ADDED : ஜூலை 03, 2024 01:25 PM

வரவிருந்த ஆபத்து
தொழில் நிமித்தமாகத் திருச்சிக்குச் சென்று விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தேன். நால்வழிச் சாலையில் கார் சீரான வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. மனவோட்டம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது.
எதிர்வழியில் வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரைத் தாண்டி காருக்கு முன் வந்தது. என் பலத்தை எல்லாம் பயன்படுத்தி பிரேக் போட்டு காரை நிறுத்தினேன். லாரிக்கும், காருக்கும் அரையடி இடைவெளி இல்லை. நல்லவேளை சேதமில்லை. அருகிலேயே சுங்கச் சாவடி இருந்ததால் ஆட்கள் வந்தனர். நடந்ததை விளக்கி விட்டுக் கிளம்பினேன்.
இப்போது வண்டி ஓட்டவே பயமாக இருந்தது. அந்த லாரி, காரின் மீது பாய்ந்திருந்தால் கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்திருக்கும். கண்டத்தில் இருந்து என்னைக் காப்பாற்றியிருக்கிறாள் பச்சைப்புடவைக்காரி.
அன்று மாலை அவளை நினைத்துக் கண்ணீர் சிந்தியபடி கோயிலுக்குச் சென்றேன். கோயில் வாசலில் நின்ற பெண் போலீஸ் வழிமறித்து, “உங்களைச் சோதனை செய்யணும்”
“ஏற்கனவே...''
“எனக்கு சந்தேகமா இருக்கு”
சற்றுத் தள்ளி இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று என்னைப் பார்த்து அழகாகச் சிரித்தாள்.
“சோதனை செய்யப் போவதாக...''
“நான் உருவாக்கியவனை நானே ஏனப்பா சோதனை செய்ய வேண்டும்?”.
தாயின் கால்களில் விழுந்து வணங்கினேன்.
“பெரிய கண்டத்தில் இருந்து தப்பினாய். இதை விடப் பெரிய கண்டத்தை நீ எதிர்கொள்ள வேண்டியிருக்கு. அதில் தப்புவாயா என சந்தேகமே”
“தாயே”
“பதறாதே. தவ வலிமை அதிகமுள்ள ஒருவர் வாழ்த்தினால் ஆபத்து விலகும்”
தவ வலிமை உடையவரைத் தேடி நான் எந்தக் காட்டுக்குச் செல்வது?
“நான் சொல்லும் இடத்துக்குச் செல். அங்கே ஒரு மகா தபஸ்வி இருக்கிறாள். அவளை வணங்கினால் போதும்”
விவரங்களை வாங்கிக் கொண்டு தாயை வணங்கி விட்டுக் கிளம்பினேன்.
மறுநாள் காலை ஆறு மணிக்கு நெரிசலான அந்தத் தெருவில் ஒரு சிறிய வீட்டின் முன்பு நின்றிருந்தேன். வாசல் தெளித்துக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்த வீட்டில் எப்படி ஒரு மகா தபஸ்வி இருக்க முடியும் என சந்தேகமோ?”
“தாயே! நீங்களா?”
“நானேதான்.இங்கே அமர்ந்து கொள். அவள் செய்து கொண்டிருக்கும் தவத்தைப் பற்றி நீ அறிவாய்”
மனத்திரையில் காட்சிகள் ஓடின.
மரகதத்திற்குக் காலாகாலத்தில் திருமணமானது. கணவன் அவள் மீது உயிரையே வைத்திருந்தான். மறு வருடமே பூஜா பிறந்தாள்.
பூஜாவிற்கு 16 வயதான போது மரகதத்தின் கணவர் ஒரு சாலை விபத்தில் இறந்தார். மனதைத் தேற்றிக்கொண்டு மகளுக்காக வாழத் தொடங்கினாள்.
திடீரென ஒரு நாள் பூஜாவிற்குக் காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் ஆகியும் காய்ச்சல் குறையவில்லை. பல சோதனைக்குப் பின் மருத்துவர் பெரிய குண்டைத் துாக்கிப் போட்டார்.
“உங்க மகளுக்கு வந்திருப்பது அபூர்வமான நரம்பியல் நோய். காய்ச்சல் இரண்டு நாள்ல குணமாயிரும். ஆனா இன்னும் நாலஞ்சு நாள்ல பேசற சக்திய இழந்துருவா. காதும் கேட்காது. நடமாட முடியாது. படுக்கையிலதான் கிடக்கணும்”
“ஆப்பரேஷன் பண்ணி சரியாக்க முடியாதா”
“இல்லம்மா. அமெரிக்காவுல இருக்கற என் நண்பர்கிட்ட கூட கேட்டேன். எதுக்கும் வழியில்லேன்னு சொல்லிட்டான்”
மரகதம் கதறினாள். ஆனால் ஒரு முறைகூட பச்சைப்புடவைக்காரியைத் திட்ட வில்லை. தன் கோபத்தை யாரிடமும் காட்டவில்லை.
தன் மகளை வீட்டிற்குக் கொண்டு வந்தாள் மரகதம். கடந்த 23 ஆண்டுகளாக படுக்கையில்தான் இருக்கிறாள் பூஜா. மரகதம் பேசினால் புரிந்து கொள்வாள். முகக்குறிப்பை வைத்தே அவளுக்கு என்ன தேவை என தெரிந்து கொண்டு செய்வாள் மரகதம்.
மரகதத்தின் கணவர் இறந்த போது அவளுக்கு 36 வயது ஆகியிருந்தது. தன் இன்பம், தன் வாழ்க்கை என எவ்வித தன்முனைப்பும் இன்றி எந்த பிரயோஜனமும் இல்லாத மகளைக் கவனித்துக் கொள்வதை ஒரு தவமாகவே செய்கிறாள் மரகதம்.
கருணைக் கொலை செய்தாலும் தப்பில்லை என பலர் மரகதத்திற்குக் கோடிட்டு காட்டி விட்டார்கள். அசைந்து கொடுக்கவில்லை.
“மரகதத்தின் காலில் நீ விழுந்து வணங்க வேண்டும். அவள் உன்னை வாழ்த்தினால் உன்னைச் சூழ்ந்திருக்கும் கண்டம் அகன்று விடும். நிம்மதியாக வாழலாம்”
கண்ணீர் மல்கக் கைகூப்பினேன்.
“நான் நிம்மதியாக வாழ்வது இருக்கட்டும், தாயே! என்னைச் சூழ்ந்திருக்கும் கண்டத்தில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணமும் என்னை விட்டுப் போய்விட்டது. மரகதத்தின் வாழ்க்கைக்கு என்னதான் அர்த்தம் தாயே? ஒருவேளை நான் கண்டத்தில் மாட்டிக்கொண்டால் மரகதத்திற்கோ அவள் மகளுக்கோ விடிவு காலம் பிறக்கும் என்றால் நான் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன். என்னதான் கர்மக்கணக்கு இருந்தாலும் ஒரு பெண்ணிற்கு இவ்வளவு துன்பமா தருவீர்கள்”
தாயின் சிரிப்பில் இருந்த அழகு என்னை உருக்கியது.
“சென்ற பிறவியில் மரகதம் துறவற வாழ்க்கை வாழ்ந்தாள். என்னைக் குறித்து நுாறு ஆண்டு தவம் செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டாள். தவத்தைத் தொடங்கினாள். அவளுடைய கர்மவினை காரணமாக அந்தத் தவம் தடைப்பட்டுவிட்டது.
“அவள் ஆன்மாவிடம் என்ன பிறவி வேண்டும் எனக் கேட்டேன். உங்களைக் குறித்து ஆயிரம் ஆண்டு தவம் செய்ய வேண்டும் எனக் கேட்டாள். தவம் செய்த பின் வரம் கேட்கும் சாதாரண முனிவர்கள் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். தவத்தையே வரமாகக் கேட்ட ஒரே ஜீவன் இவள்தான்.
“ஆயிரம் ஆண்டுகள் தவத்திற்கு இணையாக இந்த 23 வருடம் செயல்பாடில்லாத மகளைப் பேணும் வாழ்வைக் கொடுத்து விட்டேன்”
“அடுத்து என்ன நடக்கும் தாயே?”
“இன்னும் இருபது நாளில் மரகதத்தின் மகளுக்கு இயற்கை மரணம் சம்பவிக்கும். அடுத்த ஒரு மாதத்தில் மரகதம் இறப்பாள். என்னுடன் இரண்டறக் கலப்பாள்”
“இந்தச் சமயத்தில் மரகதம் என்னை வாழ்த்தினால் அவளுடைய தவவலிமை...''
“கொஞ்சம் குறையத்தான் செய்யும். அவளுடைய மகளின் மரணமும் அவளுடைய மரணமும் இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போகும். உன்னால் அவர்கள் இன்னும் ஏழு நாட்கள் அதிகமாகத் துன்பம் அனுபவிக்க வேண்டியதிருக்கும்”
“அப்படியென்றால் நான் மரகதத்தைப் பார்க்கப் போவதில்லை. இதோ உங்கள் காலில் விழுகிறேன். விதிப்படி நடக்கட்டும். இருந்தாலும் இறந்தாலும் உங்கள் திருவடி நிழலில்தான் இருப்பேன் என எனக்குத் தெரியும் தாயே”
தாயை வணங்கி எழுந்த போது என் தலையில் தன் பொற்கையை வைத்தாள். அதுவரை புரியாததெல்லாம் புரிந்தது.
“இந்த நாடகத்தின் காரணம் புரிந்து விட்டது, தாயே! உங்கள் அன்பைப் பற்றி மேலோட்டமாக எதையோ நான் எழுதி விட்டு என் எழுத்து என்பதே ஒரு தவம் அதில் நான் என்னையே அர்ப்பணம் செய்து கொண்டிருக்கிறேன் என அள்ளி விட்டுக் கொண்டிருந்தேன். தவம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என எனக்கு மரகதத்தின் வாழ்க்கை மூலம் பாடம் நடத்தி விட்டீர்கள். இனி மேல் எந்தக் கண்டத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறேன்”
என் தாய் மறைந்து விட்டாள். தாழிடப்பட்டிருந்த அந்த வீட்டுக் கதவைத் தொட்டு வணங்கி விட்டுக் கிளம்பினேன்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com