Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/கதைகள்/எள் தானம்

எள் தானம்

எள் தானம்

எள் தானம்

ADDED : ஆக 30, 2024 09:31 AM


Google News
Latest Tamil News
வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமர். அவரது பட்டாபிஷேக ஏற்பாடு நடந்தது.

போரில் உயிர்களை கொன்ற பாவம் தீர, எள் தானம் செய்ய வேண்டுமென குலகுரு வசிஷ்டர் தெரிவித்தார். எள் தானம் பெற்றால் பாவம் சேரும் என்பதால் யாரும் முன்வரவில்லை. இந்நிலையில் 'எள் தானம் பெறுவோருக்கு தங்கக்கட்டிகள் தரப்படும்' என அறிவிக்கச் சொன்னார் வசிஷ்டர். அயோத்தியின் எல்லையில் வாழ்ந்த சிங்கார முனிவர், சொர்ணவல்லி தம்பதிக்கு இந்த செய்தி எட்டியது.

எள் தானம் பெற்றால் ஏழ்மை நீங்குமே எனக் கருதிய சொர்ணவல்லி தன் விருப்பத்தை கணவரிடம் தெரிவித்தாள்.

முனிவர் கொதித்து விட்டார்.

''தங்கத்திற்கு ஆசைப்பட்டு பாவத்தை சேர்க்க சொல்கிறாயா?'' என்றார்.

''உங்களுக்கு பாவம் சேர நினைப்பேனா? மகாவிஷ்ணுவின் வடிவம் ஸ்ரீராமர்.

எள் தானம் பெற்றதும் அவரது முகத்தை ஒருமுறை பாருங்கள். அந்த நொடியே

பாவம் எல்லாம் ஓடி விடும். தானம்பெற்றால் வறுமை நீங்கும் என்ற நம்பிக்கையில் தான் சொன்னேன். என்னை மன்னியுங்கள்'' என்றாள்.

சமாதானம் அடைந்த முனிவரும் எள் தானம் பெற தயாரானார். இந்த விஷயம் ஊரெங்கும் பரவியது.

'சிங்கார முனிவர் எப்படிப்பட்ட தவசீலர்... அவர் புத்தி ஏன் இப்படி போனது? தங்கத்திற்கு ஆசைப்பட்டு தன்னை இவ்வளவு தாழ்த்திக் கொள்ள வேண்டுமா..?' என ஊரார் பேசினர்.

சிங்கார முனிவரின் திட்டத்தை அறிந்தார் குலகுரு வசிஷ்டர்.

தானம் பெறும் போது ஸ்ரீராமரின் முகத்தைப் பார்த்தால் தானம் பயன் தராமல் போகுமே என்று யோசித்த வசிஷ்டர் ஒரு திட்டம் தீட்டினார்.

சிங்கார முனிவருக்கு எள்ளை தானமாக கொடுத்ததுமே சட்டென இருவருக்கும் இடையில் ஒரு திரை விழுந்தது.

அதை அங்கிருந்த யாரும் எதிர்பார்க்கவில்லை. அதிர்ச்சியில் ஆழ்ந்த முனிவர் துயரத்துடன் புறப்பட்டார்.

அதற்குள் முனிவரின் குடிலுக்கு தங்கக்கட்டிகள் வந்து சேர்ந்தன. கணவரை எதிர்பார்த்து காத்திருந்தாள் சொர்ணவல்லி. நடந்ததை கேட்டு நடுங்கினாள். இருந்தும் மனம் தளரவில்லை. யோசித்தாள்.

''சுவாமி... கவலை வேண்டாம். பட்டாபிஷேக நாளன்று ஸ்ரீராமர் பவனி வருவார். அப்போது தரிசித்தால் பாவம் அனைத்தும் பறந்தோடும்'' என்றாள்.

முனிவருக்கும் சரியெனப் பட்டது. அந்த நாளுக்காக காத்திருந்தார்.

அயோத்தி மாநகரின் ராஜவீதியில் பவனி வந்த ஸ்ரீராமரை கண்குளிர தரிசித்தார் முனிவர். மோகன புன்னகையுடன், 'முனிவரே! உம் பாவம் எல்லாம் இந்த கணமே விலகியது. இனி உங்களது தவ வாழ்வு சிறக்கும்'' என வாழ்த்தினார்.

அந்த வாழ்த்தை மந்திரமாக ஏற்ற சிங்கார முனிவர், அதன் பின் தங்கக்கட்டிகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us