Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சரணடைந்தேன் சர்வேஸ்வரா

சரணடைந்தேன் சர்வேஸ்வரா

சரணடைந்தேன் சர்வேஸ்வரா

சரணடைந்தேன் சர்வேஸ்வரா

ADDED : மார் 28, 2025 07:49 AM


Google News
Latest Tamil News
'மோட்சம் வேண்டுமா... சர்வேஸ்வரனாகிய சிவனை வழிபட்டால் போதும்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

'திரிபுர அசுரர்களை சம்ஹாரம் செய்த சிவபெருமானே... என் பிழைகளை பொறுத்தருள்க' என வேண்டுகிறது ஒரு ஸ்லோகம்.

அதென்ன பிழைகள்?

'போன பிறவியில் நமஸ்காரம் செய்யாதது ஒரு பிழை. வரப் போகும் பிறவியில் நமஸ்காரம் செய்யாமல் இருக்கப் போவது இரண்டாவது பிழை. இப்போது பிறவி ஏற்பட்டிருக்கிறது என்றாலே, போன பிறவியில் உன்னை நமஸ்கரிக்கவில்லை என்பது புரிகிறது. இல்லாவிட்டால் அப்போதே மோட்சம் கிடைத்திருக்குமே... அது சரி... அடுத்த பிறவியில் நமஸ்கரிக்க மாட்டேன் என்பது ஏன்?

இந்தப் பிறவியில் உன்னை நமஸ்கரித்தேன் அல்லவா? அதனால் இனி பிறவி தர மாட்டாய். அடுத்து பிறவியே இல்லை என்ற நிலையில் நமஸ்காரம் செய்ய முடியாது அல்லவா? எனவே போன பிறவி, வரும் பிறவிகளில் உன்னை நமஸ்கரிக்காத குற்றத்தை மன்னித்து விடு'

இதில் இருந்து என்ன தெரிகிறது... சிவனை நமஸ்காரம் செய்தால் போதும். பிறப்பு, இறப்பு சக்கரத்தில் இருந்து நம்மை விடுவிப்பார்.

நமஸ்காரம் செய்வதை 'தண்டம் சமர்ப்பித்தல்' என்பர். 'தண்டம்' என்றால் கழி அல்லது கோல். கையில் உள்ள மரக்கோலை அப்படியே விட்டால் தடாலென விழும். 'இந்த உடல் சிவனுக்குச் சொந்தமானது' என்ற எண்ணத்துடன் செய்வதுதான் நமஸ்காரம்.

உதவாத பொருளை 'இது ஒரு தண்டம்' என்பார்கள். அப்படி தண்டமான பொருள் தான் உடல். இதை இயக்கும் சக்தியைக் கொடுத்தது சிவன் தான்! இந்த உடம்பை ஏதோ நாம் தாங்கி நடத்துவதாக மனிதர்கள் நினைக்கிறார்கள். அந்த ஆணவ எண்ணத்தை போக்கும் அடையாளமாகத் தான் நமஸ்காரம் செய்கிறோம். அதுதான் தண்டம் சமர்ப்பித்தல் என்பது. 'பொறுப்பை பூரணமாக ஒப்படைத்தேன்' என்பதன் அடையாளமாக தரையில் படும்படி விழுந்து வணங்குகிறோம். கொஞ்சம் பொறுப்புகளை நமக்கென வைத்துக் கொண்டால் கூட கடவுள் ஏற்க மாட்டார்.

'சர்வேஸ்வரா... உன்னைச் சரணடைந்தேன்' என நல்லது, கெட்டது என எல்லாவற்றையும் ஒப்படைத்த பின் விழ வேண்டும். அப்படி செய்தால் கருணைக்கடலான சர்வேஸ்வரன் நம் பாரத்தை ஏற்று அருள்புரிவார்' என்கிறார் காஞ்சி மஹாபெரியவர்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.

* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.

* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.

* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.



பி.சுவாமிநாதன்

swami1964@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us