலிங்கத்திற்கு பால் சொரிந்து வழிபட்டு கடுந்தவம் இருந்தது.

அப்பொழுது காமதேனுவின் கன்றுக்குட்டி பட்டி தன் காலால் புற்று லிங்க தலையை இடித்து விட்டது. பதறிப்போன காமதேனு பசு, கண்ணீர் மல்க வழிபட்டு மன்னிப்பு கோர காமதேனு முன் தோன்றிய சிவன் உனது கன்றுக்குட்டி பட்டி அறியாமல் செய்த தவறை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்.

அதன் அடையாளமாக எனது உடம்பில் எப்பொழுதும் உனது கன்றின் குளம்படி இருக்கும். நீ விரும்பிய படைப்பு தொழிலை உனக்கு தருகிறேன். திருக்கருகாவூர் சென்று தவம் செய். நீ எனக்கு இங்கு பால் சொரிந்து வழிபட்ட இந்த ஊர் காமதேனுபுரம் என்றும், பட்டியின் கால் என் மேல் பட்டதால் என்னை பட்டீஸ்வரர் என்றும் பெயர் பெறட்டும் என வரம் அருளியதுடன் தன் காலில் அணிந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழும்படி ஆனந்த தாண்டவம் ஆடினார். ஆகவே பேரூரில் உள்ள இந்த கோயில் மேலசிதம்பரம் எனப் பெயர் பெற்றது.

பச்சைநாயகியுடன் சுவாமி பட்டீஸ்வரர் என்னும் பெயருடன் வீற்றிருக்கிறார். கன்றுக்குட்டி குளம்படி தடத்துடன் திருமேனியில் ஐந்து தலைபாம்பு படமெடுத்த நிலையில், சடைமுடியில் கங்கையும், மேலே அன்னமாக பிரம்மாவும், கீழே வராகமாய் மகாவிஷ்ணுவும் இருக்க சுயம்புலிங்கமாக சிவன் காணப்படுகிறார். பன்னீர் மரங்கள் சிவலிங்கத்தின் மீது பூக்களை சொரிவதால் நறுமணம் கமழ்கிறது.

ஒருமுறை இங்கு வந்த திப்புசுல்தான் இங்குள்ள சிவலிங்கம் தழும்புடன் காணப்படுவதையும், அவ்வப்போது லிங்கம் அசையும் என்பதையும் கேள்விப்பட்டு தொட்டு பார்த்தபோது மன்னர் மயங்கி விழுந்தார்.

சுயநினைவு வந்தபின் பட்டீஸ்வரரை வணங்கி, கோயிலுக்கு நிலங்களை மானியமாக வழங்கினார். ஹைதர்அலியும் நிலத்தை மானியம் அளித்துள்ளார். மரகதக்கல்லால் ஆன பச்சைநாயகி புன்முறுவலுடன் காட்சியளிக்கிறார். சுவாமியும், அம்மனும் நாற்று நட்டதை கண்ட நாயன்மாரான சுந்தரர் தேவாரப்பாடல் பாடி வழிபட்டார்.

பொராசஸ் பிளேபெளிபர் (Borassus flabellifer) என்னும் தாவரவியல் பெயர் கொண்ட மேக்னோலியோப்சிடா குடும்பத்தைச் சார்ந்த பனைமரமே பட்டீஸ்வரக் கோயிலின் தலவிருட்சம். பல நுாறு ஆண்டுகள் வயதான பனைமரம் 'இறவாப்பனை' எனப்படுகிறது. அதுபோல் இங்குள்ள பழமையான புளியமரம், அரசமரம் கோயிலின் தொன்மையை பறைசாற்றுகிறது. புளியம்பழத்தின் கொட்டைகள் முளைப்பதில்லை. ஆகவே புளியமரத்தை 'பிறவாப்புளி' என்கின்றனர்.

இம்மரத்தை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது. இங்கு இறப்போரின் காதில் நமச்சிவாய மந்திரம் சொல்லி தன்னுடன் சிவன் சேர்த்துக் கொள்கிறார். கோசாலையில் உள்ள பசுக்களின் சாணம் தெய்வத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுவதால் புழுக்கள் தோன்றுவதில்லை.

சித்தர் போகர் பாடிய பாடல்

பனைமரத்தின் பேர்தனையே பகரக்கேளு

பண்பான திரணராச முமேயாகுங்

குனையான கிருஷ்ணகெந்த கிருஷ்ணகாயா

கூரான தலதாலப் பிராஞ்சுதீர்க்கந்

தினையான கிரிபீச குலீரமாகுஞ்

சீர்பாகி துரரோகதீர்க்க தண்டாம்

நினையான லேகபத்திர பகற்பலியாம்

நிட்சயமாம் பனையினுடப் பேருமாமே.

திரனராசம், கிருஷ்ண கந்தம், கிருஷ்ண காயம், தலதாளப்பிறா, ஐஞ்சு தீர்த்தம், கிரிபீசம், புளியிடம், சீர்பாகிபுரம், போகதீர்த்ததண்டு, லேக பத்ரம், பகர்பளி என்னும் பெயர்களை போகர் குறிப்பிடுகிறார்.

அகத்தியர் பாடிய பாடல்

பனங்குருத்து தின்றாற் பகருதிர மூலங்

கனம்பெருகும் பேதியுமாங் காண்

இளம் குருத்தை அதிகம் சாப்பிட பேதியும், ரத்த மூலம் உண்டாகும்.

பனையிலுறு பூவதுதான் பங்கமுறாக் குன்ம

வினையகற்றும் நீர்க்கட்டை மீட்கும்-முனையான

பன்னோய் ஒழிக்கும் பழஞ்சுரத்தைப்

போக்கிவிடும்

மின்னே இதனை விளம்பு.

பனம்பூவை தொடர்ந்து சாப்பிட வயிற்றுபுண், நீர்க்கட்டு, பல் நோய்கள், நீடித்த காய்ச்சல் தீரும்.

நீர்வார் வியர்க்குருவை நீக்குமன லாக்கந்தோற்

சார்வா மயஞ்சீதந் தானொழிக்குஞ்-சேர்வார்

விழிக்கரையாந் துஞ்சளிக்கு மென்சுரத மானே!

சுழிக்கரையாந் தாளியிளங் காய்.

பனைமரத்திலிருந்து கிடைக்கும் நுங்குவை சாப்பிட கழிச்சல் நீங்கும். பசி உண்டாகும். பேதி நீங்கும். நுங்கிலிருந்து எடுக்கப்படும் நீரை தடவினால் வியர்க்குரு மறையும். நுங்குவை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட உடல் சூட்டினால் ஏற்படும் பேதி நீங்கும்.

பனைவிசிறி தன்னாற் பருத்தொரு வாத

விமையுமைய நோயும் விலகுங்-கனைபித்த

நோயு மருசியென்ற நோயுங் குடியேகுந்

தேயுமிடை மாதே! தெளி.

பனைவிசிறியை கொண்டு விசிற வாதநோய்கள், கபம் மறையும். உடல் குளிர்ச்சியடையும்.

விந்துதிர மூறுமதி வெப்புடனே தாகம்வோம்

பந்தமாந் தாதுவுமோ பாரிக்கும்-உந்துபித்தந்

நோன்றும்பா டாணங்கள் சுத்தியுமாந்

தோகைமின்னே!

என்ற பனைமதுவிற் கே.

பனங்கள் உடம்புக்கு வலிமையும், ஆண் தன்மையும் அளிக்கும். தாகம் தணியும்.

சித்தர் தேரையர் பாடிய பாடல்

மேக வனலுமிக வீசுமசூரிகையால்

ஆக முறுகனலு மாறுங்காண்-மேகனத்தில்

தங்கிவரு நீர்ச்சுருக்குந் தாகவெப்ப முந்தணியும்

இங்குபனங் கற்கண்டுக் கே.

பனை மரத்தில் இருந்து எடுக்கப்படும் பனங்கற்கண்டு, அம்மை நோயின் தீவிரம், நீர் எரிச்சல், காய்ச்சல் ஆகியவை நீங்கும்.

வட்டுபன வெல்லத்தால் மார்பெரிச்சல்

குன்மமறும்

முட்டுந் திரிதோஷம் முன்னிற்கா - கட்டுமடா

வாந்தி ருசியின்மை வாளா யுற்றிடினும்

சாந்தி பெருகுமென்றே சாற்று.

பனை வெல்லத்தால் வயிற்றுப்புண்கள் ஆறும்.

பனையிலுறு பூவதுதான் பங்கமுறாக் குன்ம

வினையகற்று நீர்க்கட்டை மீட்கும் - முனையான

பன்னோ யொழிக்கும் பழஞ்சுரத்தைப்

போக்கிவிடு

மின்னே யிதனை விளம்பு.

பனம்பூவை சுட்ட சாம்பலை கொடுக்க சிறுநீர் நன்கு பெருகும்.

சித்தர் தன்வந்திரி பாடிய பாடல்

பனையினது பழமினிப்பாய் பித்த வீர்த்தி

பண்ணும்விதை மதுரம்ரத்த மூத்திரமாற்று

மினியதென்னம் பழமதுர மந்த முஷ்ண

மினையில்பிலன் தரும்பித்தம் போக்கு மேனி

தனைவளர்க்குந் தசைசீ தாளப் பனைதான்

இனிப்புச் சுவையுடைய பனம்பழம் பித்தத்தை ஏற்படுத்தும். சிறுநீரில் ரத்தம் செல்வதை கட்டுப்படுத்தும்.



எப்படி செல்வது: கோயம்புத்துாரில் இருந்து சிறுவாணி செல்லும் வழியில் 6 கி.மீ.,

நேரம்: காலை 6:00 - 1:00 மணி; மாலை 4:00 - 8:30 மணி

தொடர்புக்கு: 0422 - 2607 991

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567





      Our Apps Available On




      Dinamalar

      Follow us