Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/கோயில்கள்/டொரொண்டோ ரிச்மண்ட் ஹில் ஹிந்து கோவில்

டொரொண்டோ ரிச்மண்ட் ஹில் ஹிந்து கோவில்

டொரொண்டோ ரிச்மண்ட் ஹில் ஹிந்து கோவில்

டொரொண்டோ ரிச்மண்ட் ஹில் ஹிந்து கோவில்

ஜன 20, 2024


Google News
கனடாவின் டொரொண்டோ நகரிலுள்ள ரிச்மண்ட் ஹில் பகுதி, ஹிந்து கோவிலுக்கு புகழ்பெற்றது. இந்தக் கோவிலை ரிச்மண்ட் ஹில் கோவில் என்றும் டொரொண்டோ மக்கள் அழைக்கின்றனர். கம்பீரமான கோபுரங்களும், விசாலமான கோவில் பிரகாரமும், கலையுணர்வுடன் செதுக்கப்பட்டுள்ள சிற்பங்களும் இந்தக் கோவிலின் தெய்வீகத்திற்கு மேலும் அழகு சேர்கின்றன.

ஸ்தல வரலாறு



1960களில் பல்வேறு நாடுகளிலிருந்து டொரொண்டோவிற்கு இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் வழிபட ஒரு சமத்துவ ஹிந்து கோவில் அவசியம் என்ற கருத்து நிலவியது. இதற்காக 1973ஆம் வருடம் பத்து அறங்காவலர்கள் இணைந்து கனடா ஹிந்து கோவில் சமூகத்தை நிறுவினர். சில சமூக மற்றும் பொருளாதார காரணங்களால் கோவில் கட்டும் பணி தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தெய்வ சங்கல்பத்தினால் ரிச்மண்ட் ஹில் பகுதியில் நிலம் வாங்கப்பட்டு, முழுமுதற் கடவுள் விநாயகரின் தற்காலிக விக்கிரகம் நிறுவப்பட்டு, அக்டோபர் 1983ல் கோவில் கட்டுமானப் பணி துவங்கப்பட்டது. டொரொண்டோவில் ‘கரசேவை’ அதாவது தன்னலமற்ற தொண்டர்களால் கட்டப்பட்ட முதல் கோவில் இதுவே. 1987ல் கோவிலின் மூலவர் சன்னதியின் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. 1988ஆம் வருடம் ஜுலை 2ஆம் தேதி தமிழ் கடவுள் முருகனின் விக்கிரகம் நிறுவப்பட்டு, கோவிலின் தினசரி பூஜை சேவைகள் துவங்கின.

கோவில் கட்டிடக்கலை



புகழ்பெற்ற கட்டிடக்கலை நிபுணர் திரு.ஜானகிரமண ஸ்தாபதி அவர்களின் வடிவமைப்பில் உருவானதே இந்தக் கோவில். இவர் தஞ்சை பெரிய கோவிலின் கட்டிடக்கலை நிபுணரின் வம்சத்தை சேர்ந்தவர். காஞ்சி காமகோடி பீடத்தின் பெரிய சங்கராச்சாரியரின் ஆலோசனைப்படி கட்டப்பட்ட கோவில் இது. வட அமெரிக்காவிலேயே ஆகம சாஸ்திர விதிப்படி கட்டப்பட்ட கோவில்களில் பெரிய கோவிலும் இதுவே. 1992ல் முருகனுக்கும், பெருமாளுக்கும் இரண்டு கோபுரங்கள் எழுப்பப்பட்டு கும்பாபிஷேகம் நிகழ்ந்தது. ஆகஸ்ட் 30, 2001ல் மகா கும்பாபிஷேகம் விசேஷ முறையில் நிகழ்ந்தது. ஏப்ரல் 7, 2002ல் 12 ஆழ்வார்கள் மற்றும் ராமானுஜர் சிலைகளும் நிறுவப்பட்டன. வட அமெரிக்கக் கோவில்களில் இந்த புண்ணியர்களின் சிலைகளை நிறுவிய முதல் கோவிலும் இந்த ஹிந்துக் கோவிலே.

மூலவர்கள்



சைவ மற்றும் வைணவக் கடவுள்களை மூலவர்களாக கொண்டுள்ளது இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். விநாயகர், முருகன் – வள்ளி - தெய்வானை, சிவன், பார்வதி, துர்கை, நவக்கிரகங்கள், கால பைரவர், சண்டிகேஸ்வரர், தஷிணாமூர்த்தி, சரஸ்வதி, பெருமாள், மகாலஷ்மி, ஆண்டாள், ராமர், கருடர், சந்தானகோபாலன் மற்றும் சத்யநாராயணனை இந்தக் கோவிலில் வழிபடலாம். மேலும் ‘நால்வர்’ என போற்றப்படும் நாயன்மார்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் மற்றும் ஆழ்வார்களின் சிலைகளையும் இங்கு வழிபடலாம். அனைத்து கடவுள்களையும் ஒரேக் கோவிலில் வழிபட இயல்வதால் மனநிறைவும், சாந்தமும் கிடைக்கின்றன என்கின்றனர் பக்தர்கள்.

கோவில் நிர்வாகக் குழு

டி.விக்னராஜா (தலைவர்), சுஜிதா ராஜசிங்கம் ( செயலாளர்), பவளகாந்தன் முருகுப்பிள்ளை (பொருளாளர்), உறுப்பினர்கள்: சிவநாதன் தில்லையம்பலம், ஷான் நவரத்தினம், விவேக் பாண்டியன். பரமநாதன் பொன்னம்பலம், குமார் மயில்வாகனம், சதாசிவராவ் கட்டே, விஜயன் கிருஷ்ணர்



கோவில் முகவரி மற்றும் வழிபாட்டு நேரம்

கனடா ஹிந்து கோவில் சமூகம்



10865, பேவியூ அவென்யூ,



ரிச்மண்ட் ஹில்,



ON – L4S 1M1



தொடர்பு எண் - +1 905 883 9109



திங்கள் – வியாழன் – காலை 8.00 – பிற்பகல் 1.00

மாலை 5.30 – இரவு 9.00



வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் –

காலை 8.00 – இரவு 9.00



அர்ச்சனை, அபிஷேகம், ஹோமம், அன்னதானம், கோவில் பிரகாரத்தில் நாமகரணம், திருமணம் போன்ற சேவைகளின் கட்டண விபரங்களை www.rhht.ca என்னும் வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

- தகவல் தொகுப்பு நமது செய்தியாளர் ஸ்வர்ண ரம்யா





      Our Apps Available On




      Dinamalar

      Follow us