Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 9

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 9

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 9

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 9

ADDED : மார் 27, 2023 08:48 AM


Google News
Latest Tamil News
பாண்டவர்களின் கைலாச தரிசனம்

குபேரனிடம் இருந்து விடைபெற்ற பாண்டவர்கள் கைலாச பர்வதம் இருக்கும் துாரத்தை முதலில் அறிய முற்பட்டனர். ஜோதிட சாஸ்திரத்திலும், காலக்கணக்கு போடுவதிலும் ஞானியான சகாதேவன் ஒரு காரியம் செய்யலானான். தன் சகோதரர்களை பார்த்து தானறிந்த ஜோதிடத்தின் வழியாக தன் ஜாதகத்தை முன்மாதிரியாக கொண்டு வழிபாடு புண்ணியத்திற்குமான காலகதி எப்போது வருகிறது என கணக்கிட்டான்.

அதன்படி அன்றைய வெள்ளிக்கிழமை தொட்டு அடுத்து வரும் ஞாயிறன்று உச்சிப் பொழுதில் கைலாயகிரி கண்ணுக்கு புலனாகப் போவதை சந்திரன், குரு என்ற கிரகங்களை வைத்து அறிந்தான்.

அவன் கணக்குப்படி தான் எல்லாம் நடந்தது. கைலாச கிரி என்னும் லிங்க பர்வதம் ஞாயிறு மதியம் பொன்மலையாக காட்சியளித்தது.

பாண்டவர்கள் ஐவரும் திரவுபதியுடன் கூடி அந்த கிரியை வலம் வந்து வணங்கினர். முன்னதாக மானசரோவ தீர்த்தத்தில் நீராடினர். அப்போது தேவர்கள் அன்னப்பறவை வடிவில் வந்து நீராடுவதையும் கண்டனர். அந்த அரிய காட்சிகள் அவர்களுக்கு புதிய தெம்பைக் கொடுத்தது.

''அண்ணா வனவாச காலத்திலேயே உன்னதமான தருணம் இதுதான்'' என்றான் நகுலன்.

'' துரியோதனன் தண்டிப்பதாக கருதிக் கொண்டு புண்ணியர்களாக்கி விட்டான்'' என்றான் தர்மன்.

''அண்ணா... இங்கே கிரிவடிவில் காட்சி தரும் மகாதேவரை நேரில் கண்டு பாசுபதாஸ்திரம் பெற்ற தருணம் நினைவுக்கு வருகிறது'' என்றான் அர்ஜுனன். ''அர்ஜுனா... நீ பாக்கியவான்! எங்களுக்கெல்லாம் இந்த பஞ்சபூத வடிவம் தான் தரிசிக்க கிடைத்துள்ளது. உனக்கோ நேர்முகமே வாய்த்து விட்டது'' என பீமன் புகழ்ந்தான். அப்போது அர்ஜுனனும் பாசுபதாஸ்திரத்தை தியானித்து வரவழைத்தான். அது பேரொளியோடு ஜொலித்தது.

''இதுவே அந்த அஸ்திரம்! ஒருமுறை இதை எய்தால் கூட போதும். பூமியே சாம்பலாகும். எனவே நிராயுத பாணியாகி விட்ட நிலையிலும், எதிரி அழிக்கப்பட முடியாத பாவியாக இருக்கும் போதே இதை பிரயோகிக்க வேண்டும். அதுவும் ஒருமுறைதான் பிரயோகிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மகாதேவர் அளித்தார்'' என்றான்.

அதை கைலாய கிரியின் அடித்தளப்பரப்பில் தரையில் பதிந்து நிற்கும்படி செய்து அதோடு கூடி கைலாய கிரியை வணங்கினர்.

மீண்டும் அவர்களின் பயணம் தொடங்கியது. விருஷபர்வா முனிவரின் ஆசிரமத்தை அடைந்து சற்று இளைப்பாறியவர்கள் விருஷபர்வாவிடம் கைலாச கிரி தரிசன பரவசத்தை பகிர்ந்து கொண்டனர். மகிழ்ந்த விருஷபர்வா, ''கைலாய நாதனை தரிசித்தது போலவே மகாவிஷ்ணுவை தரிசிக்க வேண்டாமா'' எனக் கேட்டார்.

''இந்த இமயச் சாரலில் ஸ்ரீவிஷ்ணுவுக்கும் தலம் இருக்கிறதா'' என ஆவலாகக் கேட்டாள் திரவுபதி.

''ஏன் இல்லை... மகாதேவன் சிரசென்றால் ஸ்ரீவிஷ்ணு பாதமாவார்! அந்த பாத கதியை குறிக்கும் இடம் தான் விசாலை எனப்படும் பத்ரிநாத்'' என்றார் விருஷபர்வா. ''அப்படியானால் அந்த பாதகதியில் நாங்களும் இளைப்பாறி ஆசி பெற விரும்புகிறோம்'' என்றான் தர்மன்.

விருஷபர்வாவும் வழிகாட்டிட பத்ரிநாத்தை அடைந்து ஒரு மாதம் தங்கினர். அது மார்கழி மாதமாக இருந்து விட்டதால் திரவுபதி அதிகாலையில் கங்கையில் நீராடி, பின் பத்ரிநாதனை பூஜித்தாள். அக்னியில் உதித்த அவளை குளிரால் ஏதும் செய்ய இயலவில்லை. திரவுபதி அருகில் இருப்பதால் கணப்பின் அருகில் இருப்பது போல் உணர்ந்தனர் பாண்டவர்கள்.

பின் அங்கிருந்து சுபாகு என்ற அரசனின் நகரத்தை அடைந்தனர். சுபாகு வரவேற்று உபசரித்தான். பாண்டவர்களை வணங்குவதன் மூலம் மகாதேவரின் அருள் கிட்டும் என நம்பினான். இந்தவேளை சுபாகுவோடு இருந்த மகரிஷி ஒருவர், ''கைலாய யாத்திரை முடித்து வருவோரைக் காண்பது பெரும் புண்ணிய செயல். அந்த புண்ணியம் நம் கணக்கில் பக்தி உடையவர்களை நாம் அலட்சியம் செய்திருந்தால் அதனால் உண்டான பாவத்துக்கு பரிகாரமாகும்'' என்று கூறவே சுபாகு பாண்டவர்களுக்கு பாதபூஜை செய்து வழிபட்டான்.

சில தினங்கள் சுபாகுவின் அதிதிகளாய் தங்கிய நிலையில் வனவாச காலத்தின் பன்னிரண்டாம் ஆண்டை துவக்கினர். பரத கண்டம் முழுக்க அவர்கள் பாதம் பதித்து நடந்ததில் பலப்பல வனங்கள், தீர்த்தங்கள், நதிகளில் நீராடி அருளுக்கு ஆட்பட்டிருந்தனர்.

பன்னிரண்டாம் வருடத்தில் பிரதானமாக அவர் அதிக நாளை கழித்தது விசாகயூபம் வனப்பரப்பில்தான்! இந்த வனம் குபேரனின் கந்தமாதன பர்வத வனத்திற்கு இணையானது. அருவி, ஓடை, நதி, ஏரி, குளம் ஆகிய ஐந்துவகை நீர்நிலைகளும் இருந்தன. இவற்றில் நீராட உடல் துாய்மையாவதோடு தேகத்தின் நாடிகளைத் துாண்டி பரிமளிக்கச் செய்பவை இவை.

ஐவகை நீர்த்தலமான வனத்தைக் கருதி இங்கேயே தங்களின் வனவாச இறுதி காலத்தை கழிக்க தீர்மானித்தனர். அதற்கேற்ப குடில் அமைத்து, அகழி வெட்டி தீ வளர்த்து தங்கினர். அருகிலேயே அருவி இருந்திட திரவுபதி தினமும் நீராட விரும்பினாள். பறவைகளின் ஜாலங்கள், மரங்களின் கனிவகைகள், மரங்களின் வாசம் என அந்தச் சூழலின் ரம்யத்தில் கிரங்கிப் போனாள்.

தர்மனும் தினமும் யோக நிஷ்டை புரிந்திட நகுல சகாதேவர்கள் வேட்டையில் ஈடுபட்டனர். அர்ஜுனன் தனுர் பயிற்சியில் ஈடுபட்டான். வல்லுாறை குறி பார்ப்பதில் இருந்து, மரக்கனிகளை எல்லாம் பாணத்தால் பறிப்பதில் சாதுர்யம் காட்டினான்.

பீமனோ சந்தனம், தேன், மலை ஆடுகளின் பால் இவற்றுக்காக வனத்திற்குள் அலைந்தான். அப்படி திரியும் போது ஒருநாள் ஈரமான தரைப்பரப்பில் வளைவான தடயம் ஒன்றைக் கண்டான். அது என்னவாக இருக்கும் என அந்த தடயத்தின் மேலேயே நடந்தும் சென்றான். அதுவோ வளைந்து வளைந்து எங்கெல்லாமோ சென்று இறுதியில் ஒரு குகையின் வாசலில் முடிந்தது.

குகையின் உட்புறத்தில் பெரிதாக யாரோ மூச்சு விடும் சப்தம் கேட்டது. அந்த நொடியே பீமனின் மனதில் ஒரு மாற்றம். தன் உடல் சக்தி முழுவதையும் இழந்தது போல சோர்வு ஆட்கொண்டது. தனக்கு இவ்வாறு ஏற்பட எது காரணம் என்ற கேள்வியும் எழுந்தது. அது தெரிய வேண்டும் என்றால் உள்ளிருக்கும் மர்மம் தெரிய வேண்டும். யார் அப்படி மூச்சு விடுபவர்... மாயாவியா... ராட்சஷனா... இல்லை ஏதாவது மிருகமா என பல கேள்விகளுடன் மெல்ல உள்ளே நுழையலானான். அந்த குகைப் பாதையும் வளைந்து நெளிந்து சென்றபடியே இருக்க மூச்சுக் காற்று சப்தமும் பெரிதாக கேட்கத் தொடங்கியது.

ஒரு கட்டத்தில் விசாலமான தரைப்பரப்பு தென்பட்டது. பக்கவாட்டில் ஒரு துவாரம் வழியாக சூரியக் கதிர்கள் விழுந்து அந்த இடம் பளிச்சென தெரிந்தது. சுற்றிலும் உருண்டையாய் தட்டையாய் பலவிதங்களில் பாறைகள்! அவைகளின் மேல் பாம்புச் சட்டைகள் கிடந்தன. ஒரு சட்டையை பீமன் எடுத்து பார்க்கத் தொடங்கினான்.

அது முப்பதடி நீளம், மூன்றடி அகலம் உடையதாக இருந்தது. அவ்வளவு பெரிய சர்ப்பம் அங்கே தான் எங்கோ பதுங்கி இருக்க வேண்டும், அது விடும் மூச்சுதான் பெரும் சப்தமாக கேட்பதை புரிந்து கொண்ட பீமன் நாலாபுறமும் பார்த்தான். சற்றும் எதிர்பாராத விதமாக அவன் தலைக்கு மேல் இருந்து அந்த பாம்புச் சட்டைக்குரிய சர்ப்பம் அப்படியே கீழறங்கி பீமனை சுற்றி வளைக்கத் தொடங்கியது. ஆயிரம் யானை பலமுடைய பீமன் எவ்வளவு முயன்றும் ஏதும் செய்ய முடியவில்லை. பாம்பு தன் கோர வாயைத் திறந்து,''வா மானிடா வா... என் நெடுநாள் பசிக்கு ஆகாரமாக வந்து சிக்கினாயா'' எனக் கேட்டு ஆச்சரிய அதிர்வளித்தது.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us