Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பச்சைப்புடவைக்காரி - 7

பச்சைப்புடவைக்காரி - 7

பச்சைப்புடவைக்காரி - 7

பச்சைப்புடவைக்காரி - 7

ADDED : மார் 15, 2024 11:13 AM


Google News
Latest Tamil News
வெட்டியானின் வேதனை

என் அறைக்குள் நுழைந்தவருக்கு நாற்பது வயதிருக்கும். சட்டை இல்லை. வேட்டி அழுக்காக இருந்தது. முகத்தில் பாதியைத் தாடியும் மீசையும் மறைத்திருந்தது.

உட்காரும்படி வற்புறுத்திய பிறகே தயக்கமுடன் அமர்ந்தார்.

“என் பேரு சோணைங்க. நான் ஒரு வெட்டியான். பொணம் எரிப்பது என் வேலைங்க”

இவருக்கு என்ன பிரச்னை இருக்க முடியும்?

“ஒரு வருஷமா என் மனச அரிக்கிற விஷயத்த சொல்லலாம்னு வந்தேங்க. அந்தக் கொடுமையக் கண்ணால பாத்தப்புறம் எனக்கு சாப்பாடு செல்லல. துாக்கம் வரலங்க. எரியற பொணத்துப் பக்கத்துல படுத்துக்கிட்டுக்கூடத் துாங்கிருவேன். இப்போ துாங்கவே முடியல”

“அப்படி என்ன பாத்தீங்க?”

அவர் சொல்ல ஆரம்பித்தார்.

இறந்தவருக்கு 70 வயதிருக்கும். சொந்தம் நட்பு என நுாறு பேர் சுடுகாட்டுக்கு வந்திருந்தார்கள். புரோகிதர் வழிகாட்ட இறுதிச் சடங்கு செய்தனர். இறந்தவரின் மூத்த மகன்தான் எரியூட்ட வேண்டும். அந்தச் சமயத்திலும் அவன் போதையில் இருந்தான். சடங்குகளை தட்டுத் தடுமாறிச் செய்து கொண்டிருந்தான். பிணத்தை வைத்து வறட்டிகளை அதன் மீதடுக்கி, இறந்தவரின் மகன் ஓட்டைப் பானையிலிருந்து தண்ணீர் வழிய பிணத்தைச் சுற்றி வந்த பின் எரியூட்டினான். உறவினர்களில் பலர் சென்ற பின், நெருங்கிய சொந்தக்காரர் நாலைந்து பேர் மட்டும் இருந்தனர்.

அப்போது மகன் எரிந்து கொண்டிருந்த பிணத்தைப் பார்த்தபடி சிகரெட்டைப் பற்ற வைத்தான். மற்றவர்கள் புகைப்பிடிக்க வேண்டாம் என தடுத்தனர். மகன் கேட்கவில்லை.

“புகைபிடித்து முடித்ததும் அந்தாளு செஞ்ச காரியம் இருக்கே…”

இதைச் சொல்லும் போதே சோணையின் கண்களில் கண்ணீர்.

“அந்தச் சிகரெட் துண்ட எரிஞ்சிக்கிட்டிருந்த பிணத்துமேல போட்டாருங்க மகன். எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சுங்க. நாங்க பரம்பரை பரம்பரையா வெட்டியானாத்தான் இருக்கோமுங்க. படிப்பெல்லாம் பெரிசா கிடையாதுங்க. எங்க அப்பாரு சொல்வாரு. ஒரு மனுஷன் உயிரோட இருக்கும் போது அவனுக்குக் கூடக் குறையாத்தான் மரியாதை கொடுக்கலாம். ஆனா சுடுகாட்டுக்கு வந்த பிணத்துக்குக் கொடுக்கற மரியாதை கொஞ்சம் கூடக் குறையக் கூடாது.

நான் எத்தனையோ பிணங்கள எரிச்சிருக்கேன். ஆனா எங்க அப்பாரு செத்தப்போ நான் அழுதுகிட்டேதாங்க இருந்தேன். அவரு பிணத்த எல்லா மரியாதையோடயும் எரிச்சேங்க. அப்படிப்பட்ட எனக்கு அந்த ஆளு சிகரெட்ட துாக்கி எரிஞ்சிக்கிட்டிருந்த அப்பா பிணத்துல போட்டது மனசுக்கு ஆறலைங்க. அந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் பச்சைப்புடவைக்காரி கண்ணக் குத்திக் கொல்லணுங்க. அந்தாளுகிட்ட நிறைய சொத்து இருக்காம். இன்னும் தண்ணியடிச்சிகிட்டுத் திரியறானாம். அவனுக்கு மாறு கால் மாறு கைய வாங்கலேன்னா பச்சைப்புடவைக்காரி என்னங்க கடவுள்?”

சோணையை என்னால் முடிந்தவரை சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

மறுநாள் காலை. தெருவில் நடந்து கொண்டிருந்த போது குப்பை கூட்டிக் கொண்டிருந்தவள் வழியை மறித்தாள்.

“என் வழிய ஏன் சாமி மறிக்கற?”

“நீங்கதான் என் வழிய மறிக்கறீங்க..”

என்னைப் பார்த்து சிரித்தாள். அந்தச் சிரிப்பே அவளை அடையாளம் காட்டியது.

“தந்தையை அவமதித்தவனுக்கு என்ன தண்டனை கொடுத்திருப்பேன் என அறிய ஆசையா?”

தலையாட்டினேன்.

“அவன் மனதில் வஞ்சம் இல்லை. அடுத்தவரைக் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் அனைத்தையும் உதாசீனம் செய்யும் அலட்சியம் இருக்கிறது. தான் செய்யும் செயலில் விளைவைப் புரிந்து கொள்ள மறுக்கும் அகம்பாவம் இருக்கிறது. அந்தப் போக்கே எமனாகப் போகிறது”

“எப்படி தாயே?”

“ஆறு மாதம் கழித்து அவன் வாழ்வில் நடக்கப்போவதைக் காட்டுகிறேன். பார்.”

காட்சி விரிந்தது. ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒருவன் படுக்கையறையில் இருந்தான். வீட்டில் வேறு யாருமில்லை. அவன் மது அருந்திக் கொண்டிருந்தான்.

தொலைக்காட்சியில் இருந்து வந்த சத்தம் காதை அடைத்தது. கையில் மதுக் கிண்ணம், மற்றொரு கையில் சிகரெட். மது இருந்த கோப்பையை அருகில் வைத்தபடியே படுத்துவிட்டான். எரிந்து கொண்டிருந்த சிகரெட்டைக் கை மாற்ற நினைத்தான். அந்த சமயம் பார்த்து அவனுக்கு இருமல் வந்தது. அந்த அதிர்ச்சியில் மதுக்கிண்ணம் கவிழ்ந்து மது படுக்கையில் கொட்டியது. எரிந்து கொண்டிருந்த சிகரெட் அதன் மீது விழ உடனே குபுக்கென்று பற்றியது.

அடுத்த சில நிமிடங்களில் படுக்கையும் அவனும் அப்படியே எரிந்து சாம்பலாகி விட்டனர். அவனால் கத்தக்கூட முடியவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது.

“தாயே! அந்தக் கொடியவனைக் கூட உங்களால் தண்டிக்க முடியாது. அந்தளவுக்கு உங்கள் மனதில் தாயன்பு இருக்கிறது”

“என்ன உளறுகிறாய்? இப்போதுதான் அவன் எரிந்து சாம்பலாவதைப் பார்த்தாய்?”

“அவனை நீங்கள் தண்டிக்கவில்லை, தாயே! அவனுடைய அலட்சியப் போக்குதான் தண்டித்தது. நாங்கள் செய்யும் பாவங்களுக்காக நீங்கள் எங்களைத் தண்டிக்கிறீர்கள் என எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் எங்கள் பாவங்கள்தான் எங்களைத் தண்டிக்கின்றன. அதையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்து விடுகிறீர்கள்.”

அன்னை சிரித்தாள்.

“உனக்கு என்ன வேண்டும் சொல்.”

“வெட்டியானின் மனம் அமைதியுற இதை அவனிடம் சொல்லட்டுமா?”

“வேண்டாம். இதைத் தெரிந்து கொண்டால் அவன் மனதில் வன்மம் வந்து விடும். அவனது ஆன்மிக வளர்ச்சி தடைப்படும்.”

“அவன் மனம் அமைதியுற வேறு என்னதான் வழி?”

“நீ அவன் இடத்திற்கே சென்று அவனைப் பார். அதிலேயே பாதி அமைதி வந்து விடும். அவனிடம் என்ன பேசவேண்டும் என நான் சொல்கிறேன்.”

அன்னை மறைந்து விட்டாள்.

மறுநாள் சுடுகாட்டிற்குச் சென்றேன். காவலாளியிடம் சோணையைப் பார்க்க வேண்டும் என்று சொன்னேன். அடுத்த சில நிமிடங்களில் சோணை வந்தார்.

“ஐயா நீங்க எதுக்குய்யா இங்க வந்தீங்க? சொல்லியிருந்தா நானே வந்திருப்பேன்ல?”

“எங்க எஜமானி உத்தரவு போட்டுட்டாங்க சோணை. நான் என்ன செய்ய முடியும்?”

அருகே இருந்த ஒரு கல்லில் அமர்ந்தோம்.

“சொல்லுங்கய்யா. அந்தாளுக்குப் பச்சைப்புடவைக்காரி என்ன தண்டனை கொடுத்தா?”

“யார் செஞ்ச பாவமும் வீணாப் போகாது சோணை. அதுக்குரிய தண்டனை நிச்சயம் கிடைக்கும். உங்களுக்கு அந்த தண்டனையப் பத்தி தெரியணுமா இல்லை உங்க வாழ்க்கையப் பத்தித் தெரியணுமா?”

“அந்தாளு எக்கேடு கெட்டா எனக்கு என்னங்கய்யா? எத்தனையோ மொள்ளமாறிப் பசங்க ராஜா மாதிரி வாழ்ந்துக்கிட்டிருக்காங்க. அதுல ஏதோ சூட்சுமம் இருக்கு. அது பச்சைப்புடவைக்காரிக்குத்தான் தெரியும். என் வாழ்க்கையப் பத்தி ஏதாவது சொல்லுங்க”

“உங்களுக்குக் கடுமையான தொழில கொடுத்து, கூடவே மென்மையான மனசையும் கொடுத்திருக்கா பச்சைப்புடவைக்காரி. அதனாலதான் அந்தாளு செஞ்சது உங்களப் பாதிச்சிருச்சி. உங்க மனசுல இருக்கற அன்பு மாறாம நல்லபடியா தொழில செஞ்சிக்கிட்டு வாங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும்”

சோணை எழுந்து நின்று கைகூப்பினார். பதிலுக்கு நானும் கைகூப்பி விட்டு சைகையாலேயே விடைபெற்றேன்.

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us