Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/அட்லாண்டா பெண் கவிஞருக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருது

அட்லாண்டா பெண் கவிஞருக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருது

அட்லாண்டா பெண் கவிஞருக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருது

அட்லாண்டா பெண் கவிஞருக்குப் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருது

ஜூலை 04, 2025


Google News
Latest Tamil News

அட்லாண்டாவைச் சேர்ந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா தமிழ்ப் பணிக்காக பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழ்ச் சான்றோர் விருதளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் நடாஷா அயர்ன்ஸ், இலண்டன் துணை மேயர் முகமது இஸ்லாம் இணைந்து கேடயம் மற்றும் விருதினை வழங்க, கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் சிவா பிள்ளை பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தார்.



தமிழ் அறிஞர்களுக்கு விருதளித்துச் சிறப்பு செய்யும் நிகழ்வை, கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன், தமிழியல் ஆய்வு மையத்தின் இயக்குனர் முனைவர் பாட்டழகன், குரோய்டன் தமிழ்ச் சங்கம், இலண்டன், குரோய்டன் மாநகராட்சி கவுன்சிலர் அப்பு தாமோதரன், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் சிவா பிள்ளை ஆகியோர் இணைந்து நடத்தினர். இலண்டன் வெஸ்மினிஸ்டர் சதுக்கத்தில் அமைந்துள்ள பிரித்தானிய பாராளுமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அரங்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்வு தொடங்கியது.



வி. ஜி. பி. உலகத் தமிழ் சங்கத் தலைவர் வி. ஜி. சந்தோசம், பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்டீவ் ரீட், நடாஷா அயன்ஸ், உமா குமரன், சியோபினி மெக்டோனா, சாரா ஜோன்ஸ், ஜிம் டிக்ஸன், குரீந்தர் சிங், ஜஸ் அத்வால், ஃப்ளோரன்ஸ் இஸலோமி, பாபி டீன், லண்டன் துணை மேயர் முகமது இஸ்லாம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.



ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, பிரான்சு, உள்ளிட்ட 24 நாடுகளில் இருந்து தமிழ் அறிஞர்கள் சிறப்பிக்கப்பட்டனர். குரோய்டன் மாநகராட்சி மன்றத்தின் கவுன்சிலர் அப்பு தாமோதரன் வரவேற்புரை வழங்க, முனைவர் பாட்டழகன் நோக்க உரை வழங்கினார். குரோய்டன் தமிழ்ச் சங்கத்தின் நோக்கம் குறித்து அனந்த இராமகிருஷ்ணன், கோல்ட் ஸ்மித் பல்கலைக்கழகத்தின் நோக்கம் குறித்து சிவா பிள்ளை உரையாற்றினர்.



முனைவர் பாட்டழகன் எழுதிய 'தன்னலம் இன்றி தழைத்த நிழல் அன்னை சரோஜினி சீனிவாசன்' வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. சுற்றுசூழல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்டீவ் ரீட் இந்த நூலை வெளியிட்டார். பிரித்தானிய நாடாளுமன்ற முதல் தமிழ்ப் உறுப்பினர் உமா குமரன் நூலின் முதல் பிரதியையும், சுமதி இரண்டாம் பிரதியையும் பெற்றுக்கொண்டனர். நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலும் இருந்து அறிஞர்கள் உரையாற்றினர்.



அமெரிக்காவிலிருந்து வந்திருந்த கவிஞர் கிரேஸ் பிரதிபா பேசும் பொழுது பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழுக்காக தான் சிறப்பிக்கப்படுவதைப் பெருமையாகக் கருதுவதாகவும் தமிழன்னை தன்னை அங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறாள் என்றும் நன்றி பாராட்டினார். தன்னுடைய தமிழ் இலக்கியப் பணியில் உறுதுணையாக இருக்கும் ஒவ்வொருவரையும் நன்றியுடன் நினைவு கூர்ந்து பகிர்ந்த அவர் தமிழை மற்றவருக்கு எடுத்துச் செல்ல நினைப்பதும் பேசுவதும் தமிழின் தொன்மை குறித்து பெருமையினால் மட்டுமல்ல, மற்றவரைக் குறைத்துப் பார்ப்பதற்காகவும் அல்ல, ஆனால் தமிழ் மொழியில் இருக்கும் ஆழ்ந்த விழுமியங்களை மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவும் தான் என்று கூறினார்.



தொன்தமிழர்கள் தங்களைக் குறுகிய வட்டத்துக்குள் குறுக்கிக் கொள்ளாமல் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று இயற்கையோடு இயைந்து அனைவருடனும் இணைந்து வாழ்ந்தனர் என்று குறிப்பிட்ட அவர் அந்தத் தமிழ் விழுமியங்களை இன்றைய உலகிற்கு எடுத்துச் சொல்வது தேவையானது என்று குறிப்பிட்டார். தமிழின் தொன்மையைத் தொல்லியல் ஆதாரங்களுடன் நிறுவ உழைக்கும் அதே நேரத்தில் செயற்கை நுண்ணறிவையும் தமிழால் வளப்படுத்த வேண்டும் என்றும் அதற்கான பணிகளில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்றும் பேசியது பெரும் வரவேற்பினைப் பெற்றது.



ஆ.கோ.மோ. தமிழில் ஆய்வு மையச் செயலாளர் அகிலன் நன்றியுரை வழங்கினார்.



- தினமலர் வாசகி கிரேஸ் பிரதிபா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us