Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாவம் போக்கும் இலை

பாவம் போக்கும் இலை

பாவம் போக்கும் இலை

பாவம் போக்கும் இலை

ADDED : ஜன 30, 2025 01:36 PM


Google News
Latest Tamil News
பிப்.5 - பீஷ்மாஷ்டமி

மகாபாரதப் போரில் அர்ஜூனன் எய்த அம்புகளால் துளைக்கப்பட்ட பிறகும் பீஷ்மரின் உயிர் பிரியவில்லை. இதற்கு காரணம் தான் விரும்பிய நேரத்தில் மரணத்தை எதிர்கொள்ளும் வரத்தை பெற்றிருந்தார். உத்ராயண புண்ணிய காலத்தில் உயிர் பிரிந்தால், அந்த உயிர் பயணம் செய்ய ஒளி துணை நிற்கும்.

அதற்காக உடம்பில் தைக்கப்பட்ட அம்புகளுடன் தை மாதம் வரும் வரை காத்திருந்தார். ஆனால் தை பிறந்த பின்னும் உயிர் பிரியவில்லை. வரத்தின்படி நடக்காதது ஏன் என பீஷ்மர் குழம்பினார்.

இந்நிலையில் அங்கு வந்த வியாச மகரிஷியிடம், ''நான் வாங்கிய வரத்தின்படி ஏன் இன்னும் எனக்கு மரணம் வரவில்லை'' எனக் கேட்டார். ''பிறருக்கு தீமை செய்யாமல் இருப்பது எப்படி புண்ணியமோ, அது போல பிறருக்கு அநீதி இழைக்கப்படும்போது அதை தடுக்காவிட்டாலும் பாவம் சேரும். அதையே தாங்கள் இப்போது அனுபவிக்கிறீர்கள்'' என்றார் வியாசர்.

சற்று நேரம் மவுனமாக இருந்த பீஷ்மருக்கு தன் நிலைக்கான காரணம் புரிந்தது.

சபையில் திரவுபதியின் புடவையை துச்சாதனன் இழுத்த போது யாரும் தடுக்கவில்லை. அப்போது அங்கிருந்த பீஷ்மர் உள்ளிட்ட அனைவரையும் பார்த்து தன்னைக் காக்கும்படி வேண்டினாள் திரவுபதி. ஆனால் தாங்கள் செய்து கொடுத்த சத்தியத்தின்படி அதர்மத்தை வேடிக்கை பார்த்தனர்.

இதை நினைவு கூர்ந்ததும் பீஷ்மரின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

''தவறு தான். அன்று நான் செயல் படாமல் இருந்ததை நினைத்தால் மனம் கூசுகிறது வியாசரே. நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் என்ன செய்ய வேண்டும்'' எனக்கேட்டார்.

''தவறை பார்த்தும் பார்க்காத மாதிரி இருந்த உமது கண்கள், கேட்டும் கேட்காத மாதிரி இருந்த காதுகள், எதிர்த்துப் பேசாத வாய், வலிமை இருந்து அதை தடுக்க தவறிய தோள்கள், கைகள் என உடல் உறுப்புகள் கயவர்களுக்கு துணை போயின. அவை தண்டனை பெற்றாக வேண்டும்'' என்றார் வியாசர். தன் கையில் வைத்திருந்த எருக்க இலைகளை அவரின் உடல் முழுவதும் அடுக்கினார் வியாசர். அவரிடம்,''எருக்க இலைகள் சூரியனின் சக்தியைக் கொண்டவை. இவை உமது பாவங்களைப் போக்கும்'' என்றார்.

அதன்படியே பீஷ்மரின் பாவங்களை எருக்க இலைகள் போக்க... அவர் விரும்பியபடி மரணம் உண்டானது. ரதசப்தமிக்கு மறுநாளான அஷ்டமியன்று உயிர் பிரிந்தது. இந்நாள் 'பீஷ்மாஷ்டமி' எனப்படுகிறது. தர்மர் வருத்தத்துடன், ''பீஷ்மர் பிரம்மச்சாரி என்பதால் அவருக்கு யார் பிதுர் கடன் செய்வது'' எனக் கேட்டார்.

''கவலை வேண்டாம். ஒழுக்கம் தவறாத உத்தம துறவியான அவருக்கு பிதுர்கடன் செய்யத் தேவையில்லை. ஆனாலும் ரதசப்தமியன்று உடம்பின் மீது எருக்க இலைகளை வைத்து நீராடுவோர் அனைவரும் அவருக்கு பிதுர்கடன் செய்தவர் போலாவர்'' என்றார் வியாசர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us