Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூரில் இலக்கியவனம்

சிங்கப்பூரில் இலக்கியவனம்

சிங்கப்பூரில் இலக்கியவனம்

சிங்கப்பூரில் இலக்கியவனம்

நவ 19, 2024


Google News
Latest Tamil News
பொன் விழாவை நோக்கிப் பீடு நடைபோடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகம் தனது முத்திரை நிகழ்வாக நவம்பர் 16 ஆம் தேதி சிராங்கூன் சமூக மன்ற அரங்கில் 19 ஆவது நிகழ்வாக இலக்கியவனம் நிகழ்வை மிகச் சிறப்பாக நடத்தியது. இலக்கியச்சுடர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் தலைமை ஏற்றார். பதினெண் மேற்கணக்கு, கீழ்க் கணக்கு நூல் ஆய்வைத் தொடர்ந்து இம்மாத நிகழ்வு நாலடியார் நூலின் பாடல்களைக் கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்றது.

திருவள்ளுவர் தமிழ்ப் பேச்சாளர் மன்ற மாதாந்திரக் கூட்டத்தின் ஒரு அங்கமாக இந்நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத் தகுந்ததாகும். நிகழ்ச்சி நெறியாளர் அசோக் தொடக்கி வைத்த இந்நிகழ்வில் சிராங்கூன் சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுத் துணைத் தலைவர் முரளி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினருக்குத் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் உமா சங்கர் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.

முனைவர் சரோஜினி செல்லக் கிருஷ்ணன் தமக்கே உரிய இலக்கியப் பார்வையில் நாலடியார் பற்றி அறிமுக உரையாற்றி இலக்கியவனத்தைத் தொடக்கி வைத்த பின் அனுராதா, வானதி, மணிகண்டன், மதிவதனா, உமா சங்கர், வித்யா, ராதிகா முதலியோர் மேடையேறி அவரவர்க்குரிய தலைப்புக்களில் நாலடியாரை அவைமுன் நிறுத்தினர். நளினத்தோடும் நகைச் சுவையோடும் அவர்கள் ஆற்றிய உரை அரங்கத்தை அதிர வைத்தது. இலக்கிய உரை மழையில் மிதந்த பார்வையாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆர்ப்பரித்து உற்சாகப்படுத்தினர்.

தலைமை ஏற்ற முனைவர் சரோஜினி அம்மையார் இடையிடையே நாலடியாரின் பொருள் நயம், சொல் நயம், இலக்கிய நயம் பற்றி எடுத்துரைத்தமை சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி பொழிந்தாற் போலிருந்தது. திருவள்ளுவர் தமிழ்ப் பேச்சாளர் மன்றத் தலைவர் சரத்பாபு நன்றி நவில இரவு அறுசுவை விருந்துடன் சொற்சுவை இலக்கிய விருந்து இனிதே நிறைவு கண்டது. அடுத்த நிகழ்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us