Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவனின் கனடா தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி

புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவனின் கனடா தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி

புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவனின் கனடா தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி

புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவனின் கனடா தொல்காப்பிய ஆவணக் கண்காட்சி

செப் 22, 2024


Google News
Latest Tamil News
கனடாவில் செப்டெம்பர் 20 முதல் 22-ஆம் நாள் வரை நடைபெறும் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவும், மருத்துவர் போல் ஜோசப் ஒருங்கிணைப்பில் செப்டெம்பர் 23-ஆம் நாள் நடைபெறும் இவரது நூல்கள் அறிமுக விழாவில் கலந்துகொள்ளவும் புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் டொரோண்டோ வந்துள்ளார்.

இந்நிகழ்ச்சி பற்றி முனைவர் மு.இளங்கோவன் கூறியதாவது:



'கனடாவில் தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சி… தொல்காப்பிய ஆவணங்களைத் திரட்டும் பணியில் நான் பலவாண்டுகள் ஈடுபட்டிருந்தாலும் திரட்டிய ஆவணங்களை மக்கள் மன்றத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் 2024 சூன் திங்களில்தான் ஏற்பட்டது. அமெரிக்காவின் பேரவை விழாவில்(2024,சூலை) தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சியை நடத்துவதற்குத் திட்டமிட்டு, அதற்குரிய முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். பேரவையினரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆயினும் அமெரிக்கப் பயணம் கைகூடிவரவில்லை.



கனடாவில் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு (2024,செப்.20,21,22) நடைபெறும் என்ற அறிவிப்பு முன்னமே என் நெஞ்சில் நிலைத்திருந்தது. தொல்காப்பியத்திற்கு என்று நடைபெறும் மாநாட்டில் ஒத்த உணர்வுடையவர்கள் ஒன்றுகூடுவார்கள் என்பதால் தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சியைக் கனடா மாநாட்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டேன். கனடா, தொல்காப்பிய மன்றத்தின் தலைவர் முனைவர் செல்வநாயகி சிறிதாசு அம்மாவிடம் என் விருப்பத்தைத் தெரிவித்து, கண்காட்சிக்கான கருத்துருவை அவர்களுக்குத் தெரிவித்து, ஒப்புதல் பெற்றேன்.



என் முயற்சியை மகிழ்ச்சியுடன் வரவேற்றதுடன், தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சியைச் சிறப்பாக நடத்துவதற்குரிய சூழல்களையும் உருவாக்கி வருகின்றார்கள். தொல்காப்பியம் தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலாகும். தொல்காப்பியத்தை ஓலைச்சுவடியிலிருந்து முதன் முதலில் மழவை மகாலிங்கையர் 1847 இல் எழுத்ததிகாரம்- நச்சினார்க்கினியர் உரையுடன் பதிப்பித்து ஒரு வரலாற்று முதன்மை வாய்ந்த பணியைத் தொடங்கி வைத்தார்.



அதன் பின்னர் அறிஞர்கள் பலர் தொல்காப்பியத்தை மூலமாகவும், உரையாகவும், மொழிபெயர்ப்பாகவும், ஆராய்ச்சிக் குறிப்புகளுடனும், வினா விடை வடிவிலும் பதிப்பித்து, மக்களிடத்தும் மாணவர்களிடத்தும் கொண்டுசேர்த்தனர். இன்றும் இம்முயற்சி தொடர்ந்துவண்ணம் உள்ளது. கல்வி நிறுவனங்களில் தொல்காப்பியம் பாடமாகக் கற்பிக்கப்பட்டாலும் முழுமையாக, ஆர்வமுடன் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே தென்படுகின்றது.



மூத்த அறிஞர்களின் பேரறிவைப் பாதுகாக்கும் ஆர்வமில்லாத தமிழினம் எண்ணற்ற அறிஞர்களின் அறிவுழைப்பை இழந்து கையற்று நிற்கும் நிலையில், பாலைவனத்தில் பயணம் செய்தவனைப் போன்று என் சிறு முயற்சியில் பேரறிஞர்கள் பலரின் தொல்காப்பியச் சிறப்புப் பொழிவுகளை ஆவணப்படுத்தி, அனைவரும் கேட்பதற்கு வாய்ப்பாக யுடியூபில் பதிந்து வைத்துள்ளேன்.



அவ்வாறு பதிவுசெய்து வெளியிட்டுள்ள தொல்காப்பியக் காணொலிகளை இதுவரை பல இலக்கம் பேர் பார்வையிட்டுள்ளமை எனக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. இவ்வாறு சிறு சிறு பணிகளைச் செய்துவந்த நான் தொல்காப்பிய ஆவணங்களைத் தொகுத்து, அடுத்த நிலை ஆய்வாளர்களுக்கு வழங்கும் நோக்கில் தொல்காப்பிய ஆவணங்களை ஆர்வமுடன் தொகுத்து வருகின்றேன். இப்பணி ஒரு தொடர் பணியாகும். இது நிற்க. கனடாவில் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின் ஓர் அங்கமாக நடைபெறும் தொல்காப்பிய ஆவணங்களின் கண்காட்சியில் ஓலைச்சுவடி வடிவில் இருந்த தொல்காப்பிய மாதிரிகள், முதல் பதிப்பு நூல்கள் அடுத்தடுத்த பதிப்புகள், தொல்காப்பியம் குறித்த ஆராய்ச்சி நூல்கள், தொல்காப்பிய மொழிபெயர்ப்புகள், உரைவள நூல்கள், ஆங்கில நூல்கள் முதலியவற்றின் மேலட்டைகள் வண்ணப் பதிவாகக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. தொல்காப்பியப் பதிப்பிலும் ஆய்விலும் மொழிபெயர்ப்பிலும், உரை வரைதலிலும் தம் வாழ்நாளை ஒப்படைத்துக்கொண்ட தொல்காப்பிய அறிஞர்களின் புகைப்படங்கள் - தொல்காப்பிய ஆர்வலர்களின் படங்கள் நூற்றுக்கணக்கில் இக்கண்காட்சியில் இடம்பெற உள்ளமை தனிச்சிறப்பாகும்.



இதுவரை அறிஞர் உலகத்தின் கவனத்திற்கு வராத பல படங்கள் - செய்திகள் கவனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் வாழ்ந்த தொல்காப்பிய ஆராய்ச்சியாளர்களின் படங்களுடன் இங்கிலாந்து, செகோசுலேவியா, பிரான்சு, செர்மனி, அமெரிக்கா, கனடா, சப்பான் நாட்டுத் தொல்காப்பிய அறிஞர்களின் படங்களும் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. தொல்காப்பிய ஆர்வலர்களுக்கு வாய்ப்பிருப்பின் கனடாவில் நடைபெறும் (2024, செப்டம்பர் 20 ,21) தொல்காப்பியக் கண்காட்சியைக் கண்டுகளிக்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.'



புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு. இளங்கோவன் தான் திரும்பிச் செல்லும் நாள் வரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றார். மேலும், வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் மன்றத்தின் வரவேற்பறை நேர்காணலிலும் கலந்து கொள்கிறார்.- செய்திப் பகிர்வு முனைவர் மு. இளங்கோவன்



- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்











      Our Apps Available On




      Dinamalar

      Follow us