Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/அன்னை தமிழ் மன்றம் கொண்டாடிய தைத் திருநாள்

அன்னை தமிழ் மன்றம் கொண்டாடிய தைத் திருநாள்

அன்னை தமிழ் மன்றம் கொண்டாடிய தைத் திருநாள்

அன்னை தமிழ் மன்றம் கொண்டாடிய தைத் திருநாள்

ஜன 30, 2025


Google News
Latest Tamil News
பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகள் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம் தைத் திருநாளாம் பொங்கல் திருநாளை அனைவரும் போற்றும் வண்ணம் ஜனவரி 24,2025 வெள்ளியன்று இந்தியன் கிளப் வளாகத்தில் மாபெரும் பொங்கல் கொண்டாட்டத்தினை மக்கள் மனம் மகிழ மிகப்பிரம்மாண்டமாய் கொண்டாடி மகிழ்ந்தது. உழவுக்கு உறுதுணையாக இருக்கும் கதிரவனுக்கு நன்றி சொல்லும் விதமாய் புதுப்பானையில் புத்தரிசியிட்டு,வாழை தோரணங்கள் சூழ மகளிர் பொங்கல்வைத்து, குலவியிட்டு விழாவினை தொடங்கினர்.

வண்ணமாய் வண்ணமாய் காண்போர் கண்கள் ரசிக்கும்படி பெண்களுக்கான கோலப்போட்டி, சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், உறியடித்தல், ஆண்கள் பெண்களுக்கான கயிறிழுக்கும் போட்டி என அனைத்திலும் மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பொங்கல் விழாவின் சிறப்பம்சமாக நூறு பெண்கள் ஒன்று கூடி முளைப்பாரி வைத்து நடத்திய கும்மியாட்டம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. சிறுவர்களின் நடன நிகழ்ச்சிகள் கம்பத்தாட்டம், திரையிசை நடனம், ஆகியவை அனைவராலும் பெரிதும் இரசிக்கப்பட்டது.



இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக,பஹ்ரைன் அரசின் தகவல் துறை இயக்குனர் யூசுப் லோரி, பஹ்ரைன் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் ஹுசைன் அல் ஜனாஹி ஆகியோரை அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K , பொதுச் செயலாளர் பழனிச்சாமி, பொங்கல் விழாவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் வரவேற்று கௌரவித்தனர். மேலும், கொடையாளர்களும் பல முக்கிய விருந்தினர்களும் கலந்து கொண்டு விழாவினை மகிழ்வுடன் கண்டுகளித்தனர்.



சுமார் மூவாயிரம் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அனைவருக்கும் வாழையிலையில் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பின்பு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பெரியோர், சிறுவர், சிறுமியர், ஆடவர், மகளிர், இளைஞர்கள் என அனைத்து மக்களும் கலந்து கொண்டு அன்றைய நாளினை திருவிழாவாக மாற்றினர்.



இந்த நிகழ்வின் மூலம், நமது தமிழ்ப் பண்பாட்டு சிறப்பை உலகறிய செய்ததில் அன்னை தமிழ் மன்றம் பெருமிதம் கொள்கிறது. விழா வெற்றியடைய இரவு பகல் பாராமல் உழைத்த தன்னார்வலர்கள், பங்கேற்பாளர்கள், அன்னை தமிழ் மன்ற நிர்வாகிகள்,மகளிர் குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அன்னை தமிழ் மன்றம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறது.



- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us