தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 3
ADDED : ஜன 31, 2023 10:49 AM

ஆர்ஷ்டிஷேணர்/ மணிமான்/ குபேரன்
மணிமான் என்பவனைப் பற்றி விருஷபர்வா கூறவும் பாண்டு புத்திரர்கள் நால்வரிடமும் ஒரு ஆச்சரிய அதிர்ச்சி. அதை நால்வரும் தங்கள் முகத்தில் எதிரொலித்தார்கள். அதைக் கண்ட விருஷபர்வா, ''இந்த மணிமான் என்ற பெயர் ஆச்சரியமும் அதிர்வும் தருகிறதா'' எனக் கேட்டார்.
''ஆம் மகரிஷி... இது பூலோக மாந்தருக்கான பெயர் போல தெரியவில்லையே'' என கேட்டான் சகாதேவன்.
''உண்மை தான். மணிமான் ஒரு யட்சன்! குபேரனின் தோழன். குபேர பட்டினத்தின் காவலாளி. இவனது அனுமதியின்றி கைலாச கிரியை ஒட்டியுள்ள அந்த வடகிழக்குப்பகுதியான அழகாபுரி எனும் கந்தமாதன பர்வதத்தை அடைய முடியாது''
குபேர பட்டினம் என்பது செல்லக் கூடாத இடமா என்ன... எதற்கு அனுமதி?'' கேட்டவன் நகுலன்.
''நல்ல கேள்வி... பூவுலகில் கைலாச கிரியை ஒட்டிய பகுதியே குபேரனின் இருப்பிடம். யட்ச வம்சத்தவனான குபேரன் ராவணனின் சகோதரனும் கூட! யட்சனுடைய தந்தையான விஸ்வரசினை ராவணனின் தாய் கேகசி தன்வசப்படுத்தவே ராவண, கும்பகர்ண, விபீஷண, சூர்ப்பனகை ஆகியோர் பிறந்தனர். குபேரன் இம்மட்டில் பின்னால் பிறந்தவன். இவன் ஒருவகையில் பிரம்மாவின் பேரன். விஸ்வரஸ் பிரம்மாவின் மானச புத்திரர். விஸ்வரசின் முதல் மனைவியான யட்சி புத்திரனே குபேரன். இவனிடமே நவநிதிகளையும் பிரம்மா ஒப்படைத்ததோடு ஒரு புஷ்பக விமானத்தையும் பரிசாக தந்திருந்தார்.
உலகில் வாழ அருட்செல்வமோடு பொருட்செல்வமும் அவசியம். அந்த பொருட்செல்வத்துக்கு அதிபதியாக இருப்பவன் குபேரன். இவனிடம் வழங்கப்பட்ட நிதியானது வற்றாது. ஒன்று பலவாகும் தன்மை உடையது. தேவர்களுக்கு சில கடமைகளை வகுத்து தந்தது போல, யட்ச இனத்தவருக்கும் அருள்புரியும் நோக்கில் குபேரனை பொருளுக்கான தேவன் என்றாக்கினான் பிரம்மன்.
இவனுக்கான இடமாக முதலில் இலங்கையே இருந்தது. ஆனால் ராவணனின் சூழ்ச்சியால் குபேரன் இலங்கையை இழந்து பின் கைலாச கிரியை ஒட்டி வந்தான். பின் தனக்கான பட்டினத்தை விஸ்வகர்மாவை கொண்டே 'அழகாபுரி' என்ற பெயரில் உருவாக்கினான். அன்று ராவணனால் உண்டான தாக்கமே குபேரன் இங்கு ஒரு பட்டினத்தை உருவாக்கிக் கொள்ளவும், அதனுள் அனுமதியின்றி யாரும் நுழையக் கூடாது என்ற கட்டுப்பாட்டை உருவாக்கியது. அதை செயல்படுத்துபவனே தளபதியாகவும், நண்பனாகவும் விளங்கும் மணிமான் என்பவன். விருஷபர்வ முனிவரின் விளக்கம் பாண்டு புத்திரர்களை வியப்பில் ஆழ்த்தியது.
''ராவண சகோதரனான குபேரன்... பலே! ராவணனும் அவன் சகோதரர்களும் அழிந்து விட்ட நிலையில் இவன் யுகம் கடந்தும் வாழ்ந்து வருவதில் இருந்தே இவனொரு சிரஞ்சீவி என்பது புரிகிறது.
நாங்கள் குபேரனை சந்திக்க விரும்புகிறோம். அது மட்டுமல்ல... அவனது அந்த அழகாபுரி பட்டினத்தையும் காண விரும்புகிறோம்'' என பீமன் கூறவும் சிரித்தார் விருஷபர்வா.
''ஏன் சிரிக்கிறீர்கள் ரிஷி?''
''குபேரன் என்ற உடனேயே எவராயிருப்பினும் இச்சை தோன்றும் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது உங்களையும் விடவில்லை. அதை எண்ணியே சிரித்தேன்''
''நீங்கள் நினைப்பது தவறு. என் விருப்பம் நவநிதிக்கான அதிபனைக் காண்பதில் அல்ல. யுகங்கள் கடந்தும் வாழ்ந்து வருபவன் ஒருயுக புருஷனல்லவா? அப்படி ஒரு யுக புருஷனைக் காணும் ஆசையில் தான் சொன்னேன்''
''நல்லது. குபேர சந்திப்பு என்பது சுலபமானதல்ல. நீங்கள் விரும்பினால் மட்டும் போதாது. குபேரனும் விரும்ப வேண்டும். அடுத்து மணிமானை வெற்றி கொள்ள வேண்டும். மணிமானைக் கடந்து குபேரனை சந்திப்பது என்பதும் இயலாத ஒன்று''
''இயலாதவைகளை சந்திப்பதும் அவைகளைக் கடப்பதுமே எங்கள் வாழ்க்கை என்றாகி விட்டது ரிஷி. எனவே நிச்சயம் மணிமானையும் சரி, குபேரனையும் சந்தித்தே தீருவேன்'' பீமன் உறுதியான குரலில் கூறினான்.
''பீமா... உன் உறுதி உன் சித்தம் ஈடேற துணை நிற்கட்டும். எனக்கு தெரிந்த விபரங்களை கூறினேன். என்னை விட ஆர்ஷ்டிஷேணர் கைலாயகிரி குறித்தும், குபேரனின் அழகாபுரிப் பட்டணம் குறித்தும் அதிகம் அறிந்தவர். யாத்திரையில் நீங்கள் அடுத்து சந்திக்க வேண்டியது ஆர்ஷ்டிஷேணரையே'' என்ற விருஷபர்வா பாண்டுபுத்திரர்களுக்கும், திரவுபதிக்கும் விடை கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அவர்களின் காட்டுவழிப் பயணம் மீண்டும் தொடர்ந்தது. இம்முறையின் வனத்தில் அவர்கள் கண்ட காட்சிகள் வனத்துக்கு இலக்கணம் போல் திகழ்ந்தன. பரம்பொருளின் சிருஷ்டிச் சிறப்பை எண்ணி திரவுபதி சிலிர்த்துப் போனாள்.
சில மரங்களில் இலைகளை விட பூக்கள் அதிகம் இருந்தன. அவைகளில் பலவிதமான பறவைகள் அடைந்து கிடந்தன. பெண் மயில்களும் ஆண் மயில்களும் குலவிக் கொண்டிருக்கும் நிலையில் சாரசம் என்கிற பட்சிகள் அவைகள் நடுவே பறந்து உரசிச் சென்றன. பிருங்க ராஜப் பட்சி என்ற அபூர்வ பட்சிகள் வல்லுாறுகளை தங்கள் மரங்களில் அடைய விடாதபடி தடுக்கப் பார்த்தன.
கண்ணில் பட்ட அவ்வளவு தடாகங்களிலும் தாமரைகள் மலர்ந்து தண்ணீரே தெரியாதபடி தடாக மேற்பரப்பு பச்சையும் சிவப்புமாக மட்டுமே கண்ணில் பட்டன.
யானைகள் பிளிறும் சப்தம் அவ்வப்போது கேட்டது. கண்ணில்பட்ட யானை எல்லாம் நான்கு கொம்புகள் கொண்டிருந்தன. இப்படி ஒரு வனப்பரப்பை தங்கள் யாத்திரையில் பாண்டவர்கள் அப்போது தான் பார்த்தனர்.
''இது அபூர்வமான நிலப்பரப்பு. நிலம், நீர், காற்று, வெளி என்னும் நான்கும் இங்கு சமபலத்தில் உள்ளது'' என்றாள் திரவுபதி.
''இந்த இடமே இப்படி இருந்தால் குபேரனின் வடகிழக்கு மூலையிலுள்ள அழகாபுரிபட்டினம் எவ்வளவு அழகானதாக இருக்கும் என எண்ணிப் பார்க்கிறேன்'' என்றான் நகுலன்.
''நாம் துரியோதனனை வென்ற நிலையில் நம் நாட்டையும் இந்த அழகாபுரி போல ஆக்க திட்டமிட வேண்டும்'' என சகாதேவன் கனவு காண தொடங்கி விட்டான்.
ஒருவழியாக விருஷபர்வ ரிஷி காட்டிய வழியில் நடந்து வனஅழகை ரசித்தவர்கள். ஆர்ஷ்டிஷேணரின் ஆசிரமத்தையும் கண்டறிந்து அவர் முன்னால் வணங்கிய கைகளோடு சென்று நின்றார்கள்.
ஆர்ஷ்டிஷேணர் தீர்க்கதரிசி. மஹாதபஸ்வி! எனவே பார்த்த மாத்திரத்தில், ''பாண்டு புத்திரர்களா... வருக! வருக!'' என்றார்.
''எங்களை தாங்கள் அறிந்து கொண்டது எங்ஙனம்'' எனக் கேட்டான் தர்மன்.
''ஒரு தபஸ்வியிடம் கேட்கக் கூடாத கேள்வி இது. யோகம் வயப்பட்ட ஒருவனுக்கு எதிரில் நிற்பவர் யார் எனத் தெரிய வருவதெல்லாம் ஒரு விஷயமே இல்லை'' என்றார் ஆர்ஷ்டிஷேணர்.
''நாங்கள் வந்திருக்கும் நோக்கம்'' என பீமன் பேசத் தொடங்கும் முன்பே கையை உயர்த்திய ஆர்ஷ்டிஷேணர், ''உங்களை அறிந்த எனக்கு உங்கள் நோக்கத்தை அறிய இயலாதா... அதையும் அறிவேன். ராஜ்யத்தை இழந்து வனவாசம் என்ற தண்டனை காலத்தை நீங்கள் உங்களுக்கான அருட்காலமாக மாற்றி வருகிறீர்கள். அந்த வகையில் கைலாச கிரிக்கு சென்று நீராடுவதும், அங்குள்ள மாமுனிகளின் ஆசிகளை பெறுவதும் உங்கள் நோக்கம்.
இடையில் குபேர பட்டினமாகிய அழகாபுரியையும் காண விரும்புகிறீர்கள்... சரிதானே?'' - ஆர்ஷ்டிஷேணர் நேராக விஷயத்துக்கு வந்து விட்டார்.
''மிகச்சரி மஹரிஷி. உங்கள் திவ்ய திருஷ்டியை எண்ணி வியக்கிறோம். உங்கள் வழிகாட்டுதலால் எங்கள் விருப்பம் ஈடேறும் என நம்புகிறோம்'' என்றான் தர்மன்.
''நிச்சயம் ஈடேறும். ஆனால் ஒரு யுத்த களத்தைக் காணாமல் அது ஈடேறாது'' என அதிர்ச்சியளித்தார் ஆர்ஷ்டிஷேணர். அப்படிச் சொல்லவும் பாண்டவர்கள் உள்ளிட்ட திரவுபதி முகத்தில் பலத்த அதிர்ச்சி!
''யுத்தமா'' என ஒரே குரலில் கேட்டனர்.
''ஆம்... யட்சர்களின் நிலப்பரப்பில் எங்களுக்கே கூட இடம் கிடையாது. இந்த வனத்து மிருகங்கள் கூட யட்சபூமி பக்கம் செல்கையில் அதன் எல்லையை தீண்டாது. மணிமான் என்பவன் அப்படி எல்லைப் பாதுகாப்பு செய்துள்ளான்'' என்று மணிமானைத் தொட்டு முடித்தார் ஆர்ஷ்டிஷேணர்!
-தொடரும்
இந்திரா செளந்தர்ராஜன்