Dinamalar-Logo
Dinamalar Logo


ஆசை

ஆசை

ஆசை

ADDED : செப் 23, 2024 09:15 AM


Google News
Latest Tamil News
'அடுத்தபிறவியில எப்படி பிறக்கணும்?' என்ற ஆசை நம் மனதில் இருக்கவே செய்யும். பெரும்பாலும், 'பணக்காரனா பொறந்து ராஜாவாக வாழணும்' என ஆசைப்படுவோம். ஆனால், ராஜாவாகப் பிறந்த குலசேகராழ்வார் தன் விருப்பத்தை திருவேங்கடம் குறித்த பாசுரத்தில் சொல்வதைப் பாருங்கள்.

முதல் பாடலில் திருப்பதியிலுள்ள குளத்தில் நாரையாகப் பிறக்க வேண்டும் என பெருமாளிடம் வேண்டுகிறார். நாரை இரை தேடி திருப்பதியை விட்டு வேறு எங்காவது சென்று விடுமே என்பதால் அடுத்த பாடலில் மீனாகப் பிறவி தர வேண்டுகிறார்.

ஏனென்றால் மீன் குளத்தை விட்டு வெளியே போகாது அல்லவா? அதுவும் மாறி விடுகிறது. யாராவது மீனைப் பிடித்து விட்டால் என்ன செய்வது என யோசனை உண்டாகிறது. பின்னர் தன் மனம் போல ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஆசையை வெளிப்படுத்துகிறார்.

ஏழுமலையானுக்கு ஏவல் புரியும் பணியாளாகவும், மலைத் தோட்டத்தில் செண்பக மரமாகவும், மலையில் புதராகவும், மலைப்பாறையாகவும், காட்டாறாகப் பாயவும், கோவிந்தா நாமம் பாடிச் செல்லும் அடியார் ஏறும் மலைப்பாதையாக இருக்கவும் விரும்புகிறார். ஏழுமலையானை எப்போதும் தரிசிக்கும் நோக்கத்தில் 'படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே' என்றும் வேண்டுகிறார். கடைசிப் பாடலில், ' திருவேங்கடப் பொன்மலையில் ஏதேனும் ஆவேனே' என்று பெருமாளின் மனசு போல மலையில் ஏதாவது ஒன்றாகப் பிறந்தால் போதும் என்று முடிக்கிறார். புரட்டாசி சனி விரத நாளில் நாமும் பெருமாளிடம் விரும்பிய வரம் கேட்டுப் பெறுவோம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us