Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/ஐரோப்பா/செய்திகள்/அயர்லாந்து ஆடை வடிவமைப்பு போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ் மாணவி

அயர்லாந்து ஆடை வடிவமைப்பு போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ் மாணவி

அயர்லாந்து ஆடை வடிவமைப்பு போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ் மாணவி

அயர்லாந்து ஆடை வடிவமைப்பு போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற தமிழ் மாணவி

மார் 09, 2024


Google News
Latest Tamil News
Junk koutureஎனும் அமைப்பு, சுற்றுப் புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை இளம் தலைமுறையினர் மத்தியில் விதைக்கும் வண்ணம், பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, உலகில் பல நாடுகளில் மறுசுழற்சி செய்ய கூடிய பொருட்களை வைத்து ஆடை வடிவமைத்துக் காட்சிப்படுத்தும் ஆடை அணிவகுப்புப் போட்டியையும் நடத்தி வருகிறது.இத்தகைய விழிப்புணர்வு நிகழ்வுகளின் மூலம், இயற்கை நமக்குக் கொடையாகத் தந்துள்ள நிலம் நீர் நெருப்பு காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐம்பூதங்களைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.


இந் நிறுவனம், அண்மையில் அயர்லாந்தை சேர்ந்த திறமை வாய்ந்த இளைய தலைமுறை பள்ளி மாணவர்கள் பங்கு கொண்ட ஆடை வடிவமைப்பு மற்றும் அணி வகுப்புப் போட்டியை, டப்ளினில் உள்ள Helix மேடையில் நடத்தி முடித்துள்ளது. அயர்லாந்து முழுவதிலும் இருந்து சுமார் 1600 க்கும் மேற்பட்ட ஆடை வடிவமைப்புகள் போட்டிக்கு அனுப்பப்பட்ட நிலையில், தகுந்த பரிசீலனைக்குப் பிறகு 180 வடிமைப்புகள் போட்டிக்கு தகுதி பெற்றன. அவற்றிலிருந்து 60 வடிவமைப்புகள் இறுதி போட்டிக்குத் தேர்வாகி உள்ளன. 

அயர்லாந்தின் கார்லோ என்னும் நகரில் வசிக்கும் சென்னையைச் சேர்ந்த ஈஸ்டர் மற்றும் செவிலியர் ஜமுனா ராணி தம்பதியினரின் மூத்த மகள் ஜோனா தமிழ் நேயா அவர் படிக்கும் Tullow Community ள்ளியின் சார்பாகக் கலந்து கொண்டார். இவர், பிரான்சு நாட்டைச் சேர்ந்த தனது பள்ளித் தோழி Romane என்பவருடன் இணைந்து “Divine Menstruation”“புனித மாதவிடாய்” எனும் தலைப்பில் மறுசுழற்சி செய்ய கூடிய, உபயோகம் இல்லாத, பழைய காலணிகள், கிழிந்த புடவை, பழைய , உடைந்த அணிகலன்கள் மற்றும் Sanitary pad மேலுறையையும் பயன்படுத்தி ஒரு ஆடை வடிவமைத்துப் போட்டியில் கலந்து கொண்டார்.

இந்த ஆடையை, இந்தியா மற்றும் அயர்லாந்தின் பண்பாட்டை கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், பெண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்தியலையும் உள்ளடக்கிய வடிவமாகவும் உருவாக்கி, அசாம் மாநிலத்தில் மக்களால் வழிபடும் காமாக்கியா எனும் தெய்வத்தை முன்னிறுத்தி, தான் வடிவமைத்த ஆடையை அணிந்து போட்டியில் கலந்து கொண்டார்.போட்டியின் நடுவர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாராட்டை பெரிதும் ஈர்த்த நேயாவின் தலைப்பும், வடிவமைப்பும் இந்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள இறுதிப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் வடிவமைப்பை பார்த்த தேர்வுக்குழு , வடிவமைப்பு திறன் மற்றும் நோக்கத்தை பாராட்டினர். குறிப்பாக பழைய காலணிகளை உபயோகித்த விதம், புனித மாதவிடாய் எனும் தலைப்பு பிரமிக்க வைத்ததாகவும் தெரிவித்தனர்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக அயர்லாந்தில் வசித்து வரும் ஜோனா தமிழ் நேயா தன்னுடைய வடிவமைப்பை பற்றி கூறும் போது, “மாதவிடாய் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைப்பற்றி வெளிப்படையாக பெண்கள் பேச வேண்டும் என்பதும் தான் எனது நோக்கம்“ என்றும், “இந்தியா போன்ற வளரும் நாடுகளிலும், வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் தன்னுடைய மாதவிடாய் பற்றி பொதுவெளியில் கூறவோ, அந்த நேரத்தில் ஏற்படும் உடல் வலி, மனநிலை மாற்றங்களை பற்றி வெளிப்படையாக பேசவோ தயங்கி கொண்டு தான் இருக்கிறார்கள்.

இன்றும் சில வழக்கங்களில் மாதவிடாய் என்பது சுத்தமின்மை அதனால் பெண்கள் சமைக்க, கோயில்களுக்கு செல்ல, அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, இது குறித்த புரிதலை ஏற்படுத்துவது தான் எனது முக்கிய நோக்கமாக இருந்தது “தன் தந்தை அல்லது பிற ஆண்களின் முன்பு அதை பற்றி பேசவோ, மாதவிடாய் வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. அது பெண்களின் வாழ்வில் ஒரு அங்கம், பெண்களுக்கான பெருமை, புனிதமானது என உரக்கச் சொல்ல இந்த junk kouture fashion Showதீ மேடையை பயன்படுத்தி கொண்டேன். 

புனிதமாக போற்றப்படும் பெண் தெய்வங்களுக்கும் மாதவிடாய் உண்டு என்பதை வலியுறுத்தும், இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பெண் தெய்வமாகக் கொண்டாடப்படும் கமக்கியா தேவியை முன்னிறுத்தும் விதமாக, இப்போட்டியில் அந்த ஆடையை அணிந்து கொண்டு கலந்து கொண்டேன்” என்றும் தெரிவித்தார்.இந்த ஆடைவடிமைப்புக்கு உறுதுணையாக இருந்த தன்னுடைய பள்ளித் தோழி Romane-க்கும், குடும்பத்தினருக்கும், போட்டியில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்திய தனது பள்ளி ஆசிரியருக்கும் தன் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட ஜோனா தமிழ் நேயா, மே மாதம் நடக்கும் அயர்லாந்து அளவிலான இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று, உலக அளவிலான போட்டியிலும் வெற்றி பெறுவேன் எனவும் உறுதியோடு தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் ரமேஷ்நாதன்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us