/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாழ்விடம் தொலைத்த சிட்டுக்குருவிகள்! வாழ்விடம் தொலைத்த சிட்டுக்குருவிகள்!
வாழ்விடம் தொலைத்த சிட்டுக்குருவிகள்!
வாழ்விடம் தொலைத்த சிட்டுக்குருவிகள்!
வாழ்விடம் தொலைத்த சிட்டுக்குருவிகள்!
ADDED : மார் 22, 2025 11:10 PM

''சிட்டுக்குருவிக்கு ஏன் தட்டுப்பாடு...? உலக சிட்டுக்குருவி தினத்தன்று கேட்கப்பட்ட கேள்விக்கு, பள்ளிக் குழந்தைகள் துவங்கி பெரியவர்கள் வரை சொன்ன பதில், ''எல்லா பக்கமும் 'மொபைல் போன் டவர்' வச்சுட்டாங்க. அதில் இருந்து வர்ற கதிர்வீச்சு தான், சிட்டுக்குருவியினம் அழிய காரணம்...'' இதுதான் பொதுவான பதிலாக இருந்தது. 'ஆனால் இதுவல்ல உண்மை. இது தவறான புரிதலும் கூட. 'மொபைல்போன் டவர்' கதிர்வீச்சால் பறவைகளுக்கு பாதிப்பு இல்லை. அத்தகைய பாதிப்பு ஏற்படுவதாக, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவும் இல்லை,' என விளக்கமளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர், பறவை ஆர்வலர்கள்.
இரு நாளுக்கு முன் நடந்த உலக சிட்டுக்குருவி தினத்தன்று, திருப்பூர், பத்மாவதிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில், திருப்பூர் இயற்கை கழகம் சார்பில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தான், இந்த கேள்வியும், பதிலும் இடம் பெற்றிருந்தது. மாணவ, மாணவியரிடையே ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
'காடுகளிலும், மரங்களிலும் கூடு கட்டி வாழும் பழக்கம், சிட்டுக் குருவிகளுக்கு இல்லை.
மாறாக, வீடுகளின் கூரை, இடுக்குகளில் தான் கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்யும்; தன் உணவு தேவைக்காக மட்டுமே காடு, மலை, மரங்களை நாடிச் செல்லும். வீடுகள் அனைத்தும் கான்கிரீட் கட்டடங்களாக உருமாறியதன் விளைவு தான், சிட்டுக்குருவியினம் அண்டி வராததற்கு காரணம்' என்ற உண்மையை உணர்ந்த மாணவ, மாணவியர், தங்களின் எண்ணங்களை வண்ண ஓவியங்களாக வெளிப்படுத்தி, பரிசுகளை தட்டிச் சென்றனர்.