ஷர்மிளாதேவியின் 'மனதோடு பேசுங்கள்'
ஷர்மிளாதேவியின் 'மனதோடு பேசுங்கள்'
ஷர்மிளாதேவியின் 'மனதோடு பேசுங்கள்'
ADDED : ஜூன் 07, 2025 10:51 PM

எங்கிருக்கிறது என்று தெரியாத மனசு... உடலை ஆட்டுவித்து நம்மை நிலைகுலையச் செய்து விடும். 2 வயது குழந்தைக்கு கூட மனஅழுத்தம் இருக்கிறது என உளவியல் சார்ந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அலைபேசி ஆதிக்கம், செயற்கை நுண்ணறிவு யுகத்தில் இளைஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் பெரும்பாலானோர் மனதளவில் முதிர்ச்சியற்றவர்களாக உள்ளனர். யாராவது நம்மோடு மனம் விட்டு பேச மாட்டார்களா என்ற ஏக்கம் பலருக்கும் இருக்கும். எனது பேச்சு மனக்காயத்தை ஆற்றும்; துவண்ட மனது மீண்டெழுந்து தலைமைத்துவத்தை நோக்கி வழிநடத்தும் என்கிறார் ஷர்மிளா தேவி பவுன்ராஜ். அவரின் பேச்சுத்துளிகளில் கசிந்த நிதானம் நமக்கும் உத்வேகம் கொடுத்தது.
கல்லுாரியில் முதுநிலை 'மேனேஜ்மென்ட் அன்ட் சிஸ்டம்' படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றேன். பிசினஸ் செய்ய நினைத்தபோது திருமணம், பிள்ளைப்பேறு என தொடர்ந்ததால் தொழில் செய்யும் கனவை தற்காலிகமாக ஒத்தி வைத்தேன். கணவர் பவுன்ராஜ் உடன் இலங்கையில் பிசினஸ் பார்த்துக் கொண்டேன்.
மதுரை வந்த போது எனது கனவை தேட ஆரம்பித்தேன். களிமண் உருவங்கள், கைவினைப்பொருட்களை கொண்டு 2010ம் ஆண்டில் 6 முதல் 12 வயது குழந்தைகளுக்கு தலைமைத்துவ பயிற்சி அளித்தேன். குழந்தைகளுக்கான பயிற்சியுடன் நின்று விடக்கூடாது என்பதால் இங்கிலாந்து பயிற்சியாளர் சூனைட்டிடம் ஒன்றரை ஆண்டு என்.எல்.பி., எனப்படும் 'நியூரோ லிங்கஸ்டிக்ஸ் ப்ராகிராமிங்' 3 நிலை பயிற்சி பெற்றேன். இது மனநிலை சார்ந்த பயிற்சி. இந்த பயிற்சி எனது மனதையும் விரிவுபடுத்தி புது நம்பிக்கை தந்தது.
அடுத்து கார்ப்பரேட் நிறுவன உயர்நிலை அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். பணியாளர்களுக்கு தலைமைத்துவ பயிற்சி, தொழில்முனைவோருக்கு மனநிலை பயிற்சி என பயிற்சியின் தன்மையை விரிவுபடுத்தினேன். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கும் மனநல பயிற்சி அளிக்கிறேன்.
அரசு பள்ளி, கல்லுாரிகளுக்கு எப்போதுமே இலவச பயிற்சி தான். மாதம் ஒருமுறை செல்லும் போது ஒவ்வொரு நபரிடமும் தனியாக பேசி அவர்களை இன்டர்நெட் போதை, கூல் லிப் போதையிலிருந்து மீள்வதற்கு உதவுகிறேன். திருமணமானவர்களுக்கு கவுன்சிலிங் அளிக்கிறேன். சிலர் சிறுவயதில் ஏற்பட்ட மனநல பாதிப்பால் வளர்ந்த நிலையிலும் அதிலிருந்து மீளாமல் இருப்பார்கள். அவர்களுடன் மனதோடு பேசி மன ஒத்திகை (மைண்ட் ரீ ரீடிங்) மூலம் பேச்சால் பக்குவப்படுத்தி காயம்பட்ட காலத்திற்கு அழைத்துச் சென்று அதை சரிசெய்து நிகழ்காலத்திற்கு வர வைக்கிறேன். இம்முறையில் தந்தையை இழந்த இளம்பெண்ணை மீட்டது என்னை நெகிழச் செய்தது.
இந்தப் பிறவியை மற்றவர்களின் மனக்காயத்திற்கு மருந்து அளிக்கும் பிறவியாக பார்க்கிறேன். மனதை சரியாக வைத்துக் கொண்டால் எந்த சூழ்நிலையிலும் சாயாமல் மீண்டு வரலாம்.
இன்ஸ்டாகிராமில் (sharmiladevi121) 'யூ மேட்டர்ஸ்' என்ற வரிசையில் மன அழுத்தம், செயலை தள்ளிப் போடுவது, தாமதமாக துாங்குவதன் விளைவுகள், மனநலம் பற்றி தவறான புரிதல் குறித்து 2 நிமிடங்கள் பேசி வாரம் ஒரு வீடியோ பதிவு செய்கிறேன். மனஅழுத்தம் எந்த வயதினருக்கும் வரலாம். எல்லாவற்றுக்கும் தீர்வு உள்ளது. முயற்சி நம் கையில் தான் உள்ளது என்றார்.
இவரிடம் பேச:99433 58598.