Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 8

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 8

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 8

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 8

ADDED : மார் 14, 2023 12:28 PM


Google News
Latest Tamil News
மாதலியுடன் வந்த அர்ஜுனன்

மாதலியை தடுத்து நிறுத்திய அர்ஜுனன் அவனை சகோதரர்களுக்கு அறிமுகப்படுத்த தொடங்கினான்.

'என் சகோதரர்களே... பிரியமான திரவுபதி! நீங்கள் அனைவரும் இந்த மாதலி என்ற தேவபுருஷனை அறிவது அவசியம். இவன் இந்திர லோகத்தை சேர்ந்தவன். அஸ்த சாஸ்திரம் அறிந்தவன்! அதே போல விண்ணில் ரதத்தை செலுத்துவதில் சமர்த்தன். இவனால் சகல லோகங்களையும் கண்டேன். 'வசுக்கள், ருத்ரர்கள், சாத்யர், மருத கணங்கள், அஸ்வினி தேவர்கள்' என சகலரையும் வணங்கி ஆசி பெற்றேன்.

நான் சென்ற லோகங்களில் எல்லாம் சூரிய வெளிச்சம் இருந்தது. ஆனால் வெம்மை இல்லை. அதே போல சகலரிடத்திலும் ஒரு ஒளியைக் கண்டேன். உடலில் வியர்வையோ, அழுக்கோ இல்லை. காற்றிலும் வாசம்! இப்படி என் அனுபவம் விசித்திரம் பல உடையது. அந்த அனுபவம் கிடைக்க மாதலியே காரணம்'' என அர்ஜுனன் மாதலியை அறிமுகம் செய்ய தர்மன் உள்ளிட்ட சகோதரர்கள் வணங்கி தேவ புருஷனே எங்களின் மனமார்ந்த நன்றிகள்'' என்றனர். மாதலியும் பதிலுக்கு நன்றி கூறி விடை பெறலானான். அவன் வந்த அஷ்டபுரவி ரதம் விண் மீது மேகம் போல மேலேறிச் சென்ற காட்சி அலாதியாக இருந்தது. அதன்பின் சகோதரர்களும் திரவுபதியும் அர்ஜுனனிடம் மனம் விட்டு பேசலாயினர். ''தம்பி... தேவலோக வாழ்வு உனக்கு பெரும் பொலிவை அளித்துள்ளது. நீ பெரும் தேஜசுடன் ஜொலிக்கிறாய்'' என்றான் தர்மன்.

''ஆம் தம்பி... உன்னைப் பார்க்க பெருமிதமாய் உள்ளது. இந்திரனின் அமர லோகத்தில் உன் வாழ்வு எப்படி இருந்தது என சொல்வாயா?'' என பீமன் கேட்டான்.

''அற்புதம் அண்ணா! அங்கே பகல், இரவு, மூப்பு, இளைப்பு, பசி, தாகம் இல்லை. எல்லோர் முகங்களிலும் மகிழ்ச்சியை கண்டேன். பல தவ சிரேஷ்டர்களையும் கண்டு அளவளாவினேன். அதே போல நாட்டியம், மல்யுத்தம், வில்வித்தை, ஓவியம், சிற்பம், வாத்யம் என கலைப்பயிற்சியும் பெற்றேன்''

''இந்த கலைகளில் எனக்கு பிடித்த சமையல் இல்லையா?'' என்றான் பீமன்.

''பசியிருந்தால் தானே சமையல் வேலை''

''அப்படியானால் உணவு ருசியையே உணராதவர்களா தேவர்கள்?''

''இல்லை. பழங்கள், மலர் வகைளை கண்டேன். அவைகளின் ரசங்களை உண்டேன். உணவு ரத்த புஷ்டியாகி உடம்போடு கலந்து விடுகிறது''

''ஐந்தாண்டு இப்படியா பொழுது போனது''

''ஆம்... அதே சமயம் தேவர்களின் விரோதியான 'நிவாத கவசர்' எனப்படும் அசுரர்களை நான் அழிக்க நேர்ந்தது''

''இது என்ன விந்தை... தேவ சக்தியை விட உயர்ந்ததா மனித சக்தி?''

''இல்லை. நிவாத கவசர்கள் வரசித்தி அப்படி! மானிடனால் அன்றி அழிவு கூடாது என வரம் பெற்றிருந்தனர்''

''பரவாயில்லையே... இந்திரன் கெட்டிக்காரன்! உன்னை இப்படி தனக்கும் பயன்படுத்திக் கொண்டு விட்டானே?''

''ஆம்... பதிலுக்கு திவ்ய கவசம் என்னும் மந்திர கவசம், தேவதத்தம் எனப்படும் சங்கு பின் திவ்ய கிரீடத்துடன் திவ்ய அஸ்திரங்களை பரிசளித்தான்''

''அப்படியா...எங்கே அவைகளை பார்க்கலாமா?'' என நகுலனும் சகாதேவனும் ஒருசேரக் கேட்டனர்.

அர்ஜுனன் திவ்ய கவசத்தை வரவழைத்து அதை அணிந்தான். பின் திவ்ய கிரீடத்தை தரித்தான். அதன்பின் தேவதத்த சங்கினை வரவழைத்து அதைக் கொண்டு முழக்கமிட்டான். அந்த முழக்கம் அவனுக்கே புதிது... அதன் சப்தம் குபேரனின் அழகாபுரிப் பட்டினம் கடந்து எதிரொலித்தது. அதன் விளைவாக நில நடுக்கம் ஏற்பட்டது. பறவைகள் எழும்பி பறக்கத் தொடங்கின. அந்த அதிர்வு குபேரனையும் வரவழைத்தது.

அர்ஜுனனோ சங்கு முழக்கத்தை தொடர்ந்து திவ்ய தனுராயுதத்தை எடுத்து அதில் பாணத்தை பூட்டி வானத்தில் ஏவிவிட்டு அதன் வலிமையைக் காட்டத் தயாரானான். அப்போது ''நாராயண... நாராயண'' என்ற குரல் ஒலித்திட வேகமாய் நாரதர் அவர்களை நோக்கி வந்த வண்ணமிருந்தார். அவரைக் காணவும் அர்ஜுனன் திவ்ய தனுராயுதத்தை கீழே வைத்து விட்டு வணங்கினான். மற்றவர்களும் நாரதரை வணங்கினர்.

நாரதர் எதிரில் அர்ஜுனன் திவ்ய கவசம், கிரீடம் சங்கம், தனுராயுதம் என ஜொலிப்புடன் தெரிந்தான். ''அர்ஜுனா... உன்னை பார்க்கும் போது என் கண்ணே பட்டு விடும் போலுள்ளது. அழகின் சொரூபமாய், வீரபுருஷனாய் கண்களில் நிரம்பி வழிகிறாய். இத்தனை அழகான நீ பெரும் விபரீதத்தை செய்யத் துணிந்து விட்டது தான் விந்தை'' என்றார் நாரதர்.

அவர் கருத்தால் எல்லோர் முகங்களிலும் அதிர்ச்சி.

''நாரத முனியே...என்ன இது? பாராட்டுவது போல தொடங்கி, விபரீதம் என முடித்து விட்டீர்களே?'' என பீமன் ஆவேசமானான்.

''பொறுமை பீமசேனா. நல்லவேளை நான் இப்போது வரவும் அர்ஜுனன் இந்த தனுராயுதத்தில் பாணத்தை பிரயோகிக்கவில்லை. சங்கொலி என்னை இழுத்து வந்து விட்டது. அதனால் விபரீதங்களும் தடுக்கப்பட்டன''

''அது என்ன விபரீதம்?''

''தேவதத்த சங்கினை போர்க்களமின்றி வேறிடத்தில் முழக்கிடக் கூடாது. அதே போல திவ்ய தனுராயுதத்தையும் சரியான எதிரிகள் இல்லாத நிலையில் ஏந்திப் பிடித்து பாணம் தொடுக்கக் கூடாது''

''அப்படியா... இது எனக்கு தெரியாதே?''

''ஹும்... இதை உனக்களித்த இந்திரன் இதைச் சொல்லாமல் விட்டு விட்டானே? இது அவன் தவறு''

''மீறி பாணம் தொடுத்தால் என்னாகும்''

''இது பெரும் அழிவை ஏற்படுத்தும் அஸ்திரம்! இதன் அழிவுச்சக்தியே இந்த அஸ்திரம் கக்கும் புகைதான்! அந்த புகையோ விஷப்புகை. அது காற்றில் பரவியதும் சகல உயிரினங்களும் அழிந்து விடும்''

''வனத்தில் இதை தொடுத்தால் கூடவா?''

''வனத்து விருட்சங்களும் உயிரினங்கள் தானே? அவை பட்டுப் போய்விடும். மீண்டும் துளிர்க்காது. அதே போல வனத்தில் வாழும் ஏனைய உயிரினங்களும் மூச்சுமுட்டி இறந்து விடும்'' நாரதர் சொல்லச்சொல்ல அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். பின் தர்மன் நாரதருக்கு நன்றி கூறலானான்.

''பிரம்ம புத்திரரே! கோடி வந்தனங்கள்! நல்ல வேளையாக பெரும் ஆபத்தில் இருந்து எங்கள் எல்லோரையும் காப்பாற்றி விட்டீர்கள். உங்கள் வருகைக்கும் கருணைக்கும் நன்றி'' என்றான்.

''நம்மை மட்டுமா? பிரபஞ்சத்தையே என்று சொல்லுங்கள்'' என்றான் குபேரன்.

அதன்பின் நாரதர் ஆசி கூறி புறப்பட்டு விட்ட நிலையில் அர்ஜுனனோடு குபேரனும் குலாவி மகிழ்ந்தான். ''என்வசம் கூட இது போல அஸ்திரம் இல்லை. அம்மட்டில் நீங்கள் மேலான வீரர்'' என போற்றினான்.

அதன்பின் சில நாட்கள் சென்ற நிலையில் பாண்டவர்கள் தங்களின் உச்ச இலக்கான கைலாய பர்வதம் நோக்கி புறப்படத் தயாராயினர். குபேரனும் அவர்களை தன் அழகாபுரிப் பட்டின எல்லை வரை வந்து வழியனுப்பி வைத்தான்.

நெடிய வனத்தில் அவர்கள் நடக்கத் தொடங்கவும், ''என் புஷ்பக விமானத்தில் உங்களை எல்லாம் கைலாய பர்வதத்தில் இறக்கி விட்டு விடவா... நீங்கள் நடந்து செல்வது எனக்கு வருத்தமளிக்கிறது'' என்றான் குபேரன். ஆனால் தர்மன் மறுத்து விட்டான்.

''குபேரரே... உமது அக்கறைக்கும் கருணைக்கும் என் நன்றி. பொதுவில் எங்கள் வனவாசத்தில் நாங்கள் நடந்து திரிவது தான் எங்களுக்கான தர்மம். அதிலும் கைலாய கிரியை எங்கள் திருப்பாதங்களால் தீண்டி மகிழ்ந்திடவே விரும்புகிறோம். வழிபாடுகளில் கயிலை தரிசனமே மேலானது. அதை சிரத்தையுடன் செய்வதே சிறப்பு. யாத்திரையின் சிறப்பே பாதங்கள் மண் மீது அழுந்தப் பதிவதில் தானே உள்ளது'' என்று சொல்லவும் குபேரனால் மறுக்க முடியவில்லை!

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us