/வாராவாரம்/விருந்தினர் பகுதி/தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானாதமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா
தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா
தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா
தமிழ் எங்கள் உயிர்மூச்சு: பாசத்துடன் பர்வீன் சுல்தானா

உருது குடும்பத்தில் தமிழ்மகள் உருவான தருணம்?
பிறந்தது முதல் பத்து வயது வரை வடசென்னை. தற்போது மத்திய சென்னையில் (ராயப்பேட்டை) வசிக்கிறேன். பள்ளி, கல்லுாரி, பல்கலை வரை படித்ததும் தமிழ்ப் பேராசிரியையாக வேலை பார்த்ததும் சென்னையில் தான்.
உங்களின் தமிழார்வத்திற்கு யாரும் தடை போட்டதுண்டா?
அப்பா உருது பேசுவார் என்றாலும் திருமந்திரம் புத்தகத்தை கொடுத்து என் தமிழ் ஆர்வத்தைத் துாண்டியவர் அவரே. அதேபோல திருக்குரானையும் படிக்கச் சொல்வார். அப்பா உருதுவில் கவிதைகளை சொல்லத் தொடங்கும் போது மனம் நெகிழ்ந்து விடும்.
பிரமிக்க வைத்த தமிழ்ப்புத்தகம்...?
எனது கைப்பையில் எப்போதும் ஒரு புத்தகம் இருக்கும். தினந்தோறும் படித்துக் கொண்டிருப்பேன். சாலையை கடக்கின்ற தாய், தன் குழந்தையை இறுகப்பற்றுவதைப் போல நான் புத்தகங்களை என்னுடன் பிடித்துக் கொள்கிறேன். எந்த புத்தகம் என்று யாரேனும் கேட்டால் பதில் சொல்லத் தெரியாது.
உங்கள் ஆசான்...
கவிதை, நுால், சொல் அது எந்த மதமாக இருக்கட்டும், பெரிய மனிதர்கள் எழுதிய தத்துவ நுாலாகட்டும்... ஒரு மனிதன் எதையோ இந்த உலகிற்கு தந்துவிட துடிக்கிறான். அந்த துடிப்பு அடங்கிய அத்தனை புத்தகங்களும் நான் படிக்கத் தகுந்த புத்தகங்கள் தான். ஒவ்வொரு புத்தகமும் எனக்கு குருநாதர் போல எதையாவது சொல்லித்தருகின்றன.
எந்த மேடை உங்களுக்கான களம் அமைத்து தந்தது
இலக்கிய மேடைகள் தான். பாரதி மன்றம், பாரதிதாசன் மன்றம், கம்பன் கழகங்கள், ஒய்.எம்.சி.ஏ., பட்டிமன்ற அமைப்பு ஆகியவை மேடைகளைத் தந்தன. நுாலகங்கள் எங்களுக்கான மேடை வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன. பள்ளிகளில் உள்ள தமிழ்மன்றங்கள் எங்களை வளர்த்தன.
பட்டிமன்றம், சொற்பொழிவு... எது சுகமான பயணம்... சவாலான பயணம்...
நான் சமையல் தெரிந்தவள். நீங்கள் காய்கறிகளை தந்தால் விதவிதமாய் சுவையாய் சமைத்துத் தருவேன். அது பட்டிமன்றமாக இருந்தாலும் சரி, வழக்காடு மன்றமானாலும் சரி. ஆனால் இலக்கியம் பேசும் போது இலக்கியங்கள் எனக்குள் உயிர்ப்புடன் உலாவுகின்றன. என்னை உயர்த்திக் கொள்வதற்காக எனக்குள் இருக்கும் ரசனையை மேம்படுத்துவதற்காக என்னை செதுக்குவதற்காக இலக்கியம் பேசுகிறேன். அதுவே பட்டிமன்றத்தில் சுயஎழுச்சி பற்றி நான் பேசினால் என் முன்னால் இருப்பவர்கள் உயர்கிறார்கள், மகிழ்கிறார்கள்.
உலகத்தமிழ்ச்சங்க இயக்குநர் பொறுப்பு... எப்படி கிடைத்தது. அதை எப்படி பயன்படுத்த போகிறீர்கள்.
இந்த பணியைத் தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மதுரை மண்ணை மிதித்தால் புண்ணியம் என்பார்கள். மதுரை என்றாலே எனக்குப் பிடித்த விஷயம் மனிதர்கள் தான். அந்த மனிதர்கள் தான் மதுரை மண்ணின் மாண்பை சுமக்கின்றனர்.
மதுரைத்தமிழ் எப்படி இருக்கிறது.
இது அலங்காரம் தான். தமிழின் தாய் மடி இது.
மெல்லத் தமிழ் இனி சாகும்... உண்மையா...
பாரதியின் பாட்டிலேயே இதற்கான விடை இருக்கிறது. 'மெல்லத்தமிழ் இனி சாகும் என்று... அப்பேதை உரை செய்தனன்' என்று பாரதியார் எழுதியுள்ளார். 'இவ்வசை தமிழருக்கு எய்திடலாமோ...' என்று கேட்கிறார். இந்த வசனம் நமக்கு வந்து சேரலாமா என்று கேட்கிறார் பாரதி. இது ஒருபோதும் நம்மை வந்து சேராது. இந்த உலகத்தில் 14 கோடி தமிழர்கள் நிறைந்துள்ளனர். இந்த பூமிப்பந்தில் ஒரு தமிழன் இருக்கின்ற வரைக்கும் கூட மீண்டும் அந்த இனம் உயிர்த்தெழும். தமிழை வெறும் மொழியாக பேசுவதில்லை. அது எங்கள் உயிர்மூச்சு.