Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/அசுர வதம் - 21

அசுர வதம் - 21

அசுர வதம் - 21

அசுர வதம் - 21

ADDED : மார் 15, 2024 11:14 AM


Google News
Latest Tamil News
சுவர்பானு வதம்

துர்வாச முனிவரின் சாபத்தால் இந்திரன் அனைத்து சக்திகளையும் இழந்தான். அதனை அறிந்த அசுரர்கள், தேவலோகத்தின் மீது படையெடுத்தனர். அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே நடந்த போரில் அசுரர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

அசுரகுலக் குருவான சுக்கிராச்சாரியார் மிருதசஞ்சீவினி என்னும் மந்திரம் மூலம், கொல்லப்பட்ட அசுரர்கள் அனைவருக்கும் உயிர் கொடுத்தார். அதனால் அசுரர்களின் பலம் குறையாமல் இருந்தது.

இப்போரில் தேவர்களின் படை பலம் குறைந்து கொண்டேப் போனது. அசுரர்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாத தேவர்கள் தப்பியோடவே, தேவலோகத்தைக் கைப்பற்றினர். திருமாலிடம் சென்ற இந்திரன், “அசுரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டாலும் சுக்கிராச்சாரியார் உதவியுடன் மீண்டும் உயிர் பெற்று விடுகின்றனர். தேவர்களுக்கு உயிரிழப்பு இல்லாமல் இருந்தால்தான் இனி அசுரர்களை வெல்ல முடியும்” என்றான்.

“திருப்பாற்கடலைக் கடைந்தால் அமிர்தம் கிடைக்கும். அதை அருந்துபவர்களுக்கு மரணம் கிடையாது என்று அசுரர்களிடம் தெரிவியுங்கள். அவர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடையும் பணியைத் தொடங்குங்கள்” என்றார் திருமால்.

பாற்கடலைக் கடைந்து, மரணமில்லாப் பெருவாழ்வு தரும் அமுதம் எடுக்கலாம் என்ற தகவலை அசுரர்களிடம் இந்திரன் தெரிவித்தான். ஆசையுடன் அவர்களும் சம்மதித்தனர்.

தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து மந்தரமலையைத் துாக்கிப் பாற்கடலில் நிறுத்தினார்கள். வாசுகி என்ற பெரிய பாம்பைக் கயிறு போலச் சுற்றினார்கள். பாற்கடலைக் கடையத் தேவையான மத்தும் கயிறும் தயாராகி விட்டது. தேவர்களும் அசுரர்களும் கடைந்தார்கள்.

பாற்கடலில் இருந்து காமதேனு என்ற பசு, கற்பக விருட்சம், உச்சஸ்சிரவஸ் என்ற அதிசயக் குதிரை, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, பாரிஜாத மரம், கற்பக விருட்சம், சங்கு என ஒவ்வொன்றாக வெளியானது. அவற்றைத் தொடர்ந்து அப்சரஸ் என்னும் தெய்வப் பெண்கள் வெளிப்பட்டனர். அதன் பின் தன்வந்திரி பகவான் அமுதக் கலசத்துடன் வந்தார். அதைக் கண்ட தேவர்களும் அசுரர்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தன்வந்திரியைத் தொடர்ந்து, மிகுந்த ஒளியுடன் திருமகள் வெளிப்பட்டாள். அவள் திருமாலோடு சேர்ந்து காட்சி தந்தாள். அந்தத் தெய்வீகக் காட்சியைக் கண்ட தேவர்கள் இருவரையும் வணங்கினர். அவ்வேளையில் தன்வந்திரியின் கையிலிருந்த அமுதக் கலசத்தைப் பறித்துக் கொண்டு அசுரர்கள் ஓடத் தொடங்கினர்.

அதைக் கண்ட தேவர்கள் கலசத்தை மீட்டுத் தரும்படி திருமாலிடம் வேண்டினர். மோகினி உருவம் கொண்ட திருமால், அசுரர்களின் முன்னிலையில் நடனமாடத் தொடங்கினார். தன்வந்திரியிடம் இருந்து பறித்து வந்த அமுதத்தைப் பங்கிடுவதற்காகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த அசுரர்கள், மோகினியின் அழகில் மயங்கியதால் அமுத கலசதத்தையே மறந்தனர்.

அப்போது மோகினி, “பாற்கடலில் இருந்து அமுதத்தை பெற தேவர்களுடன் சேர்ந்து செயல்பட்டிருக்கிறீர்கள். இதை நீங்கள் மட்டும் அருந்தினால் அதன் பலன் முழுமையாகக் கிடைக்காது. இருதரப்பும் அமுதத்தைப் பகிர்ந்து உண்டு மரணமில்லாத வாழ்வு பெறுங்கள்” என்றாள்.

பின்னர் அவள் தானே அமுதத்தை இரு தரப்புக்கும் பகிர்ந்தளிப்பதாகத் தெரிவித்தாள். மோகினியின் அழகில் மயங்கிக் கிடந்த அசுரர்களும் அதற்கும் சம்மதித்தனர்.

உடனே தேவர்களை ஒரு புறமும், அசுரர்களை மற்றொரு புறமும் அமரச் செய்தாள் மோகினி. முதலில் தேவர்களுக்குக் கொடுக்கத் தொடங்கினாள். அசுரர்களின் கவனமெல்லாம் மோகினியின் அழகில் இருந்தது. தேவர்களின் கவனம் அமுதம் பருகுவதில் இருந்தது.

அசுரர்களுக்கு அமிர்தத்தைத் தருவது ஆபத்தானது எனக் கருதிய மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிர்தம் கிடைக்கும்படி செய்தாள். அசுரர்களுக்கு மோகினியின் சூழ்ச்சி விளங்கவில்லை.

ஆனால் சுவர்பானு என்ற அசுரன் மட்டும் சூழ்ச்சியை உணர்ந்தான். தன்னை தேவர்கள் போல மாற்றிக் கொண்டு சூரியன், சந்திரனுக்கு இடையில் அமர்ந்து கொண்டான். கவனிக்காத மோகினியும் சுவர்பானுவிற்கும் அமிர்தம் அளித்தாள். அவனும் உடனடியாகப் பருகினான்.

சூரியனும் சந்திரனும் தங்களுக்கிடையே அமர்ந்தவன் தேவர் அல்ல; அசுரன் என மோகினிக்கு உணர்த்தினர். மோகினியும் அமுதம் வழங்கும் அகப்பையால் சுவர்பானுவின் தலையைத் துண்டித்தார். அவனது உடல் வேறு, தலை வேறாகப் பிரிந்தது.

அமுதத்தை உண்ட காரணத்தால் உயிர் பிரியவில்லை. அமுதத்தை உண்டதால் உடலும் அழியவில்லை.

தேவர்கள் கூட்டத்தில் ஒருவனாக அமர்ந்து அமுதம் அருந்திய சுவர்பானுவின் செயல் நச்சுத்தன்மை கொண்டதாக இருந்ததால், அவனது துண்டான தலைக்குப் பாம்பின் உடலும், உடலுக்குப் பாம்பின் தலையும் தானாகத் தோன்றின.

சுவர்பானுவின் தவறைச் சுட்டிக்காட்டிய மோகினி, அசுரர்களுக்கு அமுதத்தை வழங்க மறுத்து தேவர்களுக்கு மட்டும் வழங்கினாள். அதனால் சுவர்பானுவின் மீது கோபம் கொண்ட அசுரர்கள், அவனை தங்கள் கூட்டத்தில் சேர்க்க மறுத்தனர். தேவர்களும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட சுவர்பானுவை தங்களுடன் சேர்க்க மறுத்தனர்.

இந்நிலையில் இரு உருவங்களைக் கொண்ட சுவர்பாணு தவத்தில் ஈடுபட்டான். அதைக் கண்டு மகிழ்ந்த சிவன் அசுரனின் பாம்பு உடலும், மனிதத் தலையும் கொண்ட உருவத்திற்கு ராகு என்றும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்ட மற்றொரு உருவத்திற்குக் கேது என்றும் பெயரிட்டார். இருவருக்கும் கிரகபதவியை அளித்து சிறப்பித்தார். முன்பு ஏழு கிரகங்களாக இருந்த நிலையில் ராகு, கேது சேர்க்கையால் ஒன்பது கிரகங்களாக ஆயின. ராகுவும், கேதுவும் நிழல் கிரகங்களாக உள்ளன.

-தொடரும்

ராகு, கேது காலம்

கிரகங்களில் தலா புதன், செவ்வாய், சனி, குரு, சுக்கிரன், சூரியன், ராகு, கேது என்ற வரிசையில் ஒன்றை விட மற்றொன்று பலம் பெற்றவை. ராகு, கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கப்படவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரம் ராகுவுக்குப் பலம் உண்டு. அதுவே ராகு காலம். அதே போல கேதுக்குரிய காலம் எமகண்டம்.

ராகு காலத்தில் புதிய முயற்சி மேற்கொள்வதில்லை, சுபநிகழ்ச்சி நடத்துவதில்லை. கேது காலம் எனப்படும் எமகண்டத்தில் தொடங்கும் செயல்கள் வெற்றி பெறுவதில்லை. இறப்புச் சடங்குகள் மட்டும் நடத்தலாம். பணம் அல்லது பயணம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வதில்லை. 'ராகுவைப் போல் கொடுப்பாரில்லை; கேதுவைப் போல் கெடுப்பாரில்லை' என்றும், 'ராகு கொடுத்துக் கெடுக்கும்; கேது கெடுத்துக் கொடுக்கும்' என்பன இவை பற்றிய பழமொழிகள்.

சூரிய, சந்திர கிரகணம்

மோகினியிடம் தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரனைப் பழி வாங்கும் நோக்கில் ராகு, கேது தவமிருந்தனர். காட்சியளித்த சிவனிடம், பகைவர்களான சூரியன், சந்திரனை விழுங்குவதற்கான வரத்தைக் கேட்டுப் பெற்றனர். இதையறிந்த சூரியன், சந்திரன் தங்களைக் காத்தருளும்படி சிவனை வேண்டினர். 'ராகு, கேதுவால் விழுங்கப்பட்டாலும் மூன்றே முக்கால் நாழிகைக்கு (ஒன்றரை மணி நேரம்) பின்பு அதிலிருந்து மீண்டு வந்து பிரகாசிப்பீர்கள்' என அருள்புரிந்தார்.

தேனி மு.சுப்பிரமணி

99407 85925





      Our Apps Available On




      Dinamalar

      Follow us