Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/அமெரிக்கா/செய்திகள்/மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகத்தின் கலை இலக்கியப் போட்டிகள்

மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகத்தின் கலை இலக்கியப் போட்டிகள்

மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகத்தின் கலை இலக்கியப் போட்டிகள்

மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகத்தின் கலை இலக்கியப் போட்டிகள்

ஏப் 09, 2024


Google News
Latest Tamil News
மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகம் (Maryland Tamil Academy) 2024 வருடம் தனது 18-வது கல்வி ஆண்டில் பெருமையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகம், அனுபவம் மிக்க தன்னார்வல ஆசிரியர்களின் பங்களிப்பாலும், நாளைய தமிழ்ச் சமூகத்தின் தூண்களான மாணவப் பயிற்சி ஆசிரியர்களின் முயற்சியாலும் செயல்பட்டு வரும் ஒரு தன்னார்வலத் தொண்டு நிறுவனமாகும்.

மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகத்தின்(MTA) கலை மற்றும் இலக்கியப் போட்டிகள், சனிக்கிழமை மார்ச் 09, 2024 அன்று, ஜெர்மன்டவுன் நகரில், கிங்ஸ்வியூ நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வைப் போட்டிகள் என்று சொல்வதை விட மேரிலாண்ட் மாகாணத்தில் வாழும் தமிழ்ச் சமூகத்தில் உள்ள இளம் திறமையாளர்களை அடையாளப்படுத்திய அமர்க்களமான திருவிழா எனக் கூறலாம்.



மாணவர்களின் தமிழ் வகுப்பு நிலைக்கேற்ப எட்டு இலக்கியப் போட்டிகளும், வயதிற்கேற்ப கலைப்போட்டிகளாக ஓவியப் போட்டி, தமிழிசைப் பாடல், நாட்டுப்புறப் பாடல்,பேச்சுப்போட்டி என்றும், பாரம்பரிய விளையாட்டுகளான ஆடு புலி ஆட்டம், ஜந்து கல், பாண்டி, மற்றும் உறியடி போன்ற போட்டிகளும் நடைபெற்றன. இது மட்டுமின்றி, மாணவர்கள் குழு அமைத்து விவாதம் செய்யும் பட்டிமன்றப் போட்டியும் இருந்தது.

மழலைச் செல்வங்கள் படத்திலிருக்கும் நிகழ்வுகளைத் தமிழில் சொல்லும் கண்ணோடு காண்பதெல்லாம் என்ற போட்டி காண்போரைக் கவர்ந்திழுத்தது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் 3 நிமிடத்திற்குள் திருக்குறள்களைச் சொல்ல வேண்டும். சில குழந்தைகள் 60 திருக்குறளைக் கொடுக்கப்பட்ட 3 நிமிடத்திற்குள் சொல்லி முடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.



மாணவர்களின் படைப்பாற்றலைத் தூண்டும் வகையில் தமிழில் கட்டுரைப் போட்டியும் , கற்பனைத்திறனை வெளிக்கொணர ஓவியப் போட்டியும், சொற்சிலம்பம் ஆடிய பேச்சுப் போட்டியும் மேடையில் சிறப்பாகக் காலைப் பொழுதில் நடைபெற்றது.

தமிழ்ப் பண்களின் பெயர்களைச் சொல்லி, தாளம் , சுருதி மாறாமல் , தமிழ் இனத்தின் பெருமை , தமிழ்க் கலாச்சாரத்தின் மேன்மையை, பெண் உரிமை, பெண்ணியம் போற்றும் பாடல்கள் ஒலிக்க ஒலிக்கத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே என்றால் சிறிதும் மிகையாகாது. மறுபுறம் மக்களிசையாம் நாட்டுப்புறப் பாடல்களை மழலை முதல் மூன்றாம் வகுப்பு மாணவர் வரை பாடி அசத்தினர்.



பல விழாக்களில் பட்டிமன்றத்தைப் பார்த்திருக்கிறோம். இப்பள்ளியில் அதற்கும் ஒரு போட்டியா என்று வியக்கும் வண்ணம் மாணவர் பட்டிமன்றம் நடைபெற்றது. சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இப்போட்டியில் நானும் போட்டியின் நடுவராகக் கலந்து கொண்டேன். ஒவ்வொரு அணியும் காரசாரமான விவாதங்களையும் , கருத்துகளையும் பகிர்ந்தார்கள்.

மாணவர்களுக்கான மேடைப் போட்டிகள் முடிவு பெற்றவுடன் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான ஆடு புலி ஆட்டம், ஜந்து கல், பாண்டி, மற்றும் உறியடி போன்ற போட்டிகளும் நடைபெற்றன. ஊர்த் திருவிழா போலே மக்கள் கூட்டம் குதூகலமாய் போட்டியாளர்களை ஆராவாரப்படுத்தி மகிழ்ந்தனர்.



நான்கு மாதங்களாக MTA நிர்வாகக்குழு மற்றும் தன்னார்வலர்கள் குழு இடைவிடாமல் உழைத்து, சிறந்த திட்டமிடலுடன் அனைத்து போட்டிகளையும் ஒரே நாளில் வெகுசிறப்பாக நடத்தினர். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு குழு நியமித்து அவர்களையே நடுவர்களிடம் பேசி ஒருங்கிணைக்குமாறு அமைத்திருந்தது. 25க்கும் மேலான தன்னார்வலர்களும், 15 க்கும் மேலான SSL மாணவர்களும் களப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இட்லி, வடை, பொங்கல் என்று காலைச் சிற்றுண்டியும் மற்றும் பெற்றோர் கைவண்ணத்தில் சைவ/அசைவ மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 8 மணியிலிருந்து இரவு 8:30 மணிக்குள் அனைத்து போட்டிகளும் சரியான நேரத்தில் துவங்கிச் சரியான நேரத்தில் முடிவடைந்தது. தகவல்: நிர்வாகக் குழு மேரிலாண்ட் தமிழ்க் கல்விக்கழகம்



- நமது செய்தியாளர் முருகவேலு வைத்தியநாதன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us