Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அந்த ஏழு நாட்கள்! தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றிய முகாம்

அந்த ஏழு நாட்கள்! தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றிய முகாம்

அந்த ஏழு நாட்கள்! தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றிய முகாம்

அந்த ஏழு நாட்கள்! தேசிய ஒருமைப்பாட்டை பறைசாற்றிய முகாம்

ADDED : மார் 22, 2025 11:09 PM


Google News
Latest Tamil News
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், ஓடிசா மாநிலம், புவனேஸ்வர், சிக்ஸா ஓ அனுபந்தன் பல்கலையில், பிப்., 21 - 27 வரை, கல்லுாரி மாணவர்களுக்கான தேசிய ஒருமைப்பாட்டு முகாம் நடந்தது. நாடு முழுதும் இருந்து, 242 பேர் பங்கேற்ற இம்முகாமில், தமிழகத்தில் இருந்து, பத்து பேரும், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வணிகவியல் துறை மாணவர் மதுகார்த்திக்கும் பங்கேற்றனர்.

தேசிய முகாமில் 'நம்ம ஊரு திருவிழா இப்படித்தான்' எனும் தலைப்பில், பறையாட்டம், காவடியாட்டம், ஓயிலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி, பார்வையாளர்களை கவர்ந்த தமிழக குழுவினர், இரண்டாவது பரிசு பெற்று அசத்தியுள்ளனர்.

தேசிய ஒருமைப்பாட்டு முகாம் அனுபவம் குறித்து, மதுகார்த்திக் இவ்வாறு சொன்னார்...

ஒவ்வொரு மாநிலத்தின் கலாசாரம், பண்பாடு அவர்களின் வாழ்க்கை முறை, இருபாலரின் உடை, சம்பிரதாயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அசாம் மாநிலத்தின் பிகு நடனம் மிகவும் கவர்ந்தது. தேயிலை, பெட்ரோலியம், பட்டு உற்பத்தியில் சிறந்து விளங்கும் அசாம் மாநிலத்தில், வேறெங்கிலும் பார்க்க முடியாத பல அரிய விலங்கினங்களும், தாவர வகைகளும் இருப்பதாக அம்மாநில மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர். காசி ரங்கா பூங்காவை கண்முன் நிறுத்தியிருந்தனர்.

முதல் நாள் பூரி ஜெகநாதர் கோவில் சென்றோம்; வழிபாடுகளை அறிந்தோம். அடுத்தடுத்த நாட்கள் உதயகிரி, கந்தகிரி குகை பயணித்தோம். தொல்லியல், வரலாறு, சமயம் சார்ந்த பல விஷயங்கள் அங்கே ஒருங்கே அமைந்திருந்தது. மலைகளுக்குள் குகை கோவில் அமைந்துள்ளது, அற்புதமாக இருந்தது. இரு நாட்கள் தங்கி, துாய்மை பணிகளை மேற்கொண்டோம்.

அனைத்து மாநில மாணவர்களை ஒருங்கிணைத்து, 'ஒரே நாடு... ஒரே தேர்தல்' பட்டிமன்றம், 'வளர்ச்சி அடைந்த இந்தியா' எனும் தலைப்பில் கட்டுரை மற்றும் பேச்சுபோட்டி நடத்தப்பட்டது. 'போதை இல்லாத இந்தியாவை உருவாக்கும் இளைய தலைமுறை' எனும் தலைப்பில், மாணவியருக்கு ரங்கோலி போட்டி நடந்தது. நிறைவு நாளில், ஒரு குழுவுக்கு தலைமை வகிக்க வேண்டும் என்றால் என்னென்ன தலைமை பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும், நேர மேலாண்மை பின்பற்றுவது, ஒழுக்க நெறியை கடைபிடித்து வாழ்வது குறித்து சிறப்பாக விளக்கம் அளித்தனர். மொத்தத்தில், உற்சாகமாக கழிந்த அந்த ஏழு நாட்களும், தேச பக்தியை என் மனதில் மேலும் வளர்த்தது. என் வாழ்க்கையில், என்றென்றும் மறக்க முடியாத நாட்களாக அவை அமைந்தன.

இவ்வாறு, மதுகார்த்திக் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us