Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/புதுமையின் நாயகர்

புதுமையின் நாயகர்

புதுமையின் நாயகர்

புதுமையின் நாயகர்

ADDED : ஜூன் 11, 2010 12:40 PM


Google News
Latest Tamil News
ஜூன் 13 புனித அந்தோணியார் தினம்

கோடியற்புதர் என்று பெருமையுடன் போற்றப்படும் புனித அந்தோணியார் போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் நகரத்தில் 1195, ஆகஸ்ட்15ல் பிறந்தார். தந்தையார் லிஸ்பன் நகர ஆளுநர் மார்ட்டின் திபியோன் பிரபு, தாயார் தேவரர் கெரசம்மாள்.

செல்வந்தர் வீட்டுப்பிள்ளையான இவர், தன் 12ம் வயதில் துறவு பூணும் நோக்கத்தில் குருமடத்தில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார். 24ம் வயதில் குருவாக மாறினார். ஆஸ்பினைன்ஸ் மலைக்குகையில் ஓராண்டுகாலம் தவம் செய்தார். பின்னர் மறைபரப்பும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

அப்போதையை பாப்பரசர் 9ம் கிரகோரியார் ""வேத சாத்திர விற்பன்னர் தந்தை'' என்ற பட்டத்தை அந்தோனியாருக்கு அளித்தார். இளந்துறவிகளுக்கு மறையுரை செய்யும் பணியைச் செய்து வந்தார். ஒருநாள் இரவு மறையுரை செய்தபோது அருகில் இருந்த குளத்துத் தவளைகள் பேரிரைச்சலோடு கத்திக் கொண்டிருந்தன. அப்போது இவர் ""சந்தடி செய்யாதீர்கள்'' என்று சொன்னதும் அவை அமைதியாயின.

ஒருநாள் கோயில் தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தபோது ஆலயமணி ஒலித்தது. அந்தோணியார் கோயிலின் திசை நோக்கி மண்டியிட்டு வணங்கினார். கல் சுவர் தானாகவே விலகி இறைக்காட்சி இவருக்கு கிடைத்தது. திடீரென்று ஒருநாள் மடத்தில் இருந்த இளந்துறவி ஒருவருக்கு கண்களும் வாயும் கோணி நின்றன. இறைவனைத் தியானித்தபடியே அந்தோணியார், தன் குல்லாவை இளந்துறவிக்கு அணிவித்தவுடன் அவர் பூரண குணம் பெற்றார்.

பிரைவ் என்னும் ஊரில் மலைக்குகை ஒன்றில் தவம் செய்த போது தாகத்தால் பாறையை இவர் தட்ட அதிலிருந்து நீருற்று உண்டானது. அந்த அற்புத ஊற்றில் இன்று வரை நீர் வந்து கொண்டிருக்கிறது. இதில் நோய் நீங்க வேண்டி இன்றும் மக்கள் நீராடி வருகின்றனர்.

ஷாட்டீனோ என்னும் ஊரில் ஒருமுறை செல்வந்தர் வீட்டில் தங்கியிருந்தார். அவரும் தனியறையில் அந்தோணியார் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அன்றிரவு அவரது அறையில் அற்புத ஒளி பரவுவதை செல்வந்தர் கண்டார். தேவதாய் தன் கையிலிருந்த தேவபாலகனை அந்தோணியாரின் கையில் கொடுத்துவிட்டு மறைந்தாள். அதனால், இப்போதும் அந்தோணியாரின் கரங்களில் தேவபாலன் அமர்ந்திருக்கும் நிலையில் படங்களும், சுரூபங்களும் அமைக்கப்படுகின்றன.

புனித அந்தோணியார் 1231, ஜுன் 13 வெள்ளியன்று தன்னுடைய 36வது வயதில் மரணமடைந்தார். அவரின் விருப்பப்படி பதுவை நகரில் சாங்க்தா மரியா மடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது சவப்பெட்டியை தொட்டு பலரும் நோய் நீங்கப் பெற்றனர். அன்றுமுதல் இவரின் கல்லறை திருப்பயணம் செல்லும் இடமாகத் திகழ்கிறது. வாழும் காலத்தில் பலஅற்புதங்களை நிகழ்த்தியதால் பாப்பரசர் 9ம் கிரகோரியார் அந்தோணியாருக்கு புனிதர் பட்டம் அளித்து சிறப்பித்தார்.

இன்றும் இவர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருவதால் மக்களால் ""கோடியற்புதர்'' என்று போற்றப்படுகிறார்.

-ஆ. ஆல்பர்ட் உபகாரசாமி





      Our Apps Available On




      Dinamalar

      Follow us