Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/வலம் வர முடியாத சிவன் சந்நதி

வலம் வர முடியாத சிவன் சந்நதி

வலம் வர முடியாத சிவன் சந்நதி

வலம் வர முடியாத சிவன் சந்நதி

ADDED : பிப் 05, 2013 01:50 PM


Google News
Latest Tamil News
திருநாவுக்கரசர் கயிலாயக்காட்சி பெற்ற திருத்தலமான திருவையாறில் மூலவர் சிவன் ஜடாமுடியுடன் காட்சி தருகிறார். இவரது சந்நிதியை பக்தர்கள் வலம் வர முடியாது.

தல வரலாறு:





சிலாத மகரிஷியின் மகன் செப்பேசர். பிறக்கும்போது அவருக்கு நான்கு கைகள் இருந்தன. சிலாதர் ஒரு பெட்டியில் குழந்தையை வைத்து விட்டு மூடித் திறந்ததும், சிவனருளால் இரு கைகள் மறைந்து அழகான குழந்தையாக மாறியது. அந்தக் குழந்தையை திருவையாறு கோயிலில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்த குழந்தைக்கு அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், அமிர்தம், சைவ தீர்த்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகிய ஐந்து பொருட்களால் அபிஷேகம் செய்தார். இந்த காரணத்தால் அவர் 'ஐயாறப்பர்' எனப்பட்டார். இந்தக் குழந்தையே நந்தீஸ்வரர் என்னும் திருநாமம் பெற்று சிவன் கோயில்களில் காளை வடிவில் இடம் பெற்றது. திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர் நந்தீஸ்வரரே. தருமபுரம், திருவாவடுதுறை ஆதீனங்கள் இந்தப் பரம்பரையைச் சேர்ந்தவை.

கூலிக்குத் தங்கம்:





இங்குள்ள தியான மண்டபம் சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்டது. இக்கலவையை சேகரித்து வைக்க பெரிய இரண்டு குழிகள் இங்கு தோண்டப்பட்டிருந்தன. பணியாட்களுக்கு கூலியாக தங்கமும் வெள்ளியும் வழங்கப்பட்டது. இரண்டு குழிகளில் அவற்றை நிரப்பி வைத்திருந்தனர். பணியாட்கள் தங்களால் முடிந்த அளவு கூலியாக தங்கம், வெள்ளியை அள்ளிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தோண்டப்பட்ட நான்கு குழிகளும் இப்போதும் உள்ளன.

அஷ்டமியில் திருமணம்:





அம்பிகை அறம் வளர்த்த நாயகியாக வீற்றிருக்கிறாள். ஆண்கள் தர்மம் செய்வதைவிட, பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அந்த அடிப்படையில் உலக உயிர்களுக்கெல்லாம் படியளக்கும் நாயகியாக, தர்மத்தை நிலைநாட்டும் விதத்தில் இவள் காட்சி தருகிறாள். எல்லா நாளும் நல்லநாளே என்பதை வலியுறுத்தும் விதத்தில், அஷ்டமி திதியன்று இரவில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது. அம்பிகை விஷ்ணு அம்சமாக திகழ்வதால், திருவையாறு எல்லைக்குட்பட்ட பகுதியில் பெருமாள் கோயிலே இல்லை என்பது குறிப்பிடத்ததக்கது.

அர்ச்சகர் சிவன்:





இக்கோயிலில் அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்துவந்தார். ஒருமுறை காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்கு உரிய நேரத்தில் வரமுடியவில்லை. இந்த தகவல் அரசனுக்கு தெரிவிக்கப்பட்டது. அவன் கோபத்துடன் கோயிலுக்கு வந்த போது சம்பந்தப்பட்ட அர்ச்சகரே சிவனுக்கு பூஜை செய்து கொண்டிருந்தார். காசிக்கு சென்ற அர்ச்சகரோ மறுநாள் திருவையாறு வந்தார். அவரைக் கண்ட ஊராரும் அரசனும் ஆச்சரியப்பட்டனர். ஐயாறப்பரே அர்ச்சகர் மீதுள்ள அன்பால், அர்ச்சகராக வடிவெடுத்து வந்து தனக்குத் தானே பூஜை செய்ததை அனைவரும் அறிந்தனர். உண்மை பக்தர்களுக்காக எதையும் செய்பவர் இவர்.

கைலாயக் காட்சி:





மானசரோவர் ஏரியில் மூழ்கிய திருநாவுக்கரசர் இங்குள்ள சூரிய புஷ்கரணி குளத்தில் வந்து எழுந்தார். இதனால் இக்குளத்தில் நீராடியவருக்கு மானசரோவரில் நீராடிய புண்ணியமும், கைலாயத்தை தரிசித்த புண்ணியமும் கிடைக்கும்.

சுற்ற முடியாத சந்நிதி:





மூலவர் ஐயாறப்பர் லிங்கவடிவில் எழுந்தருளியிருக்கிறார். அவரது ஜடாமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து கிடப்பதாக ஐதீகம். அதனை யாரும் மிதிக்கக்கூடாது என்பதால் சந்நிதியை சுற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கத்தின் மேற்பரப்பில் ஜடாபாரம் (கொண்டை) இருப்பதையும் தரிசிக்கலாம்.

காலடியில் ஆமை:





இங்குள்ள தட்சிணாமூர்த்தி விஷ்ணுவால் வழிபடப்பட்டவர். எனவே இவருக்கு 'ஹரிஉரு சிவயோக தட்சிணாமூர்த்தி' என்று பெயர். இவரது காலடியில் முயலகனுக்கு பதிலாக ஆமை இருப்பது மாறுபட்ட அமைப்பு. கஜலெட்”மி, சரஸ்வதிக்கும் சந்நிதி இங்குண்டு.

ஏழுமுறை எதிரொலி:





வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு 'ஐயாறப்பா' என சப்தம் கொடுத்தால் ஏழு முறை எதிரொலி கேட்கும். கட்டடக்கலையின் நுணுக்கத்தை வெளிப்படுத்தும் இந்த அமைப்பு இங்குள்ள தனிச்சிறப்பு.

கும்பாபிஷேகம்:





இக்கோயிலில் திருப்பணி நிறைவேற்றப் பெற்று பிப்.7ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. பிப்.3 முதல் பிப்.7 வரை யாகசாலை பூஜை நடக்கிறது. பிப்.7 காலை 9 மணிக்கு மீன லக்னத்தில் ராஜகோபுர கும்பாபிஷேகமும், காலை 9-10.45 மூலவர் கும்பாபிஷேகமும், இரவு9 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடக்கிறது.

இருப்பிடம்:





தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ.,

திறக்கும் நேரம் :





காலை 6 -11 , மாலை 4- இரவு 8.30

போன் :





04362-260 332

-மகாலட்சுமி சுப்பிரமணியம்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us