Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வீக கதைகள் - 2

தெய்வீக கதைகள் - 2

தெய்வீக கதைகள் - 2

தெய்வீக கதைகள் - 2

ADDED : மார் 06, 2025 02:58 PM


Google News
Latest Tamil News
கோபத்தை துாண்டாதே

ஒரு இளைஞனும், அவன் தந்தையும் அழகான வீடு ஒன்றில் வசித்தனர். எதற்கெடுத்தாலும் அந்த இளைஞன் கோபப்படுவான். இதற்கு தீர்வு காண தந்தை நினைத்தார்.

“நீ திருந்தவே மாட்டாயா''என மகனைக் கேட்க அதற்கு அவன், “கோபம் வருவதை தடுக்க முயற்சி செய்தும் பயனில்லை'' என்றான்.

“சரி! நான் சொல்வதை செய். எப்போது கோபம் வருகிறதோ, அப்போது ஒரு ஆணியை நம் வீட்டுத் தோட்டத்து மரவேலி மீது அடி''என்றார்.

அவனும் கோபம் வரும் போதெல்லாம் ஆணியை அடிக்க, அதன் எண்ணிக்கை பெருகியது. சில நாள் கழித்து கோபம் நின்றது. அவனது தந்தை மகிழ்ச்சி அடைந்தாலும் மகனிடம், ''வேலியில் இருந்து ஆணிகளை பிடுங்கி விடு'' என்றார். அவனும் அப்படியே செய்தான்.

சில நாள் கழிந்தன. ''எல்லா ஆணிகளையும் எடுத்து விட்டாயா”என தந்தை கேட்டதும் , ''ஆமாம். இப்போது உங்களுக்கு மகிழ்ச்சி தானே?” என்றான்.

“என்னுடன் வா'' என மரவேலிக்கு அழைத்துச் சென்றார்.

“ முதலில் ஆணியை அடித்து பிறகு அப்புறப்படுத்தினாய். செய்தது சரி! ஆனால் தழும்பு இருக்கிறதே! அதை என்ன செய்வாய்?” எனக் கேட்க மகன் தலை குனிந்தான்.

“ தீயால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு'' எனத் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறாரே! அதனால் வசை மொழியால் ஒருவரை கோபித்தால் அந்த வடு மனதில் பதிந்து விடும். அதனால் கோபம் வராமல் பார்த்துக்கொள்'' என்றார். இது எல்லோருக்கும் பொருந்தும்.

“சரி! கோபம் நம்மை எதில் கொண்டு விடும்? இதை ஒரு கதை மூலம் சொன்னால் உனக்கு புரியும்” என்றார் தந்தை.

“தட்சன் என்பவரின் மகள் சந்நதி. இவள் கிருது முனிவரை மணந்தாள். இவர்கள் சந்ததியினர் அறுபதினாயிரம் முனிவர்கள். அவர்களை வாலகில்யர்கள் என அழைப்பார்கள். அவர்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா? கட்டை விரலை விடச் சிறிய உருவமாக இருந்தாலும் தவத்தில் பெரியவர்கள். வானுலகில் சுற்றித் திரியும் இவர்கள் சூரியனின் நண்பர்களாகத் திகழ்ந்தனர்.

“ஒருமுறை காசிப முனிவர் வேள்வி செய்யும் போது, தேவர்களின் தலைவனான இந்திரன், வேள்விக்கான மரக்கட்டைகளுக்காக காட்டையே பெயர்த்துக் கொண்டு வந்தான். ஆனால் வாலகில்ய முனிவர்கள் அனைவரும் சேர்ந்து உலர்ந்த ஒரு மரத்துண்டினை சிரமப்பட்டுத் துாக்கி வருவதைக் கண்டு, அவர்களைப் பார்த்து கிண்டல் செய்தான் இந்திரன். கோபம் கொண்ட அந்த முனிவர்கள், இந்திரனையே தோற்கடிக்க ஒருவன் காசிப முனிவர் மூலம் பிறப்பான் எனச் சாபமிட்டனர்”

“யாரையும் கேலி செய்யக் கூடாது, அவர்களுக்கும் பலம் இருக்கும் என்பது இதன் மூலம் தெரிகிறது அல்லவா?”

“வாலகில்ய முனிவர்களிடம் தான் செய்த தவறுக்காக இந்திரன் மன்னிப்பு கேட்டார். இந்த விஷயத்தில் படைப்புக் கடவுளான பிரம்மா தலையிட்டதால் காசிப முனிவர், வினதை தம்பதிக்குப் பிறந்த கருடன் ஆரம்பத்தில் இந்திரனுக்கு எதிரியாக இருந்தாலும் பிற்காலத்தில் நண்பனாக விளங்கினார்”

“இன்னொரு கதையும் சொல்கிறேன் கேள்”

“முனிவர் சிருங்கிபேரருக்கு ஹேமன், சுக்லன் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் கவுதம முனிவரிடம் கல்வி கற்றனர். இவர்கள் குருநாதர் வழிபாடு செய்வதற்கு பொருட்களை கொடுப்பார்கள். ஒருமுறை பூக்கள், பழங்கள், தீர்த்தம் கொண்டு வந்தனர். ஆனால் கவனக் குறைவால் அவர்கள் கொண்டு வந்த தீர்த்தத்தில் பல்லி ஒன்று கிடந்தது. அதனால் கோபம் கொண்ட முனிவர் அவர்களை பல்லியாக மாறும்படி சபித்தார். இது தேவையா?”

“ எந்தக் காரியத்திலும் கவனமாக செயல்பட வேண்டும், ஏனோ தானோ என செய்வது கூடாது''

“ அவ்வாறு செய்தால் அது தீமையில்தான் முடியும்'' என்றார்.

''பிறர் கோபம் அடையும்படி நீ எந்தச் செயலையும் செய்யாதே. நீயும் கோபத்தை துாண்டி விடாதே. கோபத்தைத் தணிப்பதற்கு முயற்சி செய்'' என்றார்.



-தொடரும்

உமா பாலசுப்ரமணியன்

umakbs@gmail.com





      Our Apps Available On




      Dinamalar

      Follow us