Dinamalar-Logo
Dinamalar Logo


/வாராவாரம்/விருந்தினர் பகுதி/ உடலுக்கு வலுவேற்றும் மல்லர் கம்பம் சாதிக்கும் திருமுருகன்

உடலுக்கு வலுவேற்றும் மல்லர் கம்பம் சாதிக்கும் திருமுருகன்

உடலுக்கு வலுவேற்றும் மல்லர் கம்பம் சாதிக்கும் திருமுருகன்

உடலுக்கு வலுவேற்றும் மல்லர் கம்பம் சாதிக்கும் திருமுருகன்

ADDED : செப் 21, 2025 05:30 AM


Google News
Latest Tamil News
ப ழங்காலத்தில் உடலுக்கு வலுவேற்றும் விளையாட்டை மல்லர் கம்பம் என்பர். அக்காலத்து படை வீரர்கள் மனித உருவத்தை மரம், கல்லில் வடித்து அதனுடன் மல்லுக்கட்டி பயிற்சி மேற்கொண்டு உடலை வலுவேற்றினர். இந்த விளையாட்டுக்கு மல்லர் கம்பம் என்ற பெயர் ஏற்பட்டது.

உரலில் குழவி சுற்றுவது போல் கம்பு செயல்பட்டால் அது சிலம்பம் விளையாட்டு. குழவி (கம்பம்) நிலைத்து நிற்க உரல் சுற்றுவது போல செயல்பட்டால் அது மல்லர் கம்பம் எனப்படும். தமிழகத்தின் பாரம்பரிய மல்லர் கம்பம் கலையை முறையாக கற்றுக்கொள்ள ஆர்வமுள்ள கிராமப் புற மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து வருகிறார் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டி.திருமுருகன்.

இவர் மல்லர் கம்பம், சிலம்பம், அடிமுறை, குத்து வரிசையை முறையாக கற்று, 2022ல் புதுடில்லியில் பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடந்த தேசிய சிலம்பம் போட்டியில் வெள்ளி பதக்கம் பெற்றார். 2023ல் தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட முதல்வர் கோப்பை சிலம்பம் போட்டியில் பொது பிரிவில் ஒற்றை கம்பு, இரட்டை கம்பு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இவரது மாணவர்கள் மாநில, தேசிய மல்லர் கம்பம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளனர். கேலோ இந்தியா சார்பில் நடைபெற்ற கடற்கரை மல்லர் கம்பம் போட்டியில் இவரது மாணவர் தருண் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இவரது சேவைகளை பாராட்டி தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டு துறை, 'கலைவளர்மணி' பட்டம் வழங்கியது. மெக்சிகோ தொலசா பல்கலை சார்பில் யுவகலா பாரதி விருது பெற்றுள்ளார்.

திருமுருகன் கூறுகிறார்...

சிறு வயது முதலே சிலம்பம் சுற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தேன். 17 வயதில் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். டிப்ளமோ படித்து வேலை தேடி ராமநாதபுரம் வந்த போது சிலம்பத்தில் பல முறைகளை கற்றேன்.மல்லர் கம்பம் கலையை விழுப்புரம் மாவட்டத்தில் பயிற்சியாளர் மல்லன் ஆதித்யனிடம் கற்றுக் கொண்டேன். ராமநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர சிலம்ப பயிற்சியாளராக வேலை பார்க்கிறேன். மற்ற நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம், மல்லர் கம்பம் பயிற்சி அளிக்கிறேன். அழிந்து வரும் மல்லர் கம்பம் கலையை வரும் தலைமுறையினர் கற்றுக்கொள்ள வைப்பதே லட்சியம் என்றார்.

இவரை வாழ்த்த 90951 06578





      Our Apps Available On




      Dinamalar

      Follow us