Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 22

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 22

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 22

சும்மா கிடைத்ததா சுதந்திரம் - 22

ADDED : மார் 20, 2025 02:02 PM


Google News
Latest Tamil News
பாஷ்யம் ஐயங்கார்

சில மாதங்களுக்குப் பிறகு பெல்லாரி சிறைக்கு பாஷ்யத்தை மாற்றினர். இங்கே பாஷ்யத்தைப் போலவே தனி நபராகப் போராடிய சிலர் சிறைபட்டிருந்தனர். பயங்கரமான சித்ரவதைக் கூடமான இங்கு சிறை அதிகாரியாக இருந்தவன் இன்ஸ் என்ற கொடுங்கோலன். சிறையிடப்பட்ட தியாகிகளை வதைத்து, ரத்தம் சிந்த வைத்து அதைப் பார்த்து மகிழ்பவன். ஒருமுறை பகத்சிங்கின் நண்பரான மஹாவீர்சிங், அவன் உத்தரவுப்படி தொப்பி அணிய மறுத்தார் என்பதற்காக, அவரைக் கட்டி, தலைகீழாகத் தொங்க விட்டு, பிற கைதிகள் முன்னிலையில் முப்பது கசையடிகள் தந்தான். 'இது உங்கள் அனைவருக்கும் ஒரு பாடம், என் உத்தரவுக்கும் அனைவரும் அடிபணிய வேண்டும்' எனக் கத்தினான்.

மஹாவீர்சிங் அனுபவித்த வேதனையைத் தானே பட்டதுபோல உணர்ந்தார் அங்கிருந்த பாஷ்யம். பழிக்குப் பழி வாங்க வேண்டும் எனக் கறுவினார்.

பொதுவாக கைதிகளுக்கு சிறை நிர்வாகமே காலணிகள் வழங்கும். ஆனால் பாதம் அகன்ற பாஷ்யத்துக்கு அவை பொருந்தாததால், தன் சொந்தக் காலணியை அணிவதற்கு அனுமதி அளித்திருந்தனர். அது லாடம் அடிக்கப்பட்ட காலணி. தனக்கு வயிற்றுப் போக்கு என்றும் அதனால் தான் அடிக்கடி சுகாதார அறைக்குப் போக வேண்டியிருக்கும் என்பதால் தன் அறைக்கதவு திறந்தே இருக்க வேண்டும் என அவரின் கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஒருநாள் தன் அறையில் இருந்து வெளியே வந்த பாஷ்யம், இன்ஸ் அறைக்குள் மெல்ல நுழைந்து அவனுக்குப் பின்புறம் சென்று லாடம் கட்டிய தன் காலணியால் அடி, அடி என அடித்தார். சந்தடி கேட்டு காவலர்கள் விரைந்து வருவதற்குள் லாட காலணித் தாக்குதலால் நிலைகுலைந்து போன இன்ஸ் மயங்கி விழுந்தான்.

மறுநாள் மயக்கம் தெளிந்து பழைய நிலைமைக்குத் திரும்பிய இன்ஸ் உத்தரவிட, பாஷ்யத்தை இரு கால்களையும் அகட்டி, தலைகீழாகத் தொங்க விட்டனர். பளீர், பளீர் என சவுக்கடி விழுந்தது. ஆனால் ஒவ்வொரு அடிக்கும், 'வந்தே மாதரம்' 'ஜெய்ஹிந்த்' என பாஷ்யம் உரத்த குரலில் கோஷமிட்டார். அது வேதனையால் எழுந்த குரல் அல்ல. தேசிய உணர்வின் வீர முழக்கம்.

இந்த விஷயம் வெளியே பரவியதும் எங்கும் கொந்தளிப்பு உண்டானது. உடனே இன்ஸ் இடமாற்றம் செய்யப்பட்டான். பாஷ்யம் விடுதலை செய்யப்பட்டார்.

1932ல், சென்னை கோட்டையின் முகப்பில் தனி பீடத்தில் ஏற்றப்பட்டிருந்த பிரிட்டிஷ் கொடியை வெறுப்புடன் பார்த்தார் பாஷ்யம். இதே கொடிக் கம்பத்தில் இந்தியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க வேண்டும் என தீர்மானித்தார். அதைச் செயல்படுத்த உடனே முயற்சிகள் மேற்கொண்டார். அதற்கு ஜவகர்லால் நேருவின் பேச்சும் துாண்டுகோலாக அமைந்தது. ஆமாம், 1932 ஜன.26 அன்று இந்திய சுதந்திர தினமாக அனுசரிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

கோட்டையில் எப்படியாவது இந்தியக் கொடியை ஏற்ற வேண்டும் என தீர்மானித்த பாஷ்யம், ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கி, இந்தியக் கொடி கிடைக்குமா எனக் கேட்டார்.

பலர் ஆட்சியாளருக்கு பயந்து அவரை விரட்டினர். ஓரிரு கடைகளில், ரகசியமாக மறைத்து வைத்திருந்த கொடியும் சிறிய அளவானதாக இருந்தது. கோட்டையில் ஏற்ற வேண்டுமானால் பிரிட்டிஷார் கொடியைப் போலவோ அல்லது அதை விடப் பெரிதாகவோ அல்லவா இந்திய தேசியக் கொடி இருக்க வேண்டும்? பாஷ்யம் தானே கொடி தயாரித்தார். நான்கு முழ வேட்டியையும் காவி, பச்சை மற்றும் நீல வண்ணப் பொடிகளையும் வாங்கிக் கொண்டார். தன் அறைக்குத் திரும்பினார்.

வேட்டியின் மூன்றில் ஒன்றாக மேல்பகுதியை காவி வண்ண நீரில் நனைத்தார். வண்ணம் பிடித்துக் கொண்டதும் உலர வைத்து, கீழ் பகுதியை அதேபோல பச்சை வண்ணக் கலவையில் முக்கி எடுத்தார். இதுவும் உலர்ந்த பிறகு, நடுப்பகுதியில் நீலநிறத்தில் ராட்டையை வரைந்து கொண்டார். இந்திய தேசியக் கொடி ரெடி!

இதை கோட்டையில் 200 அடி உயரக் கம்பத்தின் உச்சியில் ஏற்ற வேண்டும்!

அதற்கு முன் சில நுணுக்கமான திட்டங்களையும் வகுத்துக் கொண்டார் பாஷ்யம். அதாவது கோட்டைக்குள் அவ்வளவு சுலபமாக யாரும் நுழைந்து விட முடியாது. ஆகவே காவல் சிப்பாய் போன்ற சீருடை அணிந்து கொண்டால் அப்போது தீவிர கண்காணிப்பில் இருந்து தப்பித்து விடலாம்! பாஷ்யம் அந்த சிப்பாய்களின் நடவடிக்கைகளை கவனித்தார். அவர்கள் குழு, குழுவாக, மவுன்ட்ரோடில் இருந்த எல்பின்ஸ்டன் தியேட்டரில் இரவு காட்சிக்கு வருவதைத் தெரிந்து கொண்டார்.

உடனே தனக்குப் பொருத்தமாக சிப்பாய் சீருடையைத் தயாரித்துக் கொண்டார். தான் உருவாக்கிய இந்தியக் கொடியை இடுப்பில் சுற்றிக் கட்டிக்கொண்டு, மேலே சட்டையால் மூடிக்கொண்டார். தியேட்டருக்குப் போனார். இரவு காட்சி முடிந்ததும் வெளியே வந்த சிப்பாய்களுடன் கலந்தார்.

கோட்டைக்குள் அவர்கள் தத்தம் பகுதிகளுக்குச் செல்ல, அந்த நள்ளிரவில், இவர் மெல்ல கொடி மேடை நோக்கிச் சென்றார். அந்த 200 அடி உயரக் கம்பத்தில், சில அடிகள் இடைவெளியில் கால் வைத்து ஏற வசதி இருந்தது. ஆனால் அதுவும் 140 அடி வரைதான். அதற்கு மேல் 60 அடிக்கு, கம்பத்தைக் கால்களாலும், கைகளாலும் இறுகத் தழுவிக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக மேலேற வேண்டும்!

140 அடி உயரத்தை எளிதாகக் கடந்த பாஷ்யம், கம்பத்தை உடும்புப் பிடியாக இறுகப் பற்றிக் கொண்டு இன்னும் மேலேறினார். இந்த சமயத்தில் சற்றுத் தொலைவில் இருந்த கலங்கரை விளக்கத்தின் சுழல் ஒளி இவர் மீதும் விழுந்தது. அப்போது, யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாதே என்று பளிச்சென கம்பத்துக்குப் பின்னால் நழுவி ஒளிந்து கொண்டார் அவர். இதோ, உச்சிக்குப் போய் விட்டார். கொடிக் கயிற்றுடன் பிணைக்கப்பட்டிருந்த ஆங்கிலேயக் கொடியின் முடிச்சுகளை அவிழ்த்தார்.

அதைத் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுக் கொண்டார். இடுப்பில் இருந்து இந்தியக் கொடியை எடுத்து அதே முடிச்சுகளுடன் பிணைத்தார். இந்தியக் கொடி விரிந்து, காற்றில் பட்டொளி வீசிப் பறந்தது. சாதனை நிகழ்த்திய நிறைவில், சரசரவென்று கீழிறங்கி இருளில் மறைந்து போனார்.

மறுநாள் காலையில், சிப்பாய்களின் கூக்குரல் கோட்டையையே அதிர வைத்தது. அதிகாரிகள் ஓடோடி வந்தனர். கொடிக் கம்பத்தின் உச்சியில் இந்தியக் கொடி அட்டகாசமாகப் பறந்து கொண்டிருந்தது. வெகு தொலைவில் மறைவாகப் பதுங்கியபடி இதை கவனித்த பாஷ்யம், கம்பத்தருகே கூடிய ஆங்கிலேய அதிகாரிகள், கண்ணுக்கு சூரிய ஒளித் தடுப்பாக வலது கையை நெற்றிக்கு மேல் வைத்துக் கொண்டு அண்ணாந்து அந்த 'விபரீத'த்தைப் பார்த்தது, நம் தேசியக் கொடிக்கே அவர்கள் ராணுவ மரியாதை செலுத்துவது போல் இருந்ததைக் கண்டு பாஷ்யம் மனசுக்குள் மகிழ்ச்சி ஆரவாரம் வெடித்தது.

ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷார் சல்லடை போட்டு சலித்துத் தேடியும், 'குற்றவாளி' யைப் பிடிக்க முடியவில்லை. இந்தியக் கொடி இறக்கப்பட்டு, பிரிட்டிஷ் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது என்றாலும், 'யார் குற்றவாளி என்பதை அறிய முடியவில்லை' என எழுதிதான் இந்தக் குற்றக் கோப்பை முடித்து வைத்தனர்.

இந்திய சுதந்திரத்துக்காக, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டாலும், பாஷ்யம் மிக மென்மையான மனம் படைத்தவர். 1945 முதல் 'யுனைடட் ஆர்ட்ஸ்' என்ற ஓவியக் கூடத்தை நடத்தினார். அப்போதுதான் 'ஆர்யா' என்ற புனைப்பெயரைச் சூட்டிக் கொண்டார்.

முண்டாசுக் கவிஞனாக பாரதியை இவர் வரைந்த ஓவியம்தான் இன்றளவும். அந்த மகாகவியின் உருவ அடையாளமாக இருக்கிறது. பல தேசியத் தலைவர்களின் ஓவியத்தையும் தத்ரூபமாக வரைந்த இவரால், சிறந்த சிற்பியாகவும் பரிமளிக்க முடிந்தது.

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தைப் பெற மறுத்தார். 2000ம் ஆண்டில், 93 வயதில் இயற்கை எய்தினார்.



-அடுத்த இதழில் ஜதீந்திரநாத் தாஸ்

பிரபு சங்கர்

72999 68695





      Our Apps Available On




      Dinamalar

      Follow us