/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/கத்தாரில் வெற்றித் தமிழர்களைக் கௌரவித்த வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்புகத்தாரில் வெற்றித் தமிழர்களைக் கௌரவித்த வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பு
கத்தாரில் வெற்றித் தமிழர்களைக் கௌரவித்த வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பு
கத்தாரில் வெற்றித் தமிழர்களைக் கௌரவித்த வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பு
கத்தாரில் வெற்றித் தமிழர்களைக் கௌரவித்த வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பு

வெற்றித் தமிழர்கள் நிகழ்வில் கத்தாரில் செயல்பட்டு வரும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இந்திய தூதரகத்தின் கீழ் இயங்கும் ஐ.சி.சி., ஐ.சி.பி.எஃப், ஐ.எஸ்.சி ஆகிய அமைப்புகளில் கடந்த 2023-/24 ஆண்டு மேலாண்மை குழுவில் சிறப்பாகவும் சமூக அக்கறையோடும் தமிழ்மக்களுக்கு சேவை செய்துவந்த மோகன் குமார், இராமசெல்வம், சமீர் அஹ்மத், சீனிவாசன் ஆகியோரை ஒருங்கிணைந்து கௌரவித்தனர்.
அதைத் தொடர்ந்து, அண்மையில் ஐ.சி.சி., ஐ.சி.பி.எஃப், ஐ.எஸ்.சி ஆகிய அமைப்புகளின் மேலாண்மைக் குழுவில் பொறுப்பேற்றிருக்கும் வெற்றித் தமிழர்களான மணிபாரதி, ரவீந்திர பிரசாத், சாதிக் பாட்சா, நிர்மாலா குருஸ்ரீ, ஆர். ஜே. கவிதா மகேந்திரன் ஆகியோரையும் ஒருமுகமாக எல்லா அமைப்புகளும் ஒன்றிணைந்து பெருமை செய்தனர்.
அவர்கள் ஐவருக்கும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவகசிந்தாமணி புத்தகங்களை வெற்றிப் பரிசாக, வெற்றித்தமிழர்கள் அமைப்பினரும் மற்றும் கத்தார் வாழ் தமிழர்களின் முன்னோடிகளான குப்பன் துரைசாமி, இஸ்மாயில் நாகூர், வரதராஜன், ராஜ விஜயன் ஆகியோரும் கூடியிருந்த அனைத்து தமிழர்கள் சார்பாக வழங்கினர்.
கௌரவிக்கப்பட்ட பெருந்தகைகள் ஐவரும் தங்களது ஏற்புரையில் மகிழ்ச்சியையும், நன்றியையும் முகம்மலர வெளிப்படுத்தி வெற்றித் தமிழர்கள் அமைப்பை வெகுவாக பாராட்டி வாழ்த்தினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் இஃப்தார் நோன்பு திறப்பதற்கு முன்பாக ஏ. முகமத் முகசின் ஹசனி ஹஸ்ரத் சிறப்புரை ஆற்றினார். யாஃபா அப்துல்லா நோன்பு காலத்தின் கடமைகளை எடுத்துரைத்து பிரார்த்தனை செய்தார். அதைத் தொடர்ந்து விழாவுக்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் இன்சுவை இஃப்தார் விருந்து படைக்கப்பட்டது.
வெற்றித் தமிழர்கள் அமைப்பின் பொறுப்பாளர்களான சண்முகப் பாண்டியன் நிகழ்வை தொகுத்து வழங்க, குருஸ்ரீ வரவேற்புரை ஆற்ற, சக்திவேல் மகாலிங்கம் அமைப்பின் நோக்கம், அதற்கான திட்டங்கள் குறித்து விளக்கமாகப் பேசினார். பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.
வெற்றித் தமிழர்கள் அமைப்பின் தற்கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் இந்த விழாவில் கலந்தாலோசிக்கப்பட்டது. வெற்றித் தமிழர்கள் வருடாந்திர சந்திப்பு மற்றும் இஃப்தார் விருந்தோம்பலுடன் நிகழ்வுற்ற கௌரவிப்பு விழாவில் பல்வேறு தமிழ் மகளிர் அமைப்புகளின் நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒவ்வொரு அமைப்பின் பிரதிநிதிகளும், மகளிர் அமைப்புகள் உள்பட தங்களது அமைப்பின் செயல்பாடுகள் குறித்து சிற்றுரை வழங்கி கருத்துகளை பகிர்ந்து கொண்டது கூட்டமைப்பின் அடிப்படை சிந்தனையான 'எல்லோருக்கும் வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை' ஆகியவற்றை உணர்த்தியது.
வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோளான ஒருங்கிணைப்பு, பரஸ்பர ஆதரவு, வெளிப்படைத்தன்மை, முக்கியமாக தமிழர்களின் ஒற்றுமை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக நிறைவேறியதால் அனைவரும் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். இவ்வாறு பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து, ஒரே நிகழ்வில் கூடி, ஒருமித்த அலைவரிசையில் நின்று, வெற்றித் தமிழர்களாக பொறுப்பேற்றிருக்கும் தங்களின் பிரதிநிதிகளை கௌரவித்து மகிழ்வது என்பது உலகில் வேறெங்கும் நடந்திருக்குமா என்பது ஐயமே, இருப்பினும் இதுபோன்ற விழாக்கள் உலகெங்கும் வாழும் தமிழர்களால் இனி நடத்தப்படும் என்கிற நம்பிக்கையை விதைத்து, தமிழர்களின் ஒற்றுமையை உலகுக்கு உணர்த்தும் வகையில் இந்த வெற்றித் தமிழர்கள் நிகழ்ச்சி முன்னுதாரணமாக அமைந்தது என்று கலந்து கொண்டவர்கள் கூறியதே, வெற்றித் தமிழர்கள் கூட்டமைப்பு விழாவின் வெற்றி அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
நமது செய்தியாளர் எஸ்.சிவசங்கர்