Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/நீதி தெய்வம்

நீதி தெய்வம்

நீதி தெய்வம்

நீதி தெய்வம்

ADDED : பிப் 13, 2025 11:40 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்துக்கு அருகில் உள்ள திருத்தலம் மடப்புரம். இங்கு வைகை ஆற்றின் வடகரையில் ஆவேசமாக நிற்கிறாள் நீதி தெய்வமான பத்திரகாளி.

முன்பு பிரளய காலத்தில் மதுரையை வெள்ளம் சூழ்ந்ததால் நகரின் எல்லை தெரியாமல் போனது. இதன்பின் மதுரைக்கு எல்லை காட்ட சிவபெருமான் தன் கழுத்திலுள்ள பாம்பை அனுப்பி வைத்தார். அது மதுரையின் எல்லைகளாக மேற்கில் திருவேடகம், தெற்கில் திருப்பரங்குன்றம், வடக்கில் திருமாலிருஞ்சோலை, கிழக்கில் திருப்புவனத்தை காட்டியது. அதன் பின்னர் தன் விஷத்தை இங்கு உமிழ்ந்தது. அதன் தாக்கத்தால் மதுரை மீனாட்சி அம்மன் ஆவேசத்துடன் பத்திரகாளியாக இங்கு எழுந்தருளினாள்.

வலது கையில் திரிசூலத்தை ஏந்தியபடி கிழக்கு நோக்கியபடி காளி நிற்கிறாள். அநீதியை அழிக்கும் கோலம் கொண்ட அவளின் தலையில் உள்ள அக்னி கிரீடம் தீமையைச் சுட்டெரிக்கிறது. எலுமிச்சை மாலை அணிந்தபடி கோரைப் பல்லோடு நிற்கும் அவளுக்கு முன்புறம் பூத கணங்களும், பணிப்பெண்களும் நிற்கின்றனர். தலைக்கு மேலே பிரம்மாண்டமான குதிரை உள்ளது. அதன் இருபுறமும் பூத கணங்கள் குதிரையின் கால்களைத் தாங்கியபடி நிற்கின்றனர்.

தவறு செய்த அனைவருக்கும் இந்தக் காளியின் பெயரைச் சொன்னால் குலை நடுங்கும். 'வாங்கின காச இல்லேன்னு சொல்லிட்டல்ல, மடப்புரம் காளி உனக்கு கூலி கொடுப்பா'ன்னு சொன்னால் போதும். காசு வாங்கினவன் தேடி கொண்டு வந்து கொடுத்திடுவான். ஆட்சி, அதிகாரத்துக்கு பயப்படாதவன் கூட, மடப்புரம் காளி பேரக் கேட்டா அடங்குவான். காவல் தெய்வமான இவள் செய்வினை, பில்லி, சூன்யத்தை பொசுக்கிடுவாள்.

'கோர்ட், கேஸ்ன்னு நடையாக நடக்கிறேன். முடிஞ்ச பாடில்லை எனத் தவிப்பவர்கள் காளியை சரணடைந்தால் போதும். நீதியை நிலைநாட்டுவாள். வேண்டுதல் நிறைவேறியதும் அம்மனை சாந்தப்படுத்த எலுமிச்சம்பழ மாலையை அணிவித்து புடவை சாத்துகின்றனர்.

வெள்ளி அன்று உச்சிக்காலத்தில் சிறப்பு பூஜை, தமிழ் மாத முதல் செவ்வாய் அன்று திருவிளக்கு பூஜை நடக்கிறது. வெயிலில் நிற்கும் அம்மனுக்கு நிழல் பரப்ப தன் குதிரையை தந்ததால் இங்கு அய்யனார் 'அடைக்கலம் காத்த அய்யனார்' எனப்படுகிறார். கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மணிகர்ணிகா தீர்த்தத்தில் நீராடினால் பாவம் தீரும்.

எப்படி செல்வது

* மதுரையில் இருந்து 19 கி.மீ.,

* சிவகங்கையில் இருந்து 30 கி.மீ.,

விசேஷ நாள்: வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை.

நேரம்: காலை 6:00 - இரவு 8:00 மணி

தொடர்புக்கு: 04575 - 272 411

அருகிலுள்ள கோயில்: திருப்புவனம் பூவனநாதர் 2 கி.மீ., (பித்ரு தோஷம் அகல...)

நேரம்: காலை 6:00 - 11:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி

தொடர்புக்கு: 94435 01761, 04575 - 265 082





      Our Apps Available On




      Dinamalar

      Follow us