Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/வேண்டியது கிடைக்க...

வேண்டியது கிடைக்க...

வேண்டியது கிடைக்க...

வேண்டியது கிடைக்க...

ADDED : பிப் 20, 2025 02:26 PM


Google News
Latest Tamil News
வேதத்தின் இதயமாக இருப்பது ஸ்ரீருத்ரம். சிவபெருமானின் விஸ்வரூபத்தைச் சொற்களால் விவரித்து வணக்கம் கூறுவதே உருத்திரமாகும். இதை திருநாவுக்கரசர் தமிழில் நின்ற திருத்தாண்டகமாக அருளியுள்ளார். பிரதோஷம், சிவராத்திரி அபிேஷகத்தின்போது இதைப் படியுங்கள். வேண்டியது கிடைக்கும்.

இரு நிலன் ஆய் தீ ஆகி நீரும் ஆகி

இயமானனாய் எறியும் காற்றும் ஆகி

அரு நிலைய திங்கள் ஆய் ஞாயிறு ஆகி

ஆகாசம் ஆய் அட்டமூர்த்தி ஆகி

பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்

பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி

நெருநலை ஆய் இன்று ஆகி நாளை ஆகி

நிமிர் புன்சடை அடிகள் நின்ற ஆறே

மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி

வயிரமும் ஆய் மாணிக்கம் தானே ஆகி

கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி

கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி

பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி

பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி

எண் ஆகி எண்ணும் ஓர் எழுத்தும் ஆகி

எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே

கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி

காவிரி ஆய் கால் ஆறு ஆய் கழியும் ஆகி

புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி

புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி

சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி

சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி

நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி

நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே

காற்று ஆகி கார் முகில் ஆய் காலம் மூன்று ஆய்

கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி

கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி

குரை கடல் ஆய் குரை கடற்கு ஓர் கோமானும் (ம்) ஆய்

நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி

நீள் விசும்பு ஆய் நீள் விசும்பின் உச்சி ஆகி

ஏற்றானாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி

எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே

தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி

திசை ஆகி அத்திசைக்கு ஓர் தெய்வம் ஆகி

தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி

தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி

காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற

இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி

நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி

நெடுஞ்சுடர் ஆய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே

அங்கம் ஆய் ஆதி ஆய் வேதம் ஆகி

அருமறையோடு ஐம்பூதம் தானே ஆகி

பங்கம் ஆய் பல சொல்லும் தானே ஆகி

பால் மதியோடு ஆதி ஆய் பான்மை ஆகி

கங்கை ஆய் காவிரி ஆய் கன்னி ஆகி

கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி

எங்கும் ஆய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி

எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே

மாதா பிதா ஆகி மக்கள் ஆகி

மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி

கோதாவிரி ஆய் குமரி ஆகி

கொல் புலித்தோல் ஆடைக் குழகன் ஆகி

போது ஆய் மலர் கொண்டு போற்றி நின்று

புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி

ஆதானும் என நினைந்தார்க்கு எளிதே ஆகி

அழல் வண்ண வண்ணர் தாம் நின்ற ஆறே

ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி

அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி

நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி

நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி

பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி

புக்குளால் வாசம் ஆய் நின்றான் ஆகி

தே ஆகி தேவர் முதலும் ஆகி

செழுஞ்சுடர் ஆய் சென்று அடிகள் நின்ற ஆறே

நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி

நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி

பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி

பெருமதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி

ஆரேனும் தன் அடைந்தார் தம்மை எல்லாம்

ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார் தாம்

பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி

பரஞ்சுடர் ஆய் சென்று அடிகள் நின்ற ஆறே

மால் ஆகி நான்முகனாய் மாபூதம் ஆய்

மருக்கம் ஆய் அருக்கம் ஆய் மகிழ்வும் ஆகி

பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி

பரப்பு ஆகி பரலோகம் தானே ஆகி

பூலோக புவலோக சுவலோகம் ஆய்

பூதங்கள் ஆய் புராணன் தானே ஆகி

ஏலாதன எலாம் ஏல்விப்பானாய்

எழும் சுடர் ஆய் எம் அடிகள் நின்ற ஆறே.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us