Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கதையா சொல்லு...

கதையா சொல்லு...

கதையா சொல்லு...

கதையா சொல்லு...

ADDED : மார் 06, 2025 02:56 PM


Google News
Latest Tamil News
இளம்துறவி ஒருவர் யாத்திரையாக காஞ்சிபுரம் வந்தார். அவரிடம் மஹாபெரியவர், 'நீ போற இடங்களில் அத்வைத தத்துவத்தை எடுத்துச் சொல்லு' என்றார்.

'பெரியவா... அத்வைதம் பற்றி ஒன்னும் தெரியாது' என்றார் துறவி.

'கவலைப்படாதே... கதை போல சொல்றேன். அதை சொல்லு... புரியும்' என்றார்.

'ஒரு ஊர்ல ராமசாமின்னு ஒருத்தன் வேலை இல்லாம இருந்தான். அந்த ஊர்ல ஒரு சர்க்கஸ் கம்பெனி ஒன்னு வந்துச்சு. அதன் மேனேஜர்கிட்ட 'எனக்கு ஏதாவது வேலை தாங்கன்னு கேட்டான். 'எங்க சர்க்கஸ்ல ஆதிவாசி ஒருத்தன் இருந்தான். அவன் இங்கிலீஷில நகைச்சுவையா பேசுவான். 'ஆதிவாசி இங்கிலீஷ் பேசுறானே'ன்னு கூட்டம் நிறைய வரும். அவன் செத்துட்டான். அதனால கூட்டம் குறைவாயிடுச்சு.

அந்த ஆதிவாசி மாதிரி நீ இருக்க... நீயும் இங்கிலீஷ் பேசி வித்தை காட்டுன்னு சொன்னார் மேனேஜர். ராமசாமியும் ஆர்வமாக வேலை செய்தான். பழையபடி கூட்டம் வர ஆரம்பிச்சிது.

நாட்கள் ஓடின. ஒரு நாள் ராமசாமியிடம், 'எத்தனை நாள் இப்படி இங்கிலீஷ் பேசி நடிப்ப... இன்னும் நிறைய வித்தை இருக்கு. கயிறு மேலே பேலன்ஸ் பண்ணி நடக்கப் பழகுன்னு சொன்னார் மேனேஜர். அதையும் செய்தான்.

கயிறு மீது பேலன்ஸ் பண்ணியபடி நடந்தான். ரசிகர்கள் பார்க்கிற மாதிரி கயிறு மீது நடப்பது இது தான் முதல் முறை. கஷ்டப்பட்டுத்தான் நடந்தான். கீழே குனிந்து பார்த்தான். புலி ஒன்று இவனைப் பார்த்தபடி சுற்றிக் கொண்டிருந்தது.

'கரணம் தப்பினா மரணம் தான்'னு ராமசாமியோட சாகசம் பத்தி சர்க்கஸ் கம்பெனியைச் சேர்ந்த ஒருத்தர் மைக்கில் சொல்லியபடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கரணம் தப்பினால் மரணம் நேருமோ என்ற பயத்தில் ராமசாமிக்கு கை, கால் நடுங்கியது. அடுத்த விநாடி தடுமாறி புலி மீது விழுந்தான். சப்தநாடியும் ஒடுங்கியது.

புலி மெல்ல கிட்ட வந்தது. 'ராமசாமி... பயப்படாதே... நான்தான் கிருஷ்ணசாமி... உனக்கு ஆதிவாசி வேஷம் கொடுத்த மாதிரி, எனக்குப் புலி வேஷம் அவ்வளவு தான்' எனச் சொன்னது. ராமசாமிக்குப் பயம் போயிடுச்சு''

கதையை முடித்த மஹாபெரியவர், 'இதுதான் அத்வைதம். எல்லாத்துக்குள்ளயும் உள்ளிருக்கிற ஆத்மா ஒண்ணுதான்... வெளியேதான் வெவ்வேறு வடிவம் தாங்கியிருக்கு... இது தான் அத்வைத கோட்பாடு. இதை அனைவருக்கும் சொல்லு' என்றார்.

புரியாத தத்துவத்தையும் எளிமையாகச் சொல்ல மஹாபெரியவர் ஒருவரால் மட்டுமே முடியும்.

காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்

* குலதெய்வம் கோயிலில் விளக்கேற்று. உன் கஷ்டம் தீரும்.

* குலதெய்வத்துக்குத் தான் முதல் முடிக்காணிக்கை, காதுகுத்து.

* நம் முன்னோரை காப்பாற்றிய தெய்வம் நம்மையும் காப்பாற்றும்.

* வாழ்வில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரத்தை தரிசிப்பது அவசியம்.

உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்

அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே

த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!

அநந்த பூமா மமரோக ராஸிம்

நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!

எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us