Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/கலிபோர்னியாவில் சூரசம்ஹாரம்!

கலிபோர்னியாவில் சூரசம்ஹாரம்!

கலிபோர்னியாவில் சூரசம்ஹாரம்!

கலிபோர்னியாவில் சூரசம்ஹாரம்!

நவ 11, 2024


Google News
Latest Tamil News
என் பெண் வீடு இருக்கும் கலிஃபோர்னியா மாகாணத்தில் Fremont என்னுமிடத்தில் மிக அருகிலுள்ள சித்தி விநாயகர் கோவில் என் மனதிற்கு நெருக்கமான இடம். என் மகளும் மருமகனும் இங்கே வீடு வாங்கும்போதே எங்களுக்கு இதைச் சொல்லித்தான் வாங்கினார்கள்.

இந்தக் கோவிலில் நுழைந்தவுடனே நேராகப் பிள்ளையார், அவரின் ஒரு பக்கம் தம்பி முருகன், மறுபக்கம் அன்னை விஷ்ணு துர்க்கை. இடப்புறத்தில் லஷ்மி நரசிம்மர், மஹாலஷ்மி, அடுத்து கம்பீரமான திருப்பதி பாலாஜி, அதற்கடுத்த சன்னதியில் குருவாயூரப்பன், பஞ்சமுக ஆஞ்சநேயர். வலப்பறத்தில் சகஸ்ரலிங்கம், அவருக்கு அடுத்து ஐயப்பன், அவருக்கெதிரே நவக்கிரகம். தனி சன்னிதியில் ஷீரடி சாயிபாபா அமைதி தவழும் முகத்துடன் அமர்ந்திருப்பார்.

எல்லா தெய்வங்களும் ஒரே இடத்தில் இருப்பதால் அனுதினமும் அபிஷேகமும் பூஜையும் நடந்து கொண்டேயிருக்கும். ஒரு வாரத்தில் குறைந்தது மூன்று நாட்களாவது போவேன். வியாழன் பாபா ஆரத்தி, வெள்ளி விஷ்ணுதுர்க்கை அபிஷேகம்,சனிக்கிழமை வெங்கடேசப் பெருமாள் திருமஞ்சனம் ஆகியவற்றுக்குத் தவறாமல் போய்விடுவேன். 6ம் தேதி மாலை சூரசம்ஹாரம் அற்புதமாக நடந்தது.

உற்சவர் முருகன் அழகான புன்சிரிப்புடன் எளிமையான அலங்காரத்தில் ஆறு பேரின் தோளில் போருக்குத் தயாராக நின்றுகொண்டிருந்தார். நெருக்கமாக அமர்ந்திருந்த பக்தர்கள் உத்வேகமாக 'கந்தனுக்கு அரோகரா, வேல் வேல் முருகா, வெற்றிவேல் முருகா' என்று கோஷம் எழுப்பினர். சூரன் முருகனை விட மூன்று மடங்கு பெரியவராகக் கோவிலின் வெளியே காத்திருந்தார்.



முருகன் பிறந்ததிலிருந்து சூரனை வதம் செய்யும்வரை ஒரு பக்தர் தெளிவாகக் கதைபோலச் சொன்னார். நிறையக் குழந்தைகள் வந்திருந்ததால் அவர்களும் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எடுத்துரைத்தார். அதில் மூன்று அசுரர்கள் என்று சொல்வது நம்மிடமுள்ள Angry, Ego, Arrogance ஆகியவைதான்.



அவற்றைக் களைந்திட தெய்வத்தின் அருளுடன் நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது என்று குழந்தைகளைப் பார்த்துச் சொன்னார். அது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பொருத்தமானது தான் எனத் தோன்றியது.



போருக்கு முன் வீரபாகு தூதுபோன கதையையும் அதை ஏற்றுக்கொள்ளாமல் அவரையே சூரபத்மன் தாக்கிய கதையையும் சொன்னார். 'சூரபத்மன் சார்பாக அவரது சகோதரர் கஜமுகாசுரன் வருகிறார்!' என்று அவர் சொன்னதும் யானை பிளிறல் ஓசையுடன் கலர்க்கலரான புகைக்கு நடுவே அதிவேகமாக யானைத் தலையுடன் அசுரன் உள்ளே நுழைந்தார்.



வந்தவுடன் இரண்டு பேரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வது போல் சுற்றிச்சுற்றிவர முருகன் போல் வேடமணிந்த ஒரு குருக்கள் முருகன் பாதத்தில் வைத்த வேலை எடுத்துக் கொண்டுபோய் அசுரன் கழுத்தில் வைக்க, யானைமுகம் கழற்றப்பட்டது. அடுத்து அதேபோல் சிங்கத்தின் கர்ஜனையுடன் வந்த சிங்கமுகாசுரன் தலையும் அவரைத் தொடர்ந்து சூரன் தலையும் கொய்யப்பட்டது.



சம்ஹாரம் முடிந்து குழந்தை முருகன் வெற்றி உற்சாகத்துடன் ஆடிக் கொண்டு வர 'முத்தைத்திரு' பாடல் குதூகலமாக ஒலிக்க நாமே போரில் வெற்றிபெற்ற புளகாங்கிதத்துடன் அற்புதக் காட்சி.



எங்களுடன் பார்த்துக் கொண்டிருந்த மூன்று வயதுப் பேரன் ரிஷப் கஜமுகாசுரனையும், சிங்க முகாசுரனையும் பார்த்து 'பிள்ளையாரும், நரசிம்மரும் தானே இது! முருகர் ஏன் இவங்க கிட்ட சண்டை போடறாங்க?' என்று கேட்டான். ஒரு கணம் ஸ்தம்பித்தேன். குழந்தை மனசில் யானை முகம் என்றால் பிள்ளையார், சிங்கமுகம் என்றால் நரசிம்மர் என்று ஆழப்பதிந்து விட்டது.



அசுரர்களும் அதே தலையுடன் வருவதால் அவனுக்குக் குழப்பம். உண்மையில் குழந்தைகள் நம்மைவிட புத்திசாலிகள். என்ன பதில் சொல்ல என்று யோசித்து “குழந்தை முருகனை பயமுறுத்த அசுரன் அந்த மாதிரித் தலை வைத்துக்கொண்டு வந்தான். முருகனும் உன்னை மாதிரி தைரியசாலி, அதுனால பயப்படலை!” என்று சொல்லிச் சமாளித்தேன்.



இங்குள்ள கோவில்களில் ஒவ்வொரு விழாவையும் சிறப்பாகக் கொண்டாடுவதற்கான முக்கிய காரணம், இங்கே இளைஞர்களும், இளைஞிகளும், குழந்தைகளும் கூடத் தவறாமல் கோவிலுக்கு வராங்க. அத்தோடு எல்லாரும் உட்கார்ந்து நிம்மதியாப் பாக்கற மாதிரி தன்னார்வலர்கள் வழிநடத்தறாங்க. அத்துடன் இங்கே சமையலுக்கு உதவ, சுவாமியை தோளில் சுமந்துவர, சுலோகம் சொல்ல, பிரசாதம் வழங்க, பூத்தொடுக்க எல்லாவற்றுக்குமே தன்னார்வலர்கள் உதவி செய்யறாங்க.



இங்கு வளரும் குழந்தைகள் நம் கலாச்சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமே என்ற கவலை இங்குள்ளவர்களுக்கு இருக்கு. இதைப்பார்க்கும் போது நம் ஊர் இளைஞர்களுக்கு நாம் பக்தியையும், கலாச்சாரத்தையும் சொல்லித்தரத் தவறுகிறோமோ என்ற கலக்கம் ஏற்படுகிறது.



- கலிபோர்னியாவிலிருந்து வசந்தா கோவிந்தராஜன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us